‘டியூட் ‘ திரைப்பட விமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் , மமிதா பைஜு, நேகா ஷெட்டி,சரத்குமார், ஹிரித்து ஹாருண் ,ரோகினி, வினோதினி வைத்தியநாதன், சத்யா,டிராவிட் செல்வம் நடித்துள்ளனர். கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பிரதீப் ரங்கநாதன் தனது முன்னாள் காதலியின் திருமண வீட்டுக்குள் புகுந்து,தாலி கட்டித் தம்பதியாய் நிற்கும் மணப்பெண்ணிடம் ‘என்னை ஏன் பிடிக்காது என்று சொன்னாய்? அதற்கான காரணத்தைச் சொல்’ என்று நேரில் கேட்கும் போது மணப்பெண்ணின் கழுத்தில் இருந்த தாலிக்கயிற்றைத் தொட்டு இழுக்க அது கையோடு கழன்று வரவே, ‘புதுப் பெண்ணின் தாலியை அறுத்து விட்டான்’ என்று திருமண வீட்டில் களேபரமாகி அவரைப் போட்டுப் புரட்டி எடுக்கிறார்கள். எகிறிக் குதித்து, தாவிப் பறந்து தப்பித்து ஓடுகிறார்.இப்படி ஒரு ரணகளத்தில் தொடங்குகிறது படம். பிரதீப்பின் முதல் காதல் இப்படித் தோல்வியில் முடிகிறது. பிரதீப்பின் தாய் மாமா தான் பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் சரத்குமார். அவரது பெண்ணான மமிதா பைஜு பிரதீப்பை விரும்புகிறார். அதை அவரிடம் கூறும் போது நம்மிடையே இருப்பது நட்புதான் காதல் இல்லை என்று புறக்கணிக்கிறார் .மமிதா  மனமுடைந்து போகிறார்.ஒரு வழியாக அதில் இருந்து மீள்கிறார்.ஒரு விபத்துக்குப் பின் பிரதீப், தன் மனதில் மமிதா நிறைந்துள்ளதை அறிந்து கொள்கிறார்.இதை அவரிடம் சொல்லலாம் என்று சென்றால், இந்தக் காலகட்டத்தில் மமிதாவிற்கு  ஹிரித்து ஹாரூண் மீது காதல் ஏற்பட்டு விடுகிறது.இதைத் தந்தை சரத்குமாருக்குத் தெரியாமல் மறைக்கிறார்.

மமிதாவிடம் தனது காதலை வெளிப்படுத்தலாம் என்று பிரதீப் நினைக்கிறார். இதைக் கூற மமிதா அருகில் நெருங்கும் போது அவர் தன்னுடைய காதலைப் பிரதிப்பிடம் கூறிச் சேர்த்து வைக்குமாறு கெஞ்சுகிறார். மாமா சரத்குமாரிடம், தான் மமிதாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறவே திருமண ஏற்பாடுகளும் நடக்கின்றன. திருமணமும் ஆகி விடுகிறது.திருமணத்தன்று மமிதா தன் காதலருடன் வெளியே ஓடுவதாகத் திட்டம் அதற்கு பிரதீப்பும் உதவ வேண்டும். பாதுகாப்புகள் பலமாக இருக்கவே அது முடியவில்லை.சில நாட்களில் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக இன்னொரு திட்டம். பாஸ்போர்ட் விசாவெல்லாம் தயாரானால், மமிதா கர்ப்பமாக இருப்பது தெரிகிறது.உடல் பலவீனமாக இருப்பதால் கருக்கலைப்பும் செய்ய முடியாது .ஒரு வழியாகக் குழந்தை பிறக்கிறது. குழந்தையைக் குடும்பமே கொண்டாடி மகிழ்கிறது. இந்த நிலையில் அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்களா? சரத்குமாருக்குப் புதிய காதல் கதை தெரிந்ததா ?பிரதீப் ரங்கநாதனின் நிலை என்ன? போன்ற பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளுக்கு விடை அளிப்பதே  139.41 நிமிடங்கள் கொண்ட ‘டியூட்’ படத்தின் மீதிக் கதை.

