விதார்த், பூர்ணா, திரிகுன், சுபஸ்ரீ, மிஷ்கின் நடித்துள்ளனர்.மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கியுள்ளார். மிஷ்கின் இசையமைத்துள்ளார்.
கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா எஸ் எடிட்டிங் செய்துள்ளார்.இப்படத்தினை தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார்.
விதார்த்துக்கும் பூர்ணாவுக்கும் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பிறகு இருவருக்குள்ளும் ஒரு புரிதலும் ஏற்படவில்லை. நெருக்கமும் இல்லை. நெருங்கி வரும் பூர்ணாவுடன் விலகலுடன் இருக்கிறார் விதார்த். அதற்குக் காரணம் அவரது பட்டாம்பூச்சி மனசு.இதனால் விரக்தியடைந்த பூர்ணா சந்தர்ப்பவசத்தில் திரிகுன்னை சந்திக்க நேர்கிறது. இருவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத உறவு ஏற்படுகிறது. அது நாளடைவில் காதலாகிறது. விதார்த் இன்னொரு நாயகி சுபஸ்ரீ உடன் காதல் தொடர்பில் இருக்கிறார்.இரு வேறு தொடர்புகளும் ஒருநாள் வெளிச்சத்திற்கு வருகின்றன.அதன் விளைவாக அவர்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகள் என்ன? என்பதே டெவில் படத்தின் கதை.
ஒரு சிறிய இழையை வைத்துக்கொண்டு சேலை நெய்வது போல் ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு முழுப் படத்தையும் உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஆதித்யா. அது மர்மமும் விறுவிறுப்பும் கூடிய காதல் கதையாக மாறியுள்ளது.
முதல் பாதி முழுவதும் பூர்ணா திரிகுன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூலம் படத்தை சுவாரஸ்யப்படுத்தி நகர்த்தி உள்ள இயக்குநர், இரண்டாம் பாதியில் விதார்த் சார்ந்த காட்சிகள் மூலம் வேறொரு காலத்தில் பயணம் செய்கிறது. பிறகு பூர்ணா விதார்த் இடையிலான சிக்கல்களைப் பேசி இறுதியில் எதிர்பாராத கிளைமாக்ஸில் படம் முடிகிறது. படத்தின் இரண்டாம் பாதி மிதவேகத்தில் நகர்வதற்கு, கதையை அதன் போக்கில் நகர்த்தியதே காரணம்.
நான்கு கதாபாத்திரங்களை மையமாக்கி ஒரு முழுப் படத்தையும் முடிக்கிற சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ள இயக்குநர்,கதை சொன்ன விதத்திலும் திரைக்கதை அமைத்த விதத்திலும் கவனம் பெறுகிறார்.தம்பதிகளுக்கு அறிவுரை சொல்லும் கதையாக இருந்தாலும், பெண் என்பவள் பொருள் அல்ல, என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
நாயகன் விதார்த் ஒரு வக்கீலாக இயல்பாக நடித்திருக்கிறார். சுபஸ்ரீயிடம் சிக்கிக் கொண்டு தவிக்கும் காட்சிகளில் சிறப்பான நடிப்பைக் காட்டியுள்ளார். பூர்ணாவிடம் மண்டியிட்டு அழும் காட்சிகளில் விதார்த் நடிப்பில் பலபடிகள் மேலேறி நிற்கிறார். அவருக்கும் சுபஸ்ரீக்குமான சேர்மானம் பொருந்தி இருக்கிறது. இன்னொரு நாயகன் திரிகுன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கும் பூர்ணாவுக்குமான காட்சிகள் பளிச் ரகம்.
குறிப்பாக நெருக்கமான காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி பூர்ணாவுக்கும் நல்ல நடிப்பை
வெளிப்படுத்த வாய்ப்புகள் இருந்ததை அவரும் சரியாகப் பயன்படுத்தி உள்ளார்.
இன்னொரு நாயகி சுபஸ்ரீ கவர்ச்சி காட்டியே கலக்கி இருக்கிறார்.
மிஷ்கின் இசையில் பாடல்கள் இனிய ரகம். பின்னணி இசையிலும் பிரமாதம்.பின்னணி இசையில் அவர் வயலினைப் பயன்படுத்தி இருக்கும் விதம் இதம்.இசை அமைப்பாளராக அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில் பூர்ணா ,திரிகுன் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் குறை ஒளியில் வித்தியாச கோணங்களில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் அவரது திறமைக்குச் சான்றுகள்.
எல்லாரும் மனத்திலும் எதிர்மறை எண்ணம், தீய சக்தி என்கிற ஒரு பேய் ஒளிந்து கொண்டிருக்கும். அதைக் கட்டுப்படுத்துவதும் வெளிப்படுத்துவதும் நமது செயல்களில் தான் உள்ளன.அப்படி மனித மனத்தில் ஒளிந்துள்ள பேய் பற்றிக் கூறுவது தான் இந்த ‘டெவில்’ திரைப்படம்..