டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகம் திறப்பு விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்றனர்.
சென்னை கே.கே.நகர், முனுசாமி சாலையில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸின் புதிய வளாகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தகைசால் தமிழர், தோழர் ஆர் நல்லகண்ணு அவர்கள் தலைமையில், பத்மபூஷண் கவிப்பேரரசு வைரமுத்து ஆகஸ்ட் 12 அன்று திறந்து வைத்தார்.
இவ்விழாவிற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வருகை தந்தது பெரும் ஊக்கமாக அமைந்தது.மிக சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பலதரப்பட்ட எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
விழா துவங்குவதற்கு முன்பு நல்லகண்ணு அவர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், தான் தினமணி பத்திரிகையின் முதல் ஆசிரியர் டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் பேரன் என்ற தகவலை அவரிடம் தெரிவித்தார்.

தமது பேச்சில் இதை பற்றி குறிப்பிட்ட நல்லகண்ணு, சுதந்திர போராட்ட வீரரும் மாபெரும் பத்திரிகையாளருமான டி.எஸ்.சொக்கலிங்கத்தின் வம்சாவளியை சேர்ந்தவரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
வாசிப்பு சார்ந்த முன்னெடுப்பை டிஸ்கவரி புக் பேலஸ் துவங்கியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று வைரமுத்து கூறினார்.
உலகளவில் ஜப்பான், இங்கிலாந்து, சீனாவை விட இந்தியர்கள் ஒரு வாரத்தில் அதிக நேரம் வாசிப்பு பழக்கம் கொண்டவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வளாகத்தின் முதல் தளத்தில் 1500 சதுர அடியில், 80 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட ஓவியக் கூடத்தை எழுத்தாளர் சி மோகன் தலைமையில் மூத்த ஓவியர் சிற்பி முருகேசன் அவர்களும், ஓவியர் விஸ்வம் அவர்களும் இணைந்து திறந்து வைத்தனர்.
இத்துடன், 30 பேர் வரை அமரக்கூடிய திறந்தவெளி அரங்கம் ஒன்றும் உள்ளது. இந்த வளாகத்தை பார்த்த அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.
தொடர்ந்து தமிழ் சூழலில் வாசிப்பு சார்ந்து முன்னெடுப்புகளை டிஸ்கவரி புக் பேலஸ் எடுக்கும் என்று அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர். வாசகர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என்றும் அவர்கள் தெரிவித்தனர்.