‘தடை அதை உடை’ திரைப்பட விமர்சனம்

அங்காடித்தெரு மகேஷ், திருக்குறள் குணா பாபு ,கே. எம். பாரி வள்ளல், திருவாரூர் கணேஷ், மகாதீர் முகமது, நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே . ராதாகிருஷ்ணன், வேல்முருகன், காத்து கருப்பு கலை ,பாக்கியம் கெளதமி, சுபாஸ்ரீ, சூரிய பிரதாபன் நடித்துள்ளனர்.

படத்தின் கதையை எழுதி இயக்கி, தனது காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்துள்ளார்.தங்கப்பாண்டியன் ,சோட்டா மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். சாய் சுந்தர் இசையமைத்துள்ளார். பாடல்கள்: அறிவழகன்.கலை இயக்கம் : சிவக்குமார், மணி,சண்டைப் பயிற்சி : அசோக் குமார், தயாரிப்பு மேற்பார்வை : வேல்முருகன், நிர்வாகத் தயாரிப்பு : சாமிநாதன் நாகராஜன், காமராஜ் , தமிழ்வாணன்.

தயாரிப்பாளரிடம் கதை சொல்லப் போய் நிராகரிக்கப்பட்டு ஏமாற்றத்தையும் தோல்வியையும் சந்திக்கும் ஒரு இளைஞரின் கதையாகப் படம் தொடங்குகிறது.

திரைப்பட இயக்குநர் கனவில் இருக்கும் வாலிபர் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்கிறார். அது அவருக்குப் பிடிக்கவில்லை.வேறொரு கதை கேட்கிறார். அதுவும் பிடிக்கவில்லை .உருப்படியாக சிந்திக்க வேண்டும் என்று அவர் அறிவுரை கூறுகிறார். அப்படி அவர் நினைத்தபடியான ஒரு கதையை அந்த இளைஞர் தயாரிப்பாளரிடம் சொல்கிறார் . கதை பிடித்து போய் அதைப் படமாக்கத் தான் தயார் என்கிறார் .இந்தக் கதை சொல்லும் அனுபவத்தை ஒரு படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் தயாரிப்பாளர் அறிவழகன் முருகேசன்.

வாலிபர் சொன்ன கதை தான் திரைப்படமாக காட்சிகளாக விரிகின்றன.அதன்படி ஏழைத் தந்தை ஒருவர் தன் பிள்ளையைப் பள்ளியில் சேர்க்கப் போராடும் கதை ,தடையை மீறி அந்தச் சிறுவன் எப்படி படித்து மேலே வருகிறான் என்பது ஒரு படமாகிறது.சமூக ஊடகங்களில் ரீல்ஸ், வீடியோக்கள் போடுபவர்கள்,சமூக ஊடகங்களில் உருப்படியாகச் செய்து மாற்றத்தை ஏற்படுத்துவோர், அவர்களைப் பின்தொடர்ந்து தவறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் போன்ற சமகால பிரச்சினைகளையும் படம் பேசுகிறது.தயாரிப்பாளர் புதிதாக யோசிக்கச் சொன்ன அந்தக் கதை என்ன என்பதுதான் 129.21 நிமிடங்கள் கொண்ட’தடை அதை உடை’  பட கிளைமாக்ஸ்.

முதல் படமாக இதை எழுதி இயக்கித் தயாரித்துள்ள அறிவழகன் முருகேசனுக்கு இது முதல் முயற்சி. சற்றுப் பொறுப்பான வகையிலும் அதைப் பயன்படுத்த  நினைத்துள்ளார்.

படத்தின் தலைப்பு ‘தடை அதை உடை’ என்பதற்குப் பொருந்துவது போல் ஏராளமான காட்சிகள் வருகின்றன.சமூகத்தில் ஏற்படுகிற அனைத்து தடைகளையும் உடைத்து மேலே வர வேண்டும் என்று செய்தி சொல்லி இருக்கிறார்கள்.

