‘டீசல்’ திரைப்பட விமர்சனம்

ஹரிஷ் கல்யாண், வினய் ராய், அதுல்யா ரவி , சாய்குமார், அனன்யா, கருணாஸ் ,போஸ் வெங்கட்,ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கெடேகர்,சாய் கிருஷ்ணா, ஜாகிர் உசேன், மாறன், கேபிஒய் தீனா,தங்கதுரை நடித்துள்ளனர்.

சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். எம் எஸ் பிரபு, ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சான் லோகேஷ் படத் தொகுப்பு செய்துள்ளார் .திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். தேர்ட் ஐ என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ளது.

வடசென்னையின் கடற்கரை ஓரமுள்ள 40 மீனவக் குப்பங்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் அளவிற்கு அங்கே ஒரு பெரிய ராட்சதக் குழாய் பதித்து அதன் மூலம் குரூடாயில் சப்ளை செய்யும் திட்டம் நிறைவேற்ற ஏற்பாடு நடக்கிறது.அந்தக் குழாய் இருந்தால் கரையில் இருந்து கடலுக்குக் கட்டுமரம், படகுகள் செல்வதற்கு இடையூறாக இருக்கும், மீனவ மக்களின் தொழிலும் வாழ்க்கையும் பாதிக்கும் என்று அதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராடுகிறார்கள். அரசு பிடிவாதமாக இருந்து நிறைவேற்றுகிறது. இதை எதிற்கும் இயக்கத்தில் ஐந்து பேர் முன்னணி வகிக்கிறார்கள், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையால் சிலர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அவர்களிலிருந்து அடுத்த தலைமுறையாக வாசு என்கிற இளைஞன் முன்னின்று முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்று அந்த குரூடாயிலை இடையில் பைப் லைன் வைத்து திருடிப் பணம் சம்பாதிக்கிறான் .டன் கணக்கில் திருடி வட இந்தியாவுக்கு அனுப்பி சுத்திகரித்து லட்சக் கணக்கில் பணம் பார்க்கிறான். அப்பகுதி மக்களுக்கு வெளியே தெரியாமல் பல உதவிகளும் செய்கிறான்.
வட இந்தியாவில் இவனுக்கு உதவும் அதே முதலாளி, போட்டிக்காக அதே தொழிலில் இன்னொரு நபராகப் பாலமுருகன் என்பவனை உருவாக்குகிறார். பாலமுருகன் போலீசாருடன் கூட்டு சேர்ந்து கொண்டு வாசுவுக்குப் பெரிய இடையூறாக இருக்கிறான்.இவர்களுக்குள் பகைமை வளர்கிறது.

வாசுவுக்கும் பாலமுருகனுக்கும் நடக்கும் வியாபாரப்போட்டி பகைமை,மேலிடத்தின் வணிக விளையாட்டு, அதிகார வர்க்கத்தின் தலையீடு போன்றவை ஒரு கட்டத்தில் முக்கோண மோதலாகிறது. முடிவு என்ன என்பதே 144.35 நிமிடங்கள் கொண்ட  ‘டீசல்’ படத்தின் மீதிக் கதை.

படத்தில் வாசுவாக ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார்.துறுதுறுப்பும் புத்திசாலித்தனமும் பொதுவுடமை நோக்கமும் கொண்ட அந்த முதிர்ச்சியான பாத்திரத்தில் – வயதுக்கு மீறிய பாத்திரம் என்றாலும் அவர் சிறப்பாக வெளிப்பட்டுள்ளார். பகைமை, துரோகங்களைச் சந்தித்து ஆவேசமாகப் பொங்கும் சண்டைக் காட்சிகளிலும் புத்திசாலித்தனமான காட்சி நகர்வுகளிலும் அவரது பாத்திரம் நன்கு வெளிப்பட்டுள்ளது.ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார்.சாதாரண வாலிபனாக வந்து கொண்டிருந்தவருக்கு இது அடுத்த கட்ட பாய்ச்சல்தான்.

துணை கமிஷனர் மாயவேல் பாத்திரத்தில் வரும் நடிகர் வினய் எதிர்மறை நிழல் விழுந்த பாத்திரமாக இருந்தாலும் நுணுக்கமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். வில்லத்தனத்தைக்கூட ரசிக்க வைக்கும்படி வெளிப்படுத்தி உள்ளார்.

