சினிமா எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்திருக்கிறது. எப்பாடு பட்டாலும் காதலியை நாயகன் அடைந்து விடுவான்.
சினிமாவைக் காதலிப்பவர்களும் அப்படித்தான் .எங்கிருந்தோ வந்து சினிமாவில் சங்கமித்து விடுவார்கள்.
இதற்கு உதாரணமாக நடிகர் பிரஷ் இருக்கிறார். இவரது இயற்பெயர் பிரஷாந்த் ஜெயக்குமார். சினிமாவுக்காக பிரஷ்.
பிறப்பால் சென்னைக்காரரான இவருக்கு, சிறுவயது முதல் சினிமா ஆர்வம். ஆனால் நெருங்க முடியவில்லை. இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்றார். அங்குள்ள பல்கலைக் கழகத்தில் அறிவியலில் முதுகலைப் பட்டம் எம்.எஸ்ஸி முடித்தார்.வேலை நிமித்தமாக கனடா போனார் அங்கு சில ஆண்டுகள் தங்கினார். அவருக்குள் ‘நீறுபூத்த நெருப்பு’ போல கனன்று கொண்டிருந்த சினிமா ஆர்வம் தலைதூக்கி ஒரு கட்டத்தில் தலைவிரித்தாடவே, தன்னைச் சினிமாவுக்கு முழுத் தகுதியாக்கிக் கொள்ள விரும்பினார்.
அங்குள்ள ‘சிட்டாடல் தியேட்டர்ஸ் அகாடமி’ என்கிற ஆக்டிங் ஸ்கூலில் நடிப்புப் பயிற்சி பெற்றார். அதுமட்டுமல்ல ‘சக்சஸ் லைப் ஒர்க்ஷாப்’ பில் திரைக்கதை எழுதும் பயிற்சியும் பெற்றார். அவர் நடிப்புப் பயிற்சி முடித்ததும் கனடாவில் ஒரு படத்துக்கான நடிகர்கள் தேர்வில் கலந்து கொண்டார். ஆச்சரியம் என்ன வென்றால் பிரஷ் தேர்வாகி விட்டார். அந்தப் படத்தில் முக்கிய வேடமும் ஏற்றார். அந்தப் படம்தான் ‘வித்தின் சர்க்கிள்ஸ்'( WITHIN CIRCLES) என்கிற கனடியப்படம். அதை இயக்கியவர் பிலிப் வில்சன்.இதுபற்றிப் பிரஷ் பேசும் போது,
” எனக்கு சின்ன வயதிலிருந்தே நடிப்பில் மீது ஆர்வம். சென்னையின் ‘ஐஐடி கேந்திரீய வித்யாலயா ‘பள்ளி,செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி,மான்செஸ்டர் பல்கலைக் கழகம் வரை மேடையேறி நடித்தவன் நான்.
ஹாலிவுட்டில் நடிப்பு பயிற்சி பெற்று விட்டுத்தான் நடிக்க வருகிறார்கள்.எனவே கனடாவில் நான் நடிப்பு பயிற்சி பெற விரும்பினேன். நான் அங்கு நடிப்புக்கான பயிற்சிபெற்றபோது முதலில் கற்றது நடிக்கும் போது நடிப்பது என்பதே இருக்கக் கூடாது என்பதுதான்.
அதாவது நடிப்பதே தெரியாமல் யாதார்த்தமாக இயல்பