‘ஜோஷ்வா’ இமைபோல் காக்க : விமர்சனம்

வருண், ராஹே, கிருஷ்ணா, மன்சூர் அலிகான், கிட்டி, விசித்ரா, திவ்யதர்ஷினி நடித்துள்ளனர்.

கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்கியுள்ளார்.எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார் கார்த்திக் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு ஆண்டனி. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் நடிகர் வருண் ஜோஷ்வா ஆக டைட்டில் ரோல் ஏற்றுள்ளார் . குந்தவி பாத்திரத்தில் ராஹே நடித்துள்ளார். கோட்டி பாத்திரத்தில் கிருஷ்ணா வருகிறார் .தாதா மாஸ்டராக மன்சூர் அலிகான் வருகிறார். அவரது மனைவியாக விசித்ரா இருக்கிறார். மாதவி பாத்திரத்தில் திவ்யதர்ஷினி நடித்துள்ளார்.

ஜோஷ்வா ஒரு ஹைடெக் கொலையாளி.மிகவும் திறமையானவன். அவன் குந்தவி சிதம்பரத்தைக் காதலிப்பதில் இருந்து கதை தொடங்குகிறது .குந்தவி ஒரு நவீன இளைஞி.அவளுக்கு பெரிய பெரிய கனவுகள் உண்டு. திறமை மிகுந்தவள்.படிப்பு முடித்து நியூயார்க்கில் பெரிய வழக்கறிஞராக விரும்புகிறாள்.
எதிர்காலம் பற்றிய பெரிய கனவில் இருக்கும் அவளும் அடுத்த நொடியே ஆபத்து நிறைந்ததாக இருக்கும் அவனும் காதலில் விழுகிறார்கள்.

அவனது பின்புலம் அறிந்து அவனை விட்டு விலகுகிறாள் குந்தவி .அவளைச் சந்தித்த பின் அனைத்து குற்றச் செயல்களையும் விட்டு விடுவதாகக் கூறுகிறான் அவன்.

ஜோஷ்வா ஒரு உயரடுக்கு மெய்க்காப்பாளராக மாறுகிறான்.ஆனாலும் முன்பு அவன் பல கொலைகள் செய்து விதைத்த விதைகள் முளைத்து மரமாக வந்து கொண்டே இருக்கின்றன. அவனைச் சுற்றி ஆபத்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது.காதலிக்காக மாற முடிவெடுக்கிறான்.ஆனால் அவனே எதிர்பார்க்காத வகையில் அவளது உயிருக்கு விலை வைத்து ஒரு கொலைக் கும்பல் அவளைத் துரத்துகிறது. ஜோஷ்வா அப்போது தன் உயிரைப் பணயமாக்கி அவளை ‘இமைபோல் காக்க ‘முடிவெடுக்கிறான்.அவளைக் காப்பாற்ற முயற்சி செய்கிறான் .தங்கள் திட்டத்திற்கு இடையூறாக வந்து விட்டான் என்று அவனை ஒரு கும்பல் துரத்துகிறது.அவளைத் துரத்துபவர்கள் யார்?அதன் பின்னணி என்ன? காதலர்கள் இணைந்தார்களா? என்பது தான் மீதிக்கதை.

பணத்துக்குக் கொலை செய்பவர்கள், போதை மருந்து கடத்துபவர்கள், வெளிநாட்டு குற்றவாளிகள் , உயிர்ப்புள்ள காதல் என்று ஒரு வணிக சினிமாவிற்கான, பரபரப்பான த்ரில்லருக்கான அனைத்து அம்சங்களையும் இணைத்து தனது பாணியில் பரபரப்பான க்ரைம் த்ரில்லராகக் கொடுத்துள்ளார் கௌதம் மேனன்.

படத்தில் கதாநாயகனாக வரும் வருண் இதுவரை ஏற்ற பாத்திரங்களில் இருந்து மாறுபட்டு எதிர்மறை நிழல் விழுந்தாலும் ஜோஷ்வாவாக வந்து இந்தப் படத்தில் நல்ல நடிப்பை வழங்கி உள்ளார்.ஆஜானு பாகுவான தோற்றமும் நிறமும் உடல் மொழியும் முகபாவனைகளும் ஒரு தேர்ந்த நடிகருக்குரிய மதிப்பெண்களைப் பெற்றுத் தருகின்றன.அவரது திரைத் தோற்றம் திருப்தி அளிக்கிறது.

நாயகி ராஹே பரபரப்பா இந்த திரில்லர் படத்தில் பாதிப்பகுதி பங்கேற்றுக் கொள்கிறார்.வழக்கமாக ஆக்சன் ,த்ரில்லர் திரைப்படங்களில் கதாநாயகிகள் ஓரங்கட்டப்படுவதுண்டு. இதில் படத்தின் பாதி அளவிற்கு தனது தோற்றத்தையும் நடிப்பையும் கொடுத்து ரசிகர்களுக்கு நிறைவளிக்கிறார்.

நடிகர் கிருஷ்ணாவும் ஒரு தாதாவின் கையாளாக வருகிறார் .அவருக்கும் படத்தில் உரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத வரவாக நடிகர் கிட்டி ஏற்ற சிதம்பரம் பாத்திரம் வருகிறது.டிடி என்கிற திவ்யதர்ஷினிக்கு இது புலனாய்வு செய்யும் நல்லதொரு பாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. .சில காட்சிகளில் வந்தாலும் மன்சூர் அலிகானும் விசித்திராவும் மனதில் பதிகிறார்கள்.

படத்தின் பெயர் ஜோஷ்வா இமை போல் காக்க. ஆனால் இமைகள் நொடிக்காது படத்தைப் பார்க்க வேண்டும். இமைகள் மூடினால் கதை புரியாத அளவிற்கு அவ்வளவு விறுவிறுப்பான விரைவான காட்சிகள். கண் இமைக்காமல் படத்தைப் பார்க்க வேண்டும்.அந்த அளவிற்கு அவ்வளவு வேகமாகப் படம் செல்கிறது.
படம்.படம் ஓடும் 129.53 நிமிடங்களும் பரபரப்பு பராமரிக்கப்பட்டுள்ளது.

திரை மறைவு வேலைகளையும் நிழல் உலகத்தைப் பற்றியும் பேசுவதால் அது சார்ந்த ஒளி அமைப்பில் காட்சிகளை ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் எஸ் ஆர் கதிர். அவரது ஒளிப்பதிவு படத்திற்கு நிச்சயமாக ஒரு பலம்தான்.

இசையமைத்திருக்கும் கார்த்திக் இழையோடும் காதல் பாடலில் கவர்ந்தது மட்டுமல்ல பின்னணி இசையிலும் தன்னால் முடிந்த அளவிற்கு விறுவிறுப்பைக் கூட்டி உள்ளார்.
படத்தில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் சிலிர்ப் பூட்டுபவை.

சின்ன சின்ன வசனங்கள் கூட படத்தில் செறிவுள்ளதாக மாறி உள்ளன. கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் பேசும் ”நான் பார்த்துக்கிறேன்” என்கிற ஒரு வசனம் பல பரிமாணம் காட்டி நிற்கிறது.

மொத்தத்தில் இந்த ஜோஷ்வா ஸ்டைலிஷ் ஆன ஒரு க்ரைம் திரில்லர். த்ரில்லர் ரசிகர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும் .