ரஜினி மற்றும் நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள படம் ‘ஜெயிலர்’
படத்தின் கதை என்ன?
ரஜினி ஓய்வுபெற்ற ஜெயிலர்,அவரது மகன் வசந்த் ரவி நேர்மையான போலீஸ் அதிகாரி.சிலைக் கடத்தல் கும்பலைப்பிடிக்கத் தீவிரம் காட்டுகிறார். பகை வளர்கிறது. அந்தக் கும்பலால் வசந்த் ரவி கடத்தப்படுகிறார். எதிரிகளைப் பிடிக்கவும்,தன் மகனைக் காப்பாற்றவும் ரஜினி தனி ஆளாகக் களத்தில் இறங்குகிறார் .முடிவு என்ன? என்பதுதான் கதை.ரஜினியின் மாஸ் பிம்பத்தை வைத்துக்கொண்டு
ஒரு பழகிப்போன ரஜினிகாந்த் சூத்திரக் கதையை,
அதிரடி ஆக்சன் மசாலாவாக்கி இந்தப் படத்தை எடுத்துள்ளார் நெல்சன்.
ரஜினி தனது இமேஜ் மூலம் படத்தை நிறைக்கிறார்.
அதிகம் பேசாமல் மாஸான காட்சிகளிலும்
காமெடி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவைக் காட்சிகளிலும் ஒரு தந்தையாக மகனுக்காக உருகும் காட்சிகளிலும் வசீகரிக்கிறார்.அவரது தோற்றமும் நடிப்பும் பொருத்தம்.
கண்டிப்பான மிடுக்கான காவல்துறை அதிகாரியாக வரும் வசந்த் ரவி, முதலில் கவர்ந்தாலும் பிறகு படத்தில் ஆழமான காட்சிகள் அவருக்கு இல்லை.
பிரதான வில்லனாக வரும் விநாயகன் பாத்திரம் நகைச்சுவையா? வில்லத்தனமா என்று சில நேரம் குழம்ப வைக்கிறது. இருந்தாலும் சிரிக்க வைத்தும் பயமுறுத்தியும் அடித்து ஆடி உள்ளார்.
யோகி பாபு வழக்கம் போல உடன் நடிப்பவர்களை சீண்டுவது போல் ரஜினியையும் முதலில் சீண்டுகிறார் .அதை ரசிக்க முடியவில்லை.பிறகு ரஜினியின் மாஸ் ஜோதியில் காணாமல் போய்விடுகிறார்.
சுனில், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி ஆகியோர் இரண்டாம் பாதி காமெடிக்கு உதவுவதாக நினைத்து அலுப்பூட்டுகிறார்கள்.
மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் விரல் விட்டு எண்ணும் படியான காட்சிகளில் வந்தாலும்,படத்தின் மாஸ் மதிப்பை கூட்டுகிறார்கள்.
ரம்யா கிருஷ்ணன், மிர்ணா போன்ற முக்கிய பெண் கதாபாத்திரங்களை மேலும் அழுத்தமாகக் காட்டி இருக்கலாம். இவர்களுடன்
படத்தில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் வருகிறார்கள்.ஜாக்கி ஷெராஃப், மாரிமுத்து, தமன்னா, ஜாபர் சாதிக், கிஷோர், சரவணன், அறந்தாங்கி நிஷா, விடிவி கணேஷ், நாகேந்திர பாபு எனப் பெரிய கூட்டமே உள்ளது.
ரஜினி ஆக்சன் அவதாரம் எடுக்கும் இரண்டாம் பாதியில் கதை ஒரே நேர்க்கோட்டில் செல்லாமல் பிரிகிறது.
திடீர் ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் ரஜினிகாந்த், யோகி பாபுவுடன் இணைந்த காமெடிகள், குடும்பத்திற்காக ரஜினி பதறும் இடங்கள், வில்லன் விநாயகனின் மிரட்டல்கள் என எல்லாமே நன்றாக வந்திருக்கின்றன.
கதை ஆந்திரா ,கர்நாடகா, பீகார், மும்பை, டெல்லி என்று பறக்கிறது.
விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும், ஆர்.நிர்மலின் படத்தொகுப்பும் சண்டைக் காட்சிகளிலும், ரஜினிக்கான மாஸ் காட்சிகளிலும் மிளிர்கின்றன.
அனிருத் இசையில் படத்தில் வரும் மூன்று பாடல்களும் சரியான இடத்தில் வருகின்றன.
பின்னணியிசையாலும் ஒவ்வொரு காட்சிக்கும் பலம் ஏற்றியிருக்கிறார் அனிருத்.
அனுப்பூட்டும் காமெடி காட்சிகள் மத்தியில் தமன்னா தோன்றும் பாடல் காட்சி பெரிய ஆசுவாச அனுபவம் .
இந்தியாவுக்கே தெரிந்த ரஜினி கதாபாத்திரம் ஏன் ஒரு வில்லனிடம் இவ்வளவு போராடுகிறது என்பது லாஜிக் மீறல் தான்.
படத்தில் மீறப்பட்டுள்ள அனைத்து லாஜிக்குகளையும் அனைத்து போதாமைகளையும் ரஜினி என்கிற மேஜிக் சமன் செய்து படத்தை உயர்த்திப் பிடிக்கிறது.
ரஜினியின் பிம்பத்திற்கு இணையாக அனிருத் இசை படத்தைத் தூக்கி நிறுத்துகிறது.
ரஜினி ரசிகர்களை ஜெயிலர் ஏமாற்றாது .