அருள்நிதி சஸ்பென்ஸ் திரில்லர் படங்களின் ஆஸ்தான நாயகன் ஆகிவிட்டார். அந்த வரிசையில் வந்திருக்கும் படம் தான் டைரி.
மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை செல்லும் பாதையில் உள்ள 13-வது கொண்டை ஊசி வளைவில் நிறைய விபத்துகள் நடைபெறுகின்றன. (நன்றாகக் கவனியுங்கள் அமானுஷ்யத்திற்கும் 13ஆம் எண்ணிற்கும் சம்பந்தம் உண்டு என்பது நம்பிக்கை)
அதையொட்டி பல மர்மக் கதைகள் சிறகடித்து பறக்கின்றன.
பல ஆண்டுகளாகப் புரிபடாமல் தீர்க்கப்படாமல் கிடக்கும் இந்த வழக்குகள் பயிற்சிக் காவலரான அருள்நிதியிடம் வருகின்றன.அவர் இது தொடர்பான விசாரணையில் இறங்குகிறார். பல முடிச்சுகள் கொண்ட இந்த வழக்கில் கடைசியாக என்ன நடந்தது என்பது தான் ‘டைரி’ சொல்லும் கதை.ஒரே படத்தில் பல ஜானர்களைக் கலந்து கட்டி எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன்.
படத்தின் மையக்கரு சுவையானதுதான்.குறிப்பாக, படத்தின் இறுதிக் காட்சி நம்மை நெகிழவைக்கும் அதேசமயம் விறுவிறுப்பு.படத்தின் பெரும் பலமே கடைசி 60 நிமிட நேரம்தான். அந்த ஒரு மணிநேர சுவாரஸ்யத்தை வைத்துக்கொண்டு பிற பகுதிகளை நீட்டி முழக்கி இருக்கிறார்கள்.
படம் ஆரம்பித்ததும் வரும் முதல் காட்சியே மிரளவைக்கிறது. ஆனால் அடுத்தடுத்து வரும் தேவையில்லாத காதல் பாடல், அலுப்பு தரும் விசாரணை தொய்வு.முதல் பாதி முழுக்க கதையோட்டத்திற்கு எந்த வகையிலும் பயன்தராத நேர நீடிப்பு காட்சிகளே நிறைந்துள்ளன.
ஆனால் எல்லாக் குறைகளையும் பின்னடைவுகளையும் ஈடு செய்யும் வகையில் கடைசி ஒரு மணி நேரம் நம்மைக் கட்டிப் போட்டு விடுகிறது.
முதல் பாதியில் அருள்நிதிக்கு குறைந்த காட்சிகளே இருக்கின்றன என்றாலும் இரண்டாம் பாதியில் மிரட்டி ஈடு செய்து விடுகிறார்.
போலீஸ் கட்டிங், கம்பீரமான உடல்,உடல்மொழி என தனது வழக்கமான நடிப்பை இந்தப் படத்திலும் பதியவைக்கிறார். அறிமுக நாயகியாக நடித்திருக்கும் பவித்ரா நடிப்பில் தேறுகிறார்.
ஜெயப்பிரகாஷ், சாரா, தனம் உள்ளிட்ட பலரும் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பைக் கொடுத்துள்ளன்னர்.
நகரும் திரைக்கதையில் இடைவேளையில் வரும் திருப்பம், இரண்டாம் பாதி ட்விஸ்ட்டுகள் வேகமெடுக்க உதவுகின்றன. குறிப்பாக பேருந்துக் காட்சிகள் முழுமையாக பார்வையாளர்களை ஈர்க்கின்றன.
நடப்புக்காலக் கதாபாத்திரங்களை கடந்த காலங்களுடன் இணைத்திருந்த விதம் புதுமை.
ஊட்டி, மேட்டுப்பாளையத்தின் குளிரையும், விபத்தின் வீரியத்தையும், குறிப்பாக இரண்டாம் பாதியில் பேருந்துக்குள்ளேயே நகரும் காட்சிகளில் கேமரா கோணங்களால் கண்களை கட்டிப்போடுகிறார் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங். இசையமைப்பாளர் ரான் ஈதன் யோஹான் பின்னணி இசை படத்தின் பலத்தை கூட்டிருக்கிறது.
மொத்தத்தில் இந்த ‘டைரி’யில் கடைசியில் எழுதப்பட்டுள்ள சில பக்கங்களுக்காக பார்க்கலாம் படிக்கலாம்.