அதர்வா ,நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், சேத்தன், ரித்விகா நடித்துள்ளனர்.நெல்சன் வெங்கடேசன் எழுதி இயக்கியுள்ளார். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்திய பிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், சாஹி சிவா , பிரவீன் சைவி, அனல் ஆகாஷ் இசையமைத்துள்ளனர்.பின்னணி இசை ஜிப்ரான் . படத்தொகுப்பு சாபு ஜோசப், ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.
சேத்தனுக்கு இரண்டு பிள்ளைகள் .அவர்களில் ஒருவர் அதர்வா . அவர் காதல் தோல்வியால் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி மீளமுடியாமல் இருக்கிறார்.”நீ என் பிள்ளையே இல்லை. செத்துப் போ ‘என்று அப்பா சொல்கிற அளவுக்கு தொந்தரவாக இருக்கிறார்.அதிலிருந்து மீள அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு. ஒரு வழியாக மீண்டு வருகிறார்.அவருக்கு ஒரு பெண் பார்க்கிறார்கள் அவர்தான் நிமிஷா சஜயன். அவர் மன ரீதியாக மிகை நடத்தை கொண்ட ஒருவராக இருக்கிறார். அப்படி ஒரு பிரச்சினை உள்ளவர். அதனால் அனைவரும் அவரை மனநிலை பாதிக்கப்பட்ட லூசு என்கிறார்கள். ஆனாலும் அதர்வா ஏற்றுக் கொண்டு திருமணம் நடக்கிறது. குழந்தையும் பிறக்கிறது. மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஒரு நாள் காணாமல் போகிறது. அந்த இடத்தில் வேறு ஒரு குழந்தை இருக்கிறது. தன் குழந்தை இதுவல்ல என்று நிமிஷா சந்தேகப்படுகிறார். யாரும் அதற்கு ஆதரவாக இல்லை. ஆனால் அவர் உறுதியாக இருக்கிறார்.அப்படியானால் கையில் இருக்கும் குழந்தை யாருடையது ? எதனால் குழந்தை மாற்றப்பட்டது?சந்தேகத்தில் நிமிஷா உறுதியாக இருக்கவே, டி என் ஏ சோதனை நடக்கிறது. அது அதர்வாவின் குழந்தை இல்லை என்று தெரிகிறது. அப்படியானால் காணாமல் போன குழந்தை எங்கே? தங்களது குழந்தை எங்கே? என்று தேடுகிறார்கள் . தேடுதலில் போய் பார்த்தால் குழந்தைகள் கடத்தல் கும்பலின் கதை விரிகிறது. அதர்வாவின் உண்மையான குழந்தையைக் கண்டுபிடித்தார்களா? குழந்தைகள் கடத்தல் செய்வது யார்?அதன் பின்னணி என்ன என்பதைப் பற்றிச் சொல்லும் கதை தான்
‘ டி என் ஏ’. காணாமல் போன தனது குழந்தையைக் கண்டுபிடிக்கும் தாய் -தந்தையின் கதைதான் இது என்றும் கூறலாம்.
குழந்தைக் கடத்தல் என்ற உணர்ச்சிகரமான தலைப்புக்குள் காதல், குடும்பம், உளவியல்,மருத்துவ மோசடி என ஏராளமானவற்றைப் பேசியிருக்கிறார் இயக்குநர் நெசல்சன் வெங்கடேசன்.ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு மெனக்கெடல்கள்.விவரங்கள். உதாரணத்துக்கு நாயகி நிமிஷாவுக்கு, Borderline Personality Disorder (BPD) என்ற மனப்பிரச்சினை கோளாறு இருக்கும். இது ஒருவகையான மனக்கோளாறு என போகிற போக்கில் சொல்லாமல் அதைப் பற்றிய புரிதலைக் காட்சிகளின் மூலம் உண்டாக்குகிறார்.சட்டவிரோத செயல்கள் குறிப்பாகக் குழந்தைக் கடத்தல் செய்பவர்கள் எப்படி மனிதர்களையும் கருவிகளையும் ஏமாற்றித் தொழில் செய்கிறார்கள் என்பதையும் காட்டியுள்ளார்.
அதர்வாவுக்கான பகுதிகளில் காதல் தோல்வி போதைப் பழக்க அடிமை மறுவாழ்வு போன்றவற்றை இவ்வளவு நீளமாக காட்டி இருக்க வேண்டாம்.நல்ல வேளை இரண்டாம் பாதியில் அதர்வா சோபிக்கிறார்.
நிமிஷா முகம் நிறைய மூக்கும் முழியுமாக வருகிறார்.நிமிஷா நடித்துள்ள கதாபாத்திரம் வழக்கமாக சினிமாவில் வரும் மனநிலை பிரச்சினை அல்ல. ஆனாலும் அதைப் புரிந்து கொண்டு அவர் நடித்துள்ளார்.
சற்று நாளில் ஓய்வு பெற வேண்டிய போலீஸ்காரர் வேடத்தில் வருகிறார் பாலாஜி சக்திவேல். கடைசி நேரத்தில் நல்ல பெயர் வாங்கும் ஒரு புலனாய்வில் இறங்கி கதையிலும் இடம்பெற்று நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்.
மருத்துவமனைகளில் குழந்தைகளைக் கடத்துபவராக கமுக்கமாக காரியத்தை செய்யும் கதாபாத்திரத்தில் வரும் அந்தப் பாட்டி நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
இவர்களுடன் சேத்தன், ரித்விகா, ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்துள்ளனர்.அதர்வாவின் முன்னாள் காதலியாக வருபவரின் பொலிவான முகமும் நினைவில் நிற்கிறது.
இன்குபேட்டர் அறையில் உள்ள குழந்தையை அவ்வளவு எளிதாகக் கடத்தி விட முடியுமா என்கிற போதுதான் கதையின் பலவீனம் நெருடுகிறது.படத்தில் வருகிற “தப்பு செஞ்சவங்க யாரும் தப்பிக்கிறதில்ல… தண்டனை காலம்தான் தள்ளிப்போகிறது” என்கிற வசனம் படத்தின் உள்ளடக்கத்தைச் சொல்லும்.
ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள். பாடல்கள் ஓகே. பின்னணி இசை ஜிப்ரான்.பல காட்சிகளில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் முத்திரை பதிக்கிறார்.
இன்றைக்கு வருகிற ஹாரர் த்ரில்லர் வணிகப் படங்களில் வராத பல உணர்ச்சிகரமான காட்சிகள் படத்தில் உள்ளன .அதற்காகவே படத்தைப் பார்க்கலாம்.மொத்தத்தில் டெம்ப்ளேட் படங்களில் இருந்து சற்று விலகியே தெரிகிறது ‘டி என் ஏ’.


