அறிமுக இயக்குநர் இந்திரா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ’டியூப்லைட்’ .இப்படத்தை ஆஸ்ட்ரிச் மீடியா புரொடக்ஷன் சார்பில் ரவி நாராயணன் தயாரித்திருக்கிறார்.
சாலை விபத்தில் பாதிக்கப்படும் இந்திராவுக்கு மூளையில் ஒருவித பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் எந்தச் சத்தமாக இருந்தாலும், 5 நொடிகளுக்கு பிறகே அவருக்கு கேட்கும். அதாவது ஒரு இடத்தில் பட்டாசு வெடிக்கிறது என்றால், அந்த சத்தம் அவருக்கு உடனே கேட்காது, பட்டாசு வெடித்து முடிந்த பிறகே வெடிக்கும் சத்தம் அவரது காதில் கேட்கும். பாம் வெடித்தால் கூட அப்படித்தான்.இப்படி மற்றவர்கள் பேசுவது உள்ளிட்ட எந்த சத்தமாக இருந்தாலும், அவருக்கு சில நொடிகள் கழித்தே கேட்கும் ; பிறகே உணர்வை வெளிப்படுத்த முடியும்.
இப்படிப்பட்ட வினோதமான பாதிப்போடு வாழும் நாயகனின் பிரச்சினையை சரி செய்யும் முயற்சியில் டாக்டரான பாண்டியராஜன் ஈடுபட, அதே சமயம் தனது குறைபாட்டால் காதலையும், காதலியையும் இழக்கும் நாயகன் , தனது இக்குறைபாட்டிலிருந்து குணமடைந்தாரா, மீண்டும் காதலியுடன் இணைந்தாரா என்பது தான் ‘டியூப்லைட்’ படத்தின் கதை.
நாயகனாக நடித்து, படத்தை இயக்கவும் செய்துள்ள இந்திரா, படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார். இதுவரை நாம் பார்த்த காமெடி படங்களில் இருந்து வித்தியாசப்படும் விதத்தில், புது யுக்தி இப்படத்தில் கையாளப்பட்டுள்ளது. அதாவது பேசி காமெடி செய்யாமல், உடல் அசைவுகள் மூலம் நாயகன் இந்திரா காமெடி செய்திருக்கிறார்.அதை சீரியசாக செய்திருந்தால் அனுதாபமாக மாறியிருக்கும். தவற விட்டுவிட்டார். நாயகி தியா தோற்றத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் அழகு .
இயக்குநராக பெரிதாக இந்திரா பிரகாசிக்கவில்லை என்றாலும், நடிகராகவும், இசையமைப்பாளராகவும் அசத்தியிருக்கிறார். பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதத்தில் உள்ளன. அதிலும் படத்தின் ஆரம்பத்தில் வரும் அந்த ஜிகினா பாடல் அசத்தல்.
எந்த சத்தமாக இருந்தாலும் 5 நொடிக்கு பிறகே கேட்கும் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு இயக்குநர் இந்திரா அமைத்த திரைக்கதையே புதுமை. ஏதாவது ஆங்கிலப்படத்தின் பாதிப்பில்லாமல் எடுக்கப்பட்டிருந்தால் நிச்சயம் பாராட்டுக்குரியவரே.ஆரம்பத்தில் வரும் பிளாக்மெயில் காட்சிகள் நாயகனின் இமேஜை கெடுத்துவிட்டதே. அவர்மீது பரிதாபம் வராமல் செய்து விடுகிறதே.வேறுவகையில் யோசித்திருக்கலாம்.
நாயகனாக மட்டுமின்றி, முதல் படத்திலேயே நல்ல காமெடி நடிகராகவும் பிரகாசித்துள்ள இந்திரா படத்தின் கருவை வித்தியாசமாக யோசித்துள்ளார்தான். அதை படமாக்கிய விதத்தில் மேலும் சோபித்திருக்கலாம். ஆனாலும் தன் கன்னி முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.