கதாநாயகி என்கிற பெயரில் வரும் அதுல்யா ரவி சுமாரான தோற்றம், சுமாரான நடிப்பு என்று வருகிறார்.

ஹரிஷ் கல்யாணை வளர்க்கும் மனோகர் பாத்திரத்தில் வரும் சாய்குமார், தனது அனுபவம் மிக்க நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது கம்பீரக் குரலும் அந்தக் கதாபாத்திரத்திற்குக் கனம் சேர்க்கிறது.
வினய்யின் மனைவியாக அனன்யா வருகிறார்.
ஒரு மோசக்காரக் கணவனின் மனைவியாக சின்ன சின்ன காட்சிகளில் கூட அலட்டிக் கொள்ளாமல்
தனது மெல்லுணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.மாறன், தங்கதுரை ஆகியோரது  காமெடி சிரிக்க வைக்கிறது. கேபிஒய் தீனா நாயகனின் நண்பராக வருகிறார்.கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

பொழுதுபோக்குப் படங்களில் இளைஞர்களின் நட்பு வட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்த விவேக் பிரசன்னா, இதில் வேறுமுகம் காட்டி வில்லத் தனத்தில் நல்ல நடிப்பை வழங்கி உள்ளார்.

மீனவ மக்களின் முக்கியமான புள்ளிகளில் ஒருவராக வரும் கருணாஸ் அந்தப் பாத்திரத்தில் தனது குணச்சித்திரத்தை வெளிப்படுத்துகிறார்.

வட இந்தியத் தொழிலதிபர் பதான் பாத்திரத்தில் வரும் சச்சின் கெடேகரின் திரைத் தோற்றமும் நடிப்பும் படத்திற்குப் பெரும் பலமாக இருக்கிறது.

ஏற்றுக்கொண்ட பாத்திரத்தில் நடித்துள்ள அனைத்து நடிப்புக் கலைஞர்களும் குறை இல்லாத நடிப்பை வழங்கி உள்ளார்கள்.

ரிச்சர்ட் எம். நாதன் , பிரபு ஒளிப்பதிவு காட்சிகளைப் பிரமாண்டப்படுத்தியுள்ளது.ஒளிப்பதிவாளர் ஏராளமான படப்பிடிப்பிடங்களில் தொடர்ந்து இயங்கி உள்ளது காட்சிகளில் தெரிகிறது.திபு நினன் தாமஸின் இசையும் படத்திற்குப் புதிய நிறத்தை தருகிறது.
பரபர காட்சிகளில் வழக்கமான வாத்தியங்களை ஒலிக்க விடாமல் புதிய ஒலியை ஒலிக்க விட்டுள்ளார்.
அதிகார வர்க்கத்தை எதிர்த்து எளிய மக்கள் போராடும் கதையை ஆக்சன் ஃபார்முலா சட்டகத்தில் கொண்டு வந்து ஒரு விறுவிறுப்பான படத்தை எடுத்துள்ளார் இயக்குநர். ஆனாலும் இதில் வரும் காதல் காட்சிகள் வலியத் திணிக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. அது படத்திற்கு எந்த வகையிலும் பலம் சேர்க்காதது மட்டுமல்ல. வேக ஓட்டத்திற்கும் உதவவில்லை.

ஷங்கர் படத்தைப் போன்ற பல பிரமாண்ட காட்சிகள் வியக்கவைக்கின்றன. ஆனால் சில தர்க்கம் மீறும் சினிமாத் தனமான காட்சிகள் டீசல் வெளிப்படுத்தும் கரும்புகை போன்ற பலவீனம் .

டீசல்,பெட்ரோல் மாஃபியா சார்ந்த உலகத்தை இந்தப் படத்தின் மூலம் கண் முன் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். எளிய மக்களின் போராட்டத்தையும் அதிகார வர்க்கத்தில் நடக்கும் மக்கள் விரோத நாடகங்களையும் காட்சிகளாக்கி உள்ளார் இயக்குநர்.

மொத்தத்தில் எளிய மக்களின் குரலை ஒலிக்க விட்டு சமூகக் கருத்தை சொல்லும் ஒரு படமாக இயக்குநர் இந்த டீசல் படத்தை வழங்கி இருக்கிறார்.