வடசென்னையைப் பிரதானப்படுத்தி வந்திருக்கும் படங்களில் ஒன்று இந்த ‘டைனோசர்ஸ்’ .ஆனால் இது பத்தோடு பதினொன்று அல்ல. பத்தில் தனித்துத் தெரியும் ஒன்று எனலாம்.
அறிமுக இயக்குநர் மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது இந்த “டைனோசர்ஸ்”. உதய் கார்த்திக், அட்டு ரிஷி, மாறா, சாய் பிரியா தேவா, ஜானகி , மானக்ஷா ,அருண் உள்ளிட்ட நடிகர்கள நடித்துள்ளனர்.
கணவர் இல்லாத ஜானகிக்கு அட்டு ரிஷி மற்றும் உதய் கார்த்திக் இருவரும் மகன்கள்.
ரிஷியின் உயிர் நண்பன் மாறா, பெரிய ரவுடியான மானக்ஷாவிடம் அடியாளாக இருந்தவர்.திருமணம் ஆனதும் திருந்தி வாழ்ந்து வருகிறார் .
ரவடியாக இருந்தபோது செய்த ஒரு கொலைக்காக, பல மாதங்கள் கழித்து மாறா மற்றும் அவரது குழுவைச் சரணடையச் சொல்கிறார் மானக்ஷா. தனது நண்பனுக்காக அந்தக் கொலைப் பழி தாங்கி சிறை செல்கிறார் அட்டு ரிஷி.
இந்நிலையில், கொலை செய்யப்பட்டவர் மனைவியின் சகோதரர் அருண் மற்றுமொரு ரவுடி. இவரிடம் சிக்கி படுகொலை செய்யப்படுகிறார் மாறா. இவரின் கொலைக்கு எதிர்பாராத விதமாக நாயகன் உதய் கார்த்திக்கும் ஒரு காரணமாகி விடுகிறார்.
கடைசியாக மாறாவின் கொலைக்குப் பழி தீர்க்கப்பட்டதா.? இந்த திட்டத்தைப் போட்டது யார் ? உதய் கார்த்திக் எப்படி இவர்களின் வலையில் சிக்காமல் தப்பித்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகன் உதய் கார்த்திக், இயல்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
பாத்திரத்தில் நன்றாகப் பொருந்தி நம்மைக் கவர்ந்திருக்கிறார்.அழகாக வந்து ரசிகர்களைக் கவர்கிறார் சாய் பிரியா தேவா. இருவருக்குமான காதல் காட்சிகள் பூப்பூக்கும் அழகு.
முதல் பாதி படம் முழுவதையும் மாறா கட்டுக்குள் வைத்திருக்கிறார். அவரைக் கொல்வதற்கு முன்பு பேசும் வசனங்கள் சுரீர்.
வெட்டுப்பட்டு எழுந்து நின்றுபோடும் ஆட்டம் புதுசு. படபடப்பு, வீரம், ஏக்கம், வாழ்க்கை பயம் எனக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் பல விதமான நடிப்பையும் கொண்டு வந்துள்ளார்.
கொடுக்கப்பட்ட காட்சிகளில் அழகாகச்செய்திருக்கிறார் அட்டு ரிஷி. முதல் காட்சியிலேயே தனது கையில் வைத்திருந்த கத்திரிகோலைப் பிடித்து பேசும் வசனம் சபாஷ். நட்பிற்காக செய்யும் செயல் கைத்தட்டல்களை அள்ளும்.
அம்மாவாக நடித்த ஜானகி, கம்பீரம் காட்டியிருக்கிறார். தனது மகனின் வீரத்தை பேசும் காட்சி மிரட்டல்.படத்தின் இருபெரும் தூணாகத் தாங்கி நிற்பது போபோ சசியின் இசையும் ஜோன்ஸ் வி ஆனந்தின் ஒளிப்பதிவும் தான்.
கிணற்றுக்குள் கிணறு, மாறாவைக் கொல்வதற்கு போடப்படும் ஸ்கெட்ச், பேருந்து சண்டை, க்ளைமாக்ஸில் வெடியை வைத்து ரெளடிகளை விரட்டுவது, மாறாவின் கொலைக்குள் தற்செயலாக உதய் கார்த்திக்கை உள்ளே கொண்டு வந்தது, விஜய் சேதுபதி முத்தம் என பல இடங்களில் ரசிக்க வைப்பவை.இவை இயக்குநருக்குக் கைத்தட்டல்களை வாங்கிக் கொடுக்கும்.
ஆங்காங்கே ஒலிக்கும் மக்களின் அரசியல் பேசும் வசனங்கள் கவனம் பெறும்.
கதை, எடுக்கப்பட்ட விதம், வசனங்கள், ஒளிப்பதிவு, பின்னணி இசை, என டைனோசர்ஸை நிச்சயம் ரசிக்கலாம்.
வட சென்னையில் எடுக்கப்படும் வழக்கமான படமாக இல்லாமல், பல விதங்களில் தனித்துவம் காட்டிக் கவனம் பெறுகிறது இந்த “டைனோசர்ஸ்”.