‘டெஸ்ட்’ திரைப்பட விமர்சனம்

மாதவன், நயன்தாரா, சித்தார்த் , மீரா ஜாஸ்மின், காளி வெங்கட் ,ஆடுகளம் முருகதாஸ் நடித்துள்ளனர் இயக்கம் எஸ். சஷிகாந்த். இசை சக்தி ஸ்ரீ கோபாலன், ஒளிப்பதிவு வீரஜ் சிங் கோஹில், எடிட்டர் டி.எஸ். சுரேஷ்,தயாரிப்பு சக்கரவர்த்தி, ராமச்சந்திரா, சஷிகாந்த்.

விளையாட்டுத்துறையில் நிலவும் அரசியல் பற்றிய பின்புலத்தில் உருவாகி இருக்கும் படமா? இந்தியாவில் அறிவியல் துறையில் ஒருவர் முன்னேறப்படும் பாடுகள் பற்றிய கதையா?ஓர் இந்திய பெண்மணி குடும்பத்திற்காகவும் சமூகத்துக்காகவும் தன்னைத் தியாகம் செய்யும் கதையா?என்றால் மூன்றும் கலந்தது தான். மூன்று தனித்தனி கதைகள் ஒரே புள்ளியில் சந்திக்கும் அழகான திரைக்கதை விளையாட்டுதான் ‘டெஸ்ட்’ படம்.

சித்தார்த் ஒரு கிரிக்கெட் வீரர் .அவர் இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராகத் திகழ்கிறார்.ஆனால் அவரை நீக்கி விட்டு  புதிய ஒருவரைச் சேர்க்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்கிறது.அவரை ஓய்வு பெறவும் அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் வாரியம் வலியுறுத்துகிறது.அவர் தனது இறுதி அத்தியாயத்தை ஒரு வெற்றியுடன் எழுத நினைக்கிறார். அதற்காக இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் ஆட்டத்தில் ஆட விரும்புகிறார் சித்தார்த்.இந்த முடிவில் பிடிவாத உறுதி காட்டுகிறார்.

மாதவன் ஒரு விஞ்ஞானி.அவர் புதிதாக ஒரு எரிபொருளைக் கண்டுபிடிக்கிறார் அது நீரிலிருந்து பிரித்து எடுக்கப்படும் ஹைட்ரஜனைக் கொண்டு உருவாகிறது.தனது கண்டுபிடிப்புக்கான அங்கீகாரத்தையும் காப்புரிமையும் பெற விரும்புகிறார்.அதற்காகப் போராடுகிறார்.அவரது மனைவி நயன்தாரா கணவரின் கனவை நிறைவேற்ற உறுதுணையாக இருக்கிறார் ,ஒத்துழைப்பு தருகிறார். ஒரு கட்டத்தில் பெரிய லட்சியங்களை உதறி விட்டு
நீண்ட நாள் குழந்தை இல்லாத ஏக்கத்தை தீர்த்துக்கொண்டு, ஒரு குழந்தை, கணவர், குடும்பம் போதும்,அதுவே தன் உலகம் என்று ஒரு சராசரி இந்தியப் பெண்ணின் சிறு வட்டத்துக்குள் ஆழ்ந்து போக நினைக்கிறார் .அதற்கான கடைசி முயற்சியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்கிறார்.

இந்த மூவரும் தங்கள் கனவுகளின் கடைசி வாய்ப்பை எதிர்நோக்கி பயணிக்கின்றனர்.தாங்கள் யார் என்பதை இந்த உலகத்திற்குக் காட்ட முயற்சிக்கும் கடைசி வாய்ப்பாகவும் நினைக்கிறார்கள்.எப்படியாவது நினைத்தது நடக்க வேண்டும் என்ற இந்த மூவரின் பயணத்தை ஒரே புள்ளியில் சந்திக்க வைக்கும் கிரிக்கெட் போட்டி, இவர்களை மிகப்பெரிய சோதனையில் சிக்க வைக்கிறது. அந்த சோதனையைக் கடந்தார்களா? வாழ்க்கையில் சாதனை படைத்தார்களா? என்பதை மனிதர்களின் ஆணவ விளையாட்டின் மூலம் சொல்வதே ‘டெஸ்ட்’.

மாதவன், சித்தார்த், நயன்தாரா மூவரும் படத்தில் பிரதானபாத்திரங்களில் நடித்துள்ளனர். தங்களுக்கான நடிப்புத் தருணங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு மூன்று பேரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

தோல்வியுற்றவனாக, வெற்றி பெற்றவன் மீது ஆத்திரம் கொள்பவனாக நடித்திருக்கும் மாதவன், தனது கண்டுபிடிப்பிற்கான அங்கீகாரத்திற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டாலும், இறுதியில் பணத்திற்காக எடுக்கும் வில்லன் அவதாரம் மிரட்டல்.

போராடினால் தான் வெற்றி கிடைக்கும். அந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் பாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தார்த், அளவான நடிப்பு மூலம் தனது மனநிலையை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.

குழந்தைக்காக ஏங்கும் பெண்ணாக யதார்த்தமாக நடித்துள்ள நயன்தாரா சொந்தக் குரலில் பேசி கவனம் ஈர்க்கிறார்.நடிப்பிலும் குறை இல்லை.

மீரா ஜாஸ்மின் சித்தார்த்தின் மனைவியாக வருகிறார்.படத்தில் அவரும் இருக்கிறார் என்பதற்காக அவருக்கு சிறு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை அவர் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பவர்களும் அளவான நடிப்பு மூலம் தங்கள் இருப்பைப் பதிக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சக்திஸ்ரீ கோபாலனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்களத்திற்குப் பலம் .ஒளிப்பதிவாளர் வீரஜ் சிங் கோஹிலின் பணி படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. குறிப்பாக கிரிக்கெட் போட்டிகள் காட்சிப்படுத்திய விதம்,நிஜத்துக்கு அருகில் உள்ளன.

படத்தொகுப்பாளர் டி.எஸ்.சுரேஷ், கலை இயக்குநர்கள் என்.மதுசூதன் மற்றும் சுவேதா சாபு சிரில் ஆகியோரது பணிகள் படத்திற்கு கூடுதல் சிறப்புகள்.

எழுதி இயக்கியிருக்கும் எஸ்.சஷிகாந்த், கிரிக்கெட் போட்டியை களமாகக் கொண்டு ஈகோவினால் வாழ்க்கையில் விளையாடும் மனிதர்களையும், அவர்கள் சந்திக்கும் சோதனைகளையும் விறுவிறுப்பாகவும், சுவாராஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.

இந்த உலகில் வெற்றி வெற்றி பெறுவது சுலபமில்லை. வெற்றி பெற்றவர்கள் அதற்காகக் கொடுத்த விலை அதிகம் என்பதை
இயக்குநர் எஸ்.சஷிகாந்த், மூன்று கதாபாத்திரங்களின் மனபோராட்டங்களை வைத்து திரைக்கதை அமைத்து ஆரம்பம் முதல் முடிவு வரை, அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்புடன் பார்வையாளர்களை படம்பார்க்க வைத்துள்ளார்.

மொத்தத்தில், இந்த ‘டெஸ்ட்’ டி20  கிரிக்கெட் போட்டி போல் பரபரப்பு கலந்த விறுவிறுப்பு.