கிழக்கு பதிப்பக வெளியீடாக ’டிஜிட்டல் பணம் ‘ நூல் வந்திருக்கிறது. இந்த ’டிஜிட்டல் பணம்’ புத்தகத்தின் தலைப்பும் உள்ளடக்கமும் சில பொதுவான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பும். பல நண்பர்கள் கருத்துக்கள் மூலம் இதை அறியலாம். இந்தப் புத்தகம் தொடர்பாக எழக்கூடிய கேள்விகளுக்கான விளக்கமாக அதை எழுதியுளள சைபர் சிமமன் எனன கூறுகிறார்?
இந்த புத்தகம் ரொக்கமில்லா சமூகத்திற்கு ஆதாரவானதா?
ஆம்.
· இந்தியா போன்ற நாடுகளில் ரொக்கமில்லா சமூகம் எப்படி சாத்தியம்?
இதற்கான பதில் மொபைல் பணம் எனும் கருத்தாக்கத்தில் உள்ளது. அதை மையமாகக் கொண்ட முயற்சிகளைத் தான் இந்தப் புத்தகம் பேசுகிறது.
· கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு எல்லோரிடமும் இல்லையே?
கார்டு தேவையில்லை. மொபைல் போதுமானது என்பதே இந்த புத்தகத்தின் அடிநாதம்.
· ஸ்மார்ட்போனும் எல்லோரிடமும் இல்லையே?
தேவையில்லை. சாதாரண போனே போதும்.
· எப்படி ?
கென்யாவின் மொபைல் பணமான எம்-பெசா இதற்கான உதாரணம்.
· இந்தியாவில் நிலவும் யதார்த்தம் என்ன?
இந்தியாவிலும் எகோ மணி, பீம் மணி போன்ற முன்னோடி உதாரணங்கள் உள்ளன. இந்தியா மட்டும் அல்ல ஆப்கானிஸ்தான் , சோமாலிலாந்தில் முன்னோடி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ரொக்கமில்லா பரிவர்த்தனை ஏழைகளுக்கு பாதகமாக அமையாதா?
பரவலாகக் கருதப்படுவதற்கு மாறாக ரொக்கமில்லாப் பரிவர்த்தனை ஏழைகளுக்கு உதவக்கூடியது. மொபைல் பணம் என்பது ஏழைகளுக்கான வங்கிச்சேவைக்கான அடிப்படையாகப் பார்க்கபடுகிறது.
· வங்கிச் சேவையை இன்னும் பரவலாக்கவில்லையே?
வங்கிச்சேவையை ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்குக் கொண்டு செல்ல செல்போன் உதவும். செல்போன் மாற்றத்திற்கான சாதனமாகப் பார்க்கப்படுகிறது. மூன்றாம் உலக நாடுகளில் இதற்கான முன்னோடி முயற்சிகள் இருக்கின்றன.
· இந்தப் புத்தகத்திற்கான நியாயம் என்ன?
உலகில் எல்லாம் டிஜிட்டல்மயமாகி வருகிறது. பணமும் டிஜிட்டல் மயமாவது தொழில்நுட்ப நோக்கில் தவிர்க்க இயலாதது. அதற்கு நாம் தயாராக வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் இந்த முயற்சி துவங்கிவிட்டது. நாமும் பின் தங்கியிருக்க முடியாது. அது மட்டும் அல்ல, பண பரிவர்த்தனையை டிஜிட்டல் மயமாக்கத் தொழில்நுட்பம் சார்ந்த பல முன்னோடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமும் அதில் இணைவதே சரி . இல்லை எனிம் தொழில்புரட்சி பேருந்தைத் தவறவிட்டது போல டிஜிட்டல் பண பேருந்தைத் தவறவிட்டுவிட்டுப் பின்னால் ஓட வேண்டியிருக்கும்.
· பணமதிப்பு நீக்க நடவடிக்கை பற்றி?
இந்த புத்தகம் அது பற்றி பேசவில்லை.
· ஏன்?
இதன் மைய நோக்கம் அதுவல்ல. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது அதிக கவனத்தையும், சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்திய ரொக்கமில்லாப் பரிவர்த்தனையின் சார்பு அம்சங்களை தொழில்நுட்ப நோக்கில் இந்த புத்தகம் பேசுகிறது.
· பண மதிப்பு நீக்க நடவடிக்கை சரியானதா?
தெரியாது. ஆனால் அது மிக மோசமாக செயல்படுத்தப்பட்டது.
· டிஜிட்டல் பணத்தில் வேறு என்ன சாதகம் உண்டு?
டிஜிட்டல் பணம் டிஜிட்டல் கடன், அனைவருக்குமான வங்கி- நிதிச்சேவைகள் பற்றி எல்லாம் சிந்திக்க வைக்கிறது. நடைமுறையிலும் செயல்பட வைக்கிறது.
· கறுப்புப்பணம் ஒழியுமா?
ஓரளவு உதவலாம். ஆனால் கறுப்புப் பணம் வேறு பிரச்சனை.
· டிஜிட்டல் பணம் பாதுகாப்பானதா?
பாதுகாப்பாக ஆக்குவதற்கான எல்லா வழிமுறைகளும் உள்ளன. ஆனால் சைபர் தாக்குதல், இணைய களவு உள்ளிட்ட ஆபத்துகள் உள்ளன. அவற்றை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் இது டிஜிட்டல் யுகத்தின் பிரச்சனை. டிஜிட்டல் பணத்திற்கு மட்டும் உரியது அல்ல. டிஜிட்டல் பணம் இல்லாவிட்டாலும் கூட இத்தகைய ஆபத்துகள் உண்டு.
· இந்த புத்தகத்தை படித்தால் டிஜிட்டல் பணத்திற்கு மாற முடியுமா?
இல்லை. டிஜிட்டல் பணம் தொடர்பாக உலகில், குறிப்பாக தொழில்நுட்ப உலகில் நடைபெறும் முன்னோடி முயற்சிகளை தெரிந்து கொண்டு நீங்களாக அதை நோக்கி முன்னேறலாம்.
-சைபர்சிம்மன்
டிஜிட்டல் பணம்
கிழக்கு பதிப்பக வெளியீடு
விலை;ரூ150.