ஒருகாலத்தில் நஞ்சையும் புஞ்சையும் செழித்து கொஞ்சி விளையாடும் மண்தான் தஞ்சை மண். இது சோழ மன்னன் வாழ்ந்த,ஆண்ட பூமி . இவருடைய காலத்தில் இருந்த தஞ்சை தற்போது கால ஓட்டத்தில் தடம் புரண்டு எவ்வாறு இருக்கிறது என்பதை 90 கால கட்டத்தில் நடப்பது போல் ‘வீரய்யன்’ படமாக உருவாக்கி வருகிறார்கள். மேலும் தந்தை வைத்துள்ள நம்பிக்கைக்காக மகன் எவ்வாறு போராடுகிறான் என்பதை படமாக்கியிருக்கிறார்கள்.
அப்சரா சாரா பிலிம்ஸ் தயாரிக்கும் படமான இதில் இனிகோ பிரபாகர் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ‘இந்தியா பாகிஸ்தான்’ நாயகி சுஷ்மா ராஜ் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் கயல் வின்சென்ட், தென்னவன், வேல ராமமூர்த்தி நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் திருநங்கை பிரித்திஷா அறிமுகமாகிறார்.
அருணகிரி இசையமைக்கும் இப்படத்திற்கு முருகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கி தயாரிக்கிறார் பரீத். இவர் எழுத்தாளர் கலைமாமணி கலைமணியிடம் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார். ‘கதிர்வேல்’ படத்தில் இணை இயக்குநராகவும், ‘களவாணி’ படத்தின் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இப்படம் குறித்து பரீத் கூறும்போது, ‘நான் தஞ்சையில் பிறந்து வளர்ந்தவன். முன்பு இருந்த செழிப்பு தஞ்சையில் தற்போது இல்லை. அதை நினைவு கூரும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கிறேன். இப்படத்தில் திருநங்கை பிரத்திஷாவை அறிமுகப்படுத்துகிறோம். நாயகனின் நண்பர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கையை வாழலாம் என்று வாழ்கிறார்கள். இவர்களுடன் நாயகனும் பயணிக்கிறான். இவர்களுடன் இருந்துகொண்டே தந்தையின் நம்பிக்கைக்காக எப்படி போராடுகிறான் என்பதை திரைக்கதையாக உருவாக்கியிருக்கிறேன்.
இன்னும் இப்படத்தில் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட இருக்கிறது. ஜனவரி மாதம் படத்தின் பாடல்களையும், பிப்ரவரி மாதம் படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளோம்’ என்றார்.