‘ட்ராமா’ (TRAUMA) திரைப்பட விமர்சனம்

விவேக் பிரசன்னா, சாந்தினி ,சஞ்சீவ் க ஆனந்தநாக், பூர்ணிமா ரவி, பிரதோஷ், மாரிமுத்து, ரமா, பிரதீப் கே.விஜயன், ஈஸ்வர், நிழல்கள் ரவி, வையாபுரி நடித்துள்ளனர்.
எழுதியிருக்கிறார் தம்பிதுரை மாரியப்பன் . அஜித் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர் எஸ் ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார்.எஸ் உமா மகேஸ்வரி தயாரித்துள்ளார்.

இன்று நாம் உண்ணும் உணவை உடுத்தும் உடையை வாழும் வாழ்க்கையை உலகமயமாக்கல் என்கிற வியாபாரக் கொள்கைதான் தீர்மானித்துக் வருகிறது. இன்று நாம் விரும்பும் உணவை உண்ண முடியாது, கிடைக்கிற உணவைத்தான் உண்ண வேண்டும்.அதன் மூலம் வரும் விளைவுகளை அனுபவிக்க வேண்டும். இன்று கிடைப்பதெல்லாம் இயற்கைக்கு மாறானவையாக உள்ளன.
அப்படி இப்படிப்பட்ட உணவுகளால் வாழ்க்கை முறையால் நோய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நகரங்களில் மூலைக்கு மூலை முளைத்திருக்கும் டென்டல் கேர் மருத்துவமனைகளும் இஎன்டி , ஆர்த்தோ மருத்துவமனைகளும், கருத்தரிப்பு மையங்களும் இதைத்தான் கூறிக்கொண்டு சாட்சியமாக நிற்கின்றன.பத்தாண்டுகளுக்கு முன்பு இவை எல்லாம் இருந்தனவா? இன்னும் பத்து ஆண்டுகளில் செயற்கைக் கருத்தரிப்பு மையம் போகாமல் யாரும் கருத்தரிக்க முடியாது என்கிற நிலை உருவாகும். மருத்துவமும் விஸ்வரூபம் எடுத்து வியாபாரமாக வளர்ந்து வருகிறது.  இப்படி ஒரு மருத்துவ வியாபாரத்துக்கு எதிரான எச்சரிக்கை மணியாக ஒலிப்பது தான் இந்த ட்ராமா திரைப்படம்.

ட்ராமா என்றால் அதிர்ச்சி, பாதிப்பு என்கிற பொருள் படும். இந்த படமும் பல்வேறு பாதிப்புகளைப் பற்றிப் பேசுகிறது.

.விவேக் பிரசன்னா, சாந்தினி தம்பதிகளுக்குத் திருமணமாகி பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருக்கிறது.சில மருத்துவ முயற்சிகளுக்குப் பிறகு சாந்தினி கர்ப்பமாகிறார். ஒரு நாள் ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு வருகிறது. அதில் பேசுபவன் குறிப்பிட்ட இடத்திற்கு வரவேண்டும் என்றும் 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும் மிரட்டுகிறான்.இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம்,கார் திருடர்கள் காரை திருடிக் கொண்டு செல்கிறார்கள். அப்போது அவர்களை போலீஸ் மடக்கிப் பிடிக்கிறது. டிக்கியில் ஒரு சடலம் இருக்கிறது.இன்னொரு புறம் ஒரு இளம் ஜோடி காதலர்களாக இருக்கிறார்கள். காதலி தன் காதலனைப் பற்றி அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை அறிந்து கொள்கிறார். இப்படி மூன்று மூன்று வெவ்வேறு இடங்களில் செல்லும் கதை ஒரு மையத்தில் குவிந்து இணைகிறது. இப்படி ‘ஆந்தாலஜி ‘ வகையில் சிறப்பாக திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன்.
அதுமட்டுமல்ல ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத காட்சிகளை கூட இணைப்பு கொடுத்து தொடர்பு ஏற்படுத்தியிருக்கிறார்.

அந்த வகையில் ஹைப்பர் லிங்க பாணியில் திரைக்கதையை நன்றாக அமைத்துள்ளார் இயக்குநர்.கருவுறுதல் என்ற விஷயத்திருக்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சி தரும் க்ரைம் அம்சத்தை சொல்லி இருக்கிறது இந்த படம்.

படத்தின் திரைக்கதையை திரில்லர் போன்று மாற்றியதில் எடிட்டர் முகன்வேலின் பங்கு முக்கியமானது. ஒளிப்பதிவும் இசையும் ஓகே ரகம்.

சாந்தினி இப்போது நிறைய படங்களில் வருகிறார் தனது திறமையை நிரூபிக்கும் நேரம் அவருக்கு வந்துள்ளது.குழந்தையை ஏக்கம் கொண்ட பெண்ணாக இதில் நடித்துள்ளார்.

“இந்த உலகத்தில் யாருமே வலியை வேண்டாம் தான் சொல்லுவாங்க. ஆனால் வேணும்ன்னு நினைக்கிற ஒரே வலி தாய்மை தரும் வலியை மட்டும்தான்” என்று சாந்தினி சொல்லும் வசனம் அந்த பாத்திரத்தின் வலி உணர்த்தும்.

பல படங்களில் கன்னா பின்னாவென்று முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் விவேக் பிரசன்னா கதையின் நாயகனாக இப்படத்தில் நடித்துள்ளார். பொதுவாக கதாநாயக நடிகர்கள் ஏற்று நடிக்கத் தயங்கும் கதாபாத்திரத்தை இதில் ஏற்றுள்ளார். நடிப்பிலும் குறை இல்லை.

எழுதி இயக்கியிருக்கும் தம்பிதுரை மாரியப்பன், மருத்துவ பின்னணியில் நடக்கும் குற்ற செயல்களை மையமாக வைத்து எழுதியிருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருப்பதோடு, அதை சொல்லிய விதம் விறுவிறுப்பாகவும், வேகமாகவும் இருக்கிறது.

குழந்தைகள் வேண்டும் என்று மருத்துவமனை செல்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும் தனக்கு பெற்றோருக்கு கிடைக்க மாட்டார்களா என்று ஏங்கு ஆதரவற்ற குழந்தைகள் மறுபுறம்இருக்கிறார்கள்.
குழந்தையில்லா தம்பதிகள் ஆதரவற்ற குழந்தைகளை ஏன் தன் குழந்தைகளாக வளர்க்க கூடாது?என்று படத்தில் இயக்குநர் எழுப்பும் கேள்வி யோசிக்கவைக்கக் கூடியது.

சிற்சில குறைகளை மறந்து நல்ல நோக்கத்திற்காக இந்த படத்தை எடுத்திருக்கும் இந்தப் புதிய படக் குழுவினரை வரவேற்று வாழ்த்தலாம்.