‘கலையாத நினைவுகள்’, சத்யராஜ் நடித்த ‘அடாவடி’ போன்ற படங்களைத் தயாரித்த ஶ்ரீசரவணா பிலிம் ஆர்ட்ஸ் ஜி.சரவணா தயாரித்திருக்கும் படம் ‘தண்ணி வண்டி’.திரைக்கதை, வசனம், இயக்கம் – மாணிக்க வித்யா.
இந்தப் படத்தில் நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ‘வில் அம்பு’ படத்தின் நாயகியான சம்ஸ்கிருதி நடித்துள்ளார்.இவர்களுடன் தம்பி ராமையா, பால சரவணன், விதுலேக்கா, தேவதர்ஷினி, ஜார்ஜ், மதுரை முத்து, முல்லை கோதண்டம், ‘ஆடுகளம்’ நரேன், சேரன்ராஜ், மனோஜ்குமார், பாவா லட்சுமணன், காதல் சுகுமார், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வினுதா லாலும் நடித்துள்ளார்.
“மனிதன் அவன் நினைப்பதை காட்டிலும் அதிக ஒழுக்கமுடையவன். ஆனால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு ஒழுக்கங் கெட்டவன்” என்ற ‘சிக்மண்ட் ப்ராய்ட்’-ன் வாசகம்தான் இந்தத் ‘தண்ணி வண்டி’ படத்தின் கதைக் கரு.
மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு விஷயத்திற்கு அடிமையாக இருப்பார்கள். அப்படி பணம், குடி, செக்ஸ் என பலவிதமான போதைகளுக்கு அடிமையான சிலபாத்திரங்களின் வாழ்க்கைதான் இந்த படத்தின் திரைக்கதை.
மதுரையில் வண்டியில் தண்ணீர் கொண்டு சென்று ஊற்றும் வேலை செய்கிறார் சுந்தர மகாலிங்கம். அதே ஊரில் பவர் இஸ்திரி கடை நடத்துகிறார் தாமினி. இவர்களுக்குள் காதல் . அந்த ஊரில் புதிதாக ஆர் டி ஓ அதிகாரியாக பொறுப்பேற்கும் கண்டிப்பான பெண் அதிகாரிருக்கு ஆண்களிடம் பலவீனம். தன் தோழிக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் பெண் அதிகாரி தனிமையிலிருப்பதைப் பார்க்கிறார் தாமினி. இதை ஊர் அறியச் செய்ததால் ஆத்திரம் அடைகிறார். தன்னை இழிவுபடுத்தியது தாமினி தான் என்று எண்ணி தாமினி உள்ளிட்டவர்களை கொலை செய்ய முடிவு செய்கிறார். இதன் முடிவு என்ன என்பதை கிளைமாக்ஸ் விளக்குகிறது.
நாயகன் உமாபதி ராமையா நடித்திருக்கிறார். உமாபதி நடிப்பில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார். தன்னுடய நண்பன் பால சரவணனுடன் சேர்ந்து காமெடி கலாட்டாவும் செய்கிறார் ஆக்ஷன் காட்சிகள், நடனக் காட்சியிலும் நடித்து அசத்துகிறார்.
தாமினியாக வரும் சம்ஸ்கிருதி இலகுவான கதாபாத்திரம் என்பதால் அதை எளிதாக நடித்துவிட்டு செல்கிறார். இவரது தோழியாக வரும் வித்யூலேகா, தம்பி ராமையா, தேவதர்ஷினி காமெடி செய்கின்றனர்.
பெண் அதிகாரியாக வரும் வினுதா லால் உருட்டல் மிரட்டல், முறைப்பு என வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்.
நீளமான படமென்றாலும் படத்தை பொழுதுபோக்கு காமெடி கலந்து ஜனரஞ்சகமாக இயக்கியிருக்கிறார். சில காட்சிகளுக்குக் கத்தரி போட்டால் நன்றாக இருந்திருக்கும்.