‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்பட விமர்சனம்

சந்தானம், கீத்திகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி,லொள்ளு சபா மாறன், யூடியூபர் பிரசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்கி உள்ளார் எஸ். பிரேம் ஆனந்த், இசை ஆப்ரோ.தி ஷோ பீப்பிள் சார்பில் ஆர்யா வழங்க நிஹாரிக்கா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.

திரைப்படங்களை விமர்சனம் செய்யும் யூடியூபர்களை விமர்சனம் செய்து அந்தப் அந்தப் பின்னணியை எடுத்துக்கொண்டு மாய மந்திரம் பேய் என்று கலந்து உருவாகியுள்ள ஜாலியான திரில்லர் படம்.

சந்தானம் ஒரு யூடியூபர்.கிஸ்ஸா 27 பாத்திரத்தில் சந்தானம் வருகிறார்.ஒரு படத்திற்கான சிறப்புக் திரையிடல் காட்சிக்கு என்று அவருக்கு அழைப்பு வருகிறது.அதன்படி அவரது குடும்பம் குறிப்பிட்ட திரையரங்கத்திற்கு செல்கிறது.போன பிறகு தான் தெரிகிறது அது ஒரு ஆபத்தான இடம் என்று.குடும்பத்தினரை காப்பாற்ற சந்தானம் முயல்கிறார்.திரைப்படத்திற்குள் திரைப்படமாக அந்த திரையரங்கில் காட்டப்படும் திரைப்படத்தில் அவர்கள் கதாபாத்திரங்களாக மாறிவிடுகிறார்கள்.அதிலிருந்து அவர்கள் மீள முடியாமல் தவிக்கிறார்கள்.படத்தின் கதாபாத்திரங்கள் போல் கொலை செய்யப்பட இருப்பதை அறிந்து கொள்கிறார் சந்தானம்.அந்த ஆபத்திலிருந்து தனது குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதைத் தலைச்சுற்ற வைத்து விடை சொல்வதே ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’.

படம் முழுக்க வருகிறார் சந்தானம் .தோற்றத்தில் மாற்றம் உண்டே தவிர வழக்கமான நடிப்பில் அதே பாணியில் வருகிறார்.தனது வழக்கமான பரிவாரங்களுடன் இருந்து சிரிக்க வைக்க முயன்று உள்ளார்.சில இடங்களில் வெற்றியும் பெற்றுள்ளார்.சந்தானம் தான் நாயகன் என்றாலும் சக நடிகர்களுக்கும் நடிப்பிற்கான இடம் அளித்துள்ளது பாராட்டத்தக்கது.அதனால் அவரவரும் சிரிக்க வைப்பதில் ஸ்கோர் செய்கிறார்கள்.

நாயகியாக மட்டுமின்றி பேயகியாகவும் வருகிறார் கீத்திகா திவாரி. பெரிதாக நடிப்பு வாய்ப்பு அவருக்கு இல்லை.

ஹிட்சாக் இருதயராஜ் பாத்திரத்தில் செல்வராகவன் மிரட்டலான தோற்றத்தில் வந்து மிரட்டுகிறார்.  இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே இருக்கிறார். நிழல்கள் ரவி, கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் , நான் கடவுள் ராஜேந்திரன், மாறன், ரெடின் கிங்ஸ்லி என ஏகப்பட்ட பேர் கூட்டணி சேர்ந்து சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.படத்தில் வரும் நடிகைகள் பெரும்பாலும் குட்டைப் பாவாடை உடன் கவர்ச்சி விருந்தளித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் ஆப்ரோ இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணம் செய்துள்ளது. .ஒளிப்பதிவாளர் தீபக் குமார் பதி காட்சிகளை வண்ணமயமாக அமைத்துள்ளார்.படத்தில் கலை இயக்குநரின் பணியும் கவனிக்க வைக்கிறது.அந்த அளவிற்கு பின்புல காட்சிகளில் பிரமாதப்படுத்தியுள்ளார்.

படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், குழப்பமான திரைக்கதையை மக்களுக்கு எளிமையாக புரியும்படி காட்சிகளைத் தொகுத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த், நகைச்சுவை கதையாக இருந்தாலும் திரைப்படத்துக்குள் திரைப்படம் என்கிற புதிய முயற்சியை கையில் எடுத்ததற்காகப் பாராட்டலாம்.முதற்பாதியில் சீரான வேகத்தில் செல்லும் கதை இரண்டாவது பாதியில் குறிப்பிட்ட பகுதிக்குள் சுற்றிச் சுற்றி வட்டமிடுகிறது.

முதல் பாதியில் பார்வையாளர்களை சிரிக்க வைக்கும் இயக்குநர் இரண்டாம் பாதியில் திகில் நகைச்சுவை என்ற பெயரில் அலுப்பூட்டுகிறார்.

படம் முழுவதும் திரை விமர்சகர்களை கேள்வி கேட்டு, கலாய்த்திருக்கும் இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த், நல்ல படம் தவறாக விமர்சனம் செய்தாலும் ஓடும் ,கெட்ட படம் எவ்வளவு பாராட்டினாலும் ஓடாது என்ற கருத்தையும் கூறுகிறார் . இது அவருக்கும் பொருந்தும் தானே?