இந்த ஒரே படத்தில் சொல்லப்படும் மூன்று கதைகளில் பத்து நடிகர்கள் வருகிறார்கள். வெவ்வேறு தோற்றத்தில் வெவ்வேறு விதமாக அவர்கள் வெளிப்படுகிறார்கள்.

அங்காடித்தெரு மகேஷ் இதில் கதை நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு உடல் எடை கூடி உள்ளது. உடன் நடித்துள்ள நடிகர்களில் சதீஷாக வரும் திருக்குறள் குணா பாபு, கம்பனாக வரும் கே.எம்.பாரிவள்ளல் , கார்த்திக்காக வரும் திருவாரூர் கணேஷ் , வினோத்தாக வரும் மஹாதீர் முகமது ஆகியோர் தங்கள் நடிப்பால் கவனிக்க வைக்கிறார்கள்.

படத்தின் கதை பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், தனுஷ்கோடி, மதுரை என்று சென்று ,அதன்படியே பயணம் செய்கிறது. அந்த இடங்களின் நிலக்காட்சிகள் படத்திற்கு ஏற்றதொரு பின்புலமாக அமைந்துள்ளது.படத்தின் பெரும்பகுதி வெளிப்புறங்களிலேயே நடைபெற்றுள்ளது. இயற்கை ஒளியிலேயே படமாக்கியுள்ளனர்.இருந்தாலும் அந்தக் குறை தெரியவில்லை.

தனது முதல் படத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாமல் சமூகத்தின் பழுது நீக்கும் நோக்கில் செய்திகளைக் கூறியுள்ளார் இயக்குநர் .

விடாமுயற்சியை விடக்கூடாது, கல்வியின் அருமையைத் தெரிந்து கொள்ள வேண்டும், சமூகத் தடைகளை உடைத்து மேலே வர வேண்டும், சமூக ஊடகங்களின் மயக்கத்தில் மூழ்கிவிடக் கூடாது போன்று ஏராளமான கருத்துகளைக் கூறியுள்ளார்.

படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகள் இயற்கை ஒளியில் படமாக்கப்பட்டுள்ளன. அதற்காக அலைந்து திரிந்து ஒளிப்பதிவாளர்கள் தங்கப்பாண்டியன் ,சோட்டா மணிகண்டன் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.
காடு, மேடு போன்ற எளிய இடங்களையும் கோணங்களினால் பெரிதாக உணர வைத்து பார்க்க வைத்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் சாய்சுந்தர்  பொருத்தமான பின்னணி இசை மூலம் படத்தைப் உயர்த்திப் பிடித்துள்ளார் .படத்தொகுப்பாளர் டாய்சி படத்தில் தொய்வு ஏற்படாமல் தொகுத்துள்ளார் .

மொத்தத்தில் ஒரு சின்ன பட்ஜெட்டில் கேளிக்கைப் படமாக இல்லாமல் சமூகத்திற்கு கருத்துகளைச் சொல்ல முயன்று உள்ளார் இந்த அறிமுக இயக்குநர் அறிவழகன் முருகேசன்.

படத்தின் காட்சிகளில் தெரியும் பட்ஜெட் ஒரு குறைபாடு.சில காட்சிகளின் முதிர்ச்சியின்மை தொலைக்காட்சித் தொடரைப் போன்ற உணர்வைத் தருகிறது.

படத்தில் வரும் சில இடங்களில் நாடகத்தனமான காட்சிகள் போன்ற பின்னடைவுகளை உணர முடிகிறது.

கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கப்படும் படங்கள் மது, புகை, போதை, வன்முறை என்று கதையாகி வரும் இன்றைய சூழலில் படம் சொல்லும் நல்ல நோக்கத்திற்காக இப்படிப் படம் எடுக்க ஒருவர் முன் வருவதை ஓர் ஆறுதல் தான்.திரைப்பட ஊடகத்தின் தன்மையையும் திரைமொழியையும் புரிந்து கொண்டு அடுத்த முயற்சியில் அவர் வெற்றி பெற வேண்டும்.