இந்தப் படத்தில் அகன் என்கிற பாத்திரத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார்.எப்போதும் கலகலப்பாக இருக்கும் அவர் படத்தில் காதல் கைகூடாமல் வருத்தமும் ஏமாற்றமும் அவமானமும் என மன அழுத்தம் கொண்ட பாத்திரத்தில் நடிப்பில் பல்வேறு வர்ண ஜாலங்களைக் காட்டியுள்ளார்.
மமிதா பைஜூ வழக்கமான வணிகப்பட கதாநாயகிகளைப் போல் இல்லாமல் படத்தின் பாதி எடையைத் தூக்கிச் சுமந்துள்ளார்.அந்த அளவிற்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.கதாநாயகன் மாமாவாக வரும் சரத்குமார், தனது தோற்றத்தின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு மட்டுமல்ல படத்திற்கும் பெரும் பலமாக அமைந்துள்ளார்.

மமிதாவின் காதலனாக பயந்தாங்கொள்ளி போல் வந்து காரியத்தைச் சாதிக்கும் ஹிரித்து ஹாரூண் , அந்தப் பாத்திரத்திற்குப் பொருந்துகிறார்.

நாயகனின் அம்மாவாக வரும் ரோகிணி ஒரு வீராப்பான தாயைக் கண்முன் நிறுத்துகிறார்.பிரதீப் நண்பனாக வரும் டிராவிட் செல்வம் கலகலப்பூட்ட மட்டும் அல்ல கண்கலங்கும் காட்சிகளிலும் நடித்துள்ளார்.
பிரதீப்பின் முன்னாள் காதலியாக வரும் நேகா ஷெட்டி,அவரது கணவனாக வரும் சத்தியா,கர்நாடக அமைச்சராக வரும் கருடா ராம் இப்ப ஏகப்பட்ட பேர் வருகிறார்கள்,தங்கள் இருப்பை மனதில் பதிய வைக்கிறார்கள்.

படம் முழுக்க இளமை கொடிகட்டி பறக்கிறது கலர்ஃபுல்லான காட்சிகள் என்று திரையை வண்ணங்களால் நிறைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி .
ஆங்காங்கே மாண்டேஜ் போல் ஒலிக்கும் பாடல்கள் கதாபாத்திரங்களின் உணர்வுகளைக் கடத்துகின்றன. பாடல்களிலும் பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியுள்ளார் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்.

படத்தில் முடிச்சு மேல் முடிச்சு போட்டுக் கொண்டே செல்லும் திரைக்கதையில் ஒவ்வொன்றாக முடிச்சுகள் அவிழ அவிழ, புதுப்புது முடிச்சுகள் விழுகின்றன. இப்படித் திரைக்கதையில் இயக்குநர் அமைத்துள்ள சுவாரஸ்யப் பின்னல்கள் ரசிக்க வைக்கின்றன.

ஒரு காதல் கதையை இருவருக்கும் இடையில் நிகழும் சின்ன தகவல் தொடர்புப் பிழையை விரித்தால் எப்படிப்பட்ட உணர்ச்சிகள் கொண்ட கதையாக அதை மாற்ற முடியும் என்பதற்கு இந்த ‘டியூட்’ படம் ஒரு சாட்சி.

போகிற போக்கில் சமகால சமுதாயத்தின் காதல் பற்றிய அர்த்தங்களையும் நட்புக்கும் காதலுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் சின்ன சின்ன வசனங்கள் மூலம் கூறியுள்ளார் இயக்குநர்.

நட்பு, காதல்,பாசம்,தாலி, குழந்தை, தாய்மை, குடும்பம், திருமணம் பற்றிச் சமகால சமுதாயம், வருங்கால சமுதாயம் என்ன மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது என்பனவற்றைக் கூறும் காட்சிகளும் உள்ளன.
ஒரு சுவாரசியமான திருவிழா காலக் கொண்டாட்ட அனுபவத்தைத் தரும் படமாக ‘டியூட்’ மாறி உள்ளது.
படம் பார்க்க வருபவர்களுக்கு நிச்சயமாகத் திருப்தியான கலகலப்பான திரை அனுபவத்தை  ‘டியூட்’ தரும் .

பிரதீப் ரங்கநாதனுக்கு ஹாட்ரிக் வெற்றிக்கு உத்தரவாதம் தருகிறது இந்தப் படம்.