ஜெயகுமார் என்கிற ஜேகே ஓடி ஓடி உழைக்கிறான். நண்பர்களை நாக்கு தள்ள தன் பின்னே ஓடி உழைக்க வைக்கிறான். ரியல் எஸ்டேட் முதல் பொக்கே ஷாப் வரை.புதிது புதிதாக தொழில் தொடங்கி ஜெயிக்கிறான்.
பணத்தை இப்படி துரத்துவது ஏன் என்று குடும்பமும் காதலியும் தவிக்க தன் முன்கதையை காதலியிடம் கூறுகிறான்.ஆரம்பத்தில் ஜெயகுமார் என்கிற ஜேகே வழக்கமான சினிமா இளைஞர்கள் மாதிரி ஜாலி, நண்பர்கள், கூத்து என்றிருக்கிறான்.
ஒருநாள் புத்தாண்டு பார்ட்டிக்கு பைக்கில் ட்ரிப்ள்ஸ்.. செல்கிறான். எழுச்சியில் குடித்துவிட்டு வண்டி ஓட்ட இரவில் லாரி மீது விட்டுவிட விபத்து.
தன்னுடன் வந்த நண்பன் ஒருவன் கோரமரணம். இன்னொருவனுக்கு ப் படுகாயம். ஜேகேக்கு தலையில் அடி..
தலையில் அடிபட்டதால் மூளையில் இரத்தக் கசிவு.. 3 ஆண்டே ஆயுள் எனத்தெரிகிறது.அதற்குள் தன்னால் பாதிக்கப்பட்ட நண்பனின் குடும்பத்துக்கு உதவி, தன் குடும்பத்தையும் பாதுகாத்து,எப்படி தன் 3 ஆண்டு ஆயுளை அர்த்தமுள்ளதாக ஆக்குகிறான் என்பதே ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படம்.
சேரனின் படம் என்றால் அழுத்தமான காட்சிகள் தன்னம்பிக்கை, கிராமத்துக்கு மரியாதை உறவுகளுக்கு உன்னத உயரம், குடும்பப் பாசம், நட்பு போன்றவை தவறாமல் இருக்கும். இந்த முத்திரைகள் இதிலும் உள்ளன.
ஜேகேயாக சர்வானந்த் நடித்துள்ளார்.சரியான தேர்வு,சிறப்பாக நடித்திருக்கிறார். குடும்பத்தை பற்றி யோசிக்கும் போதும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் காட்சிகளிலும் இவரது நடிப்பின் திறமை சிறப்பு. நாயகி நித்யாமேனன் அழகாக வந்து அழுத்தமான முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
உடன் வரும் சந்தானம் கூட அடக்கியே வாசிக்கிறார்.அவரது காமெடி படத்தில் பெரியதாக எடுபடவில்லை என்றே சொல்லலாம். பிரகாஷ் ராஜ், ஜெயப்பிரகாஷ், ஆகியோர் வழக்கம்போல் அவர்களுக்கே உரிய பாணியில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.ஜி.வி.பிரகாஷின் இசை படத்திற்கு கூடுதல் பலம். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சித்தார்த்தின் ஒளிப்பதிவு அருமை.
படத்தில் நடுத்தர இளைஞனின் வாழ்க்கை போராட்டத்தை அற்புதமாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். மனதைத் தொடும் காட்சிகள் நிறையவே உண்டு.சின்னச் சின்ன பலவீனங்களை குறைகளை புறந்தள்ளி விட்டுப்பார்த்தால் நிச்சயம் சமூக சிந்தனையுள்ள படம்தான். சேரனுக்குப் பாராட்டுகள்.
பெற்றோர் மட்டுமல்ல இளைஞர்களும் பார்க்க வேண்டிய படம். இது படமல்ல பாடம்.
ஆபாசக் கலப்பு இல்லை. தைரியமாகப் பார்க்கலாம்.