‘டிராகன்’ திரைப்பட விமர்சனம்

பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன் ,கயாது லோஹார், வி ஜே சித்து, ஹர்ஷத் கான், கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், ஜார்ஜ் மரியான்,இந்துமதி, தேனப்பன் நடித்துள்ளார்கள். அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார், நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.
பிரதீப் ஈ .ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார்.தயாரிப்பு ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட்.

‘ஓ மை கடவுளே’ இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவுக்கும் ‘லவ் டுடே’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பிரதீப் ரங்கநாதனுக்கும் இது இரண்டாவது படம்.

சரி படத்தின் கதை என்ன?

வேலூரில் உள்ள நல்ல பொறியியல் கல்லூரியில் புதிய மாணவர்களுக்கு அறிமுக கூட்டம் நடக்கிறது.அங்கே அவர்களிடம் பேசும் முதல்வர் மிஷ்கின், அவர்களிடம் பிரதீப் ரங்கநாதனின் படத்தைப் போட்டு ஒரு மாணவன் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு இவன்தான் உதாரணம் என்று என்று பிரதீப்பைக் காட்டி அறிவுரை கூறுகிறார்.

பிளஸ் டூ வில் டாப் மார்க் வாங்கிய ஒரு மாணவன் கல்லூரி சென்று எப்படி தலைகீழாக படு மோசமாக மாறினான் ? என்கிற பாதையில்,கதை விரிகிறது.

அந்தப் பொறியியல் கல்லூரியில் .ஒரு டான் போல வலம் வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அவரை எல்லோரும் டிராகன் என்கிறார்கள்.படிப்பில் நாட்டமில்லை, அவருக்கு 48 அரியர்ஸ் விழுகிற அளவுக்கு பொறுப்பற்றுத் திரிகிறார்.கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு அதேபோல் சுற்றும் அவருக்கு அவருடைய காதலும் கைவிட்டுப் போகிறது.
ஒரு கட்டத்தில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார். ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் செல்கிறார் .அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறுகிறார். ஒரு கட்டத்தில் பெரிய குடும்பத்திற்கு மருமகன் ஆகிற வாய்ப்பு..ஒருநாள் பிரதீப்பை மீண்டும் சந்திக்கும் கல்லூரி முதல்வர் மிஷ்கின் அவரை விடுபட்ட படிப்பைத் தொடர வலியுறுத்துகிறார் .அதே போல் அவரும் முயற்சி செய்கிறார். இப்படிப்பட்ட சூழலில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி செல்கிறார் பிரதீப். அங்கே தவறிய பேப்பர்களை முடித்தாரா? தனது வேலையைக் காப்பாற்றிக் கொண்டாரா? விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்தாரா? என்று பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்வது தான் மீதிக்கதை.

பிரதீப் ரங்கநாதனுக்கு இதில் கலகலப்பான வேடம் .அதைக் குறை சொல்ல முடியாத அளவிற்கு ஏற்று நடித்து ஜமாய்த்துள்ளார்.தனுஷை போல நடிக்கிறார் என்கிற விமர்சனத்தை இதில் அவர் எதிர்கொண்டு அதிலிருந்து விலகி தனித்து நடிப்பில் தெரிகிறார். கல்லூரியில் அவர் ஒரு டான் போல உலாவரும் காட்சிகள் ரகளை என்றால் ,காதல், சோகம், தோல்வி, போன்று பல்வேறு நடிப்புத் தருணங்களில் விதவிதமான தனது நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.ஒரு நாயகனாக படத்தைத் தனது தோளில் சுமந்துள்ளார் நம்பிக்கையுடன்.

படத்தில் இரண்டு நாயகிகள். அதில் ஒருவர் அறிமுக நாயகி கயாது லோஹார் . அவர் தோற்றத்தாலும் நடிப்பாலும் கவருகிறார் .பல காட்சிகளில் அவரது இளமைக் கொடி பறக்கிறது.நாயகனின் கல்லூரிக் கால காதலியாக வரும் அனுபமா பரமேஸ்வரனின் பாத்திரமும் கவனம் ஈர்க்கிறது.அவரது பாத்திரத்திற்கு இரண்டாவது பாதியில் அழுத்தம் கூடியுள்ளது.காதல் பிரிவுக் காட்சிகளில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கல்லூரி முதல்வராக மிஷ்கின் வருகிறார் . அவரும் அனாயாசமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.அவருக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள், பேசுகிற வசனங்கள் காட்சி அழுத்தம் கொண்டவை.

சினேகா, இவானா சில காட்சிகளில் வந்தாலும் கவனம் பெறுகிறார்கள் . டிஜே சித்து, ஹர்ஷத் உள்ளிட்டோர் டைமிங் நகைச்சுவையில் ரசிக்க வைக்கிறார்கள். கே.எஸ். ரவிக்குமார்,  கௌதம் வாசுதேவ் மேனன், ஜார்ஜ் மரியான்,இந்துமதி, தேனப்பன்போன்றோரும் நடிப்பில் குறை வைக்கவில்லை.

நிகேத் பொம்மி ஒளிப்பதிவும் லியோன் ஜேம்ஸ் இசையும் படத்துக்குப் பெரிதும் பலமாக அமைந்துள்ளன .பாடல்களும் துள்ளல் இசையில் ஆட்டம் போட வைக்கின்றன. சில காட்சிகளில் தென்படும் பலவீனங்களைத் தவிர மற்றபடி பரபரப்பைக் கடைசி வரை பராமரித்துள்ளார்கள். அந்த அளவிற்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

நேர்மை இல்லாத எந்த செயலும் மன நிறைவு தராது. நேர்மையான வாழ்க்கையே நிறைவு தரும் என்ற மையக்கருத்தை எடுத்துக்கொண்டு இளைஞர்களுக்கு ஏற்ற மாதிரியான ஒரு கதையை அமைத்துக் கொண்டு காதல் நகைச்சுவை போன்ற மசாலாக்களை கலந்து விறுவிறுப்பான திரைக்கதையுடன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.

நகைச்சுவை காட்சிகளிலும் உணர்ச்சிகரமான காட்சிகளிலும் அர்த்தமுள்ள திரைக்கதை அமைத்துள்ளார்.கல்வி பற்றிப் படத்தில் கூறப்பட்டுள்ள செய்தியும் திணிப்பாக இல்லாமல் இயல்பாக உள்ளது.

மொத்தத்தில் ‘டிராகன்’ திருப்தி தரும் முழு நீள வணிகரீதியிலான கலகலப்பான திரைப்பட அனுபவமாக இருக்கிறது.