சமுத்திரக்கனி , ஷிவதா , ராஜ் திரன் தாஸ், பிரேம், மூணாறு ரமேஷ், சுந்தர் பாண்டியன், கொற்றவை , அழகன் தமிழ்மணி,விநாயகன், புலிப்பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர்.நவீன் குமார் பழனிவேல் இயக்கியுள்ளார். தினேஷ் குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். . அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ளார்.
ஜீ 5 வெளியிடுகிறது.
90களில் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் நடந்த இரட்டை கொலைகளை மையமாக வைத்து இந்த இணையத் தொடரின் கதை உருவாகியிருக்கிறது.ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி என்று இரட்டைக் கொலைகளாக தொடர்ந்து நடைபெறுகிறது . கொலையாளி வேறு எதையும் திருடிச் செல்லாமல் மனைவியின் தாலியையும் கணவனின் அரைஞான் கயிற்றையும் திருடிச் செல்கிறான்.தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் கிராமப்புறத்தில் நடக்கும் இந்தக் கொலைகள் பற்றி எந்தத் தடயமும் கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது. அதன் நுனி தேடி போலீஸ் புலனாய்வுக் குழு ஆந்திரா செல்கிறது. அங்கே சென்ற பின் இது போல் வேறு தொடர் கொலைகள் நடந்திருப்பது தெரிய வருகிறது. இப்படி 76 கொலைகள் நடந்திருப்பதையும் ஆனால் எந்தத் துப்பும் துவங்காமல் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைகிறது புலனாய்வுக்குழு. இப்படிப்பட்ட சூழலில் ஒரு பெரிய துப்பு கிடைக்கிறது. அதைப் பற்றிக் கொண்டு அதன் ஓடு பாதையில் சென்று குற்றவாளிகளைத் தேடிச் செல்கிறார்கள், எப்படிப் பிடிக்கிறார்கள் என்பது தான் மீதிக்கதை .ஆனால் இதற்கு இடையே குற்றவாளிகளின் குற்றத்திற்கான பின்புலம்,தூண்டுதலாக உள்ள பழிவாங்கும் உணர்ச்சி,பழி வாங்கும் உணர்ச்சியே எப்படி ஒரு போதையாக மாறி அப்பாவிகளையும் கொல்லும் போக்கு என்று மாறுகிறது என்பதையும் காட்டியுள்ளார்கள்.
காவல்துறையில் அதிகாரிகள் மத்தியில் நடக்கும் ஆணவ சிக்கலால் அகங்காரப் போட்டியால் புலனாய்வுப் பணிகள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதையும் காட்டுகிறார்கள். பொதுவாக அரசு அமைப்புகளில் அதிகார மட்டங்களில் திறமைசாலிகளை மட்டம் தட்டுவதும்,புறக்கணிப்பதும் திறமை குறைந்த வெத்து வேட்டுகள் அதிகாரத்தில் ஓலைச்சுவோராக உள்ளதையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.மூணாறு ரமேஷ் ,சமுத்திரக்கனி பாத்திரங்களின் மூலம் அதிகார ஆணவ மோதல் போக்குகள் காட்டப்பட்டுள்ளன.
இத்தொடரில் எஸ்ஐ அதியமான் பாத்திரத்தில் சமுத்திரகனி நடித்துள்ளார். அவர் திறமைசாலி தான் என்றாலும் அவருக்கு மரியாதை இல்லாமல் எப்படி காவல் துறையினர் மூலம் அவமதிக்கப்படுகிறார் என்பதையும் சித்தரித்து இயக்குநர் சரியாக வெளிப்படுத்தி உள்ளார்.வழக்கம்போல விரைப்பாக நின்று வீர வசனம் பேசாமல் சற்றே அழுத்தத்துக்குள்ளான புறக்கணிக்கப்பட்ட பாத்திரத்தில் பொருந்தி மிளிர்கிறார் சமுத்திரக்கனி. திறமை இல்லாமல் எப்படி செல்வாக்காக இருக்கிறார்கள் என்பதையும் சோரம் போகும் காவல்துறையினர் பற்றியும் பாத்திரங்கள் பேசுகின்றன.
காவல் ஆய்வாளர் லட்சுமி பாத்திரத்தில் வரும் ஷிவதா நன்றாக நடித்துள்ளார். காவல்துறை என்றாலே முரட்டுத்தனமான முகம் இருக்க வேண்டும் என்பதை மாறி ஒரு வசீகர முகத்தையும் மிடுக்கான பதவியில் உள்ள அதிகாரியாகக் காட்ட முடியும் என்று இயக்குநர் உருவாக்கியுள்ளார்.அதற்கு ஷிவதாவும் சரியாகப் பொருந்தி உள்ளார். மேலும் இந்த படத்தில் கொலைகாரர்களாக வரும் ராஜ் திரன் தாஸ், பிரேம் இருவரும் அந்த பாத்திரத்தில் அச்சு அசலாகப் பொருந்தியுள்ளார்கள். அவர்களுக்கு அவர்களது உடல் மொழி அப்பாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளது.
மற்றும் இந்த இணையத்தொடரில் வரும் பிற துணைப் பாத்திரங்களும் எதார்த்தத்திற்கு நெருக்கமாக அமைந்து திரைக்கதை ஓட்டத்திற்குப் பயன்பட்டு உதவி இருக்கிறார்கள்.
தொடர் கொலை செய்யும் பாத்திரத்திரங்களின் உணர்வைக் கூறும் போது அவர்கள் செய்யும் கொலைக்கான காரணம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.என்றாலும் உண்மைக் கதையை மையமாக வைத்து இந்தத் தொடரை எடுத்திருக்கிறார்கள் என்பது சற்று அதிர்ச்சி தருகிறது.
அதிகார வர்க்கத்திற்கு இனமொழி பேதம் இல்லை. காக்கிகள் எங்கே சென்றாலும் ஒரே நிறம் தான் என்பதை தமிழ்நாடு காவல் காவல்துறை, ஆந்திராவில் காவல்துறையின் போக்குகள் காட்டுகின்றன.
வெற்று அலங்காரங்கள் இல்லாமல் குணச்சித்திரங்களை முதன்மைப்படுத்தும் வகையில் காட்சிகளை ஒளிப்பதிவு செய்துள்ளார் கே கே .
இந்தக் குற்றம் சார்ந்த திரைக்கதைக்கு வலுவூட்டும் வகையில் இசை அமைந்துள்ளது. பின்னணி இசையும் நன்று.
பிரமாண்டங்கள் இல்லாமலேயே நம்மை அச்சமூட்டி இருக்கையின் நுனிக்குக் கொண்டு செல்கிறது இந்தத்’தடயம்’ இணையத் தொடர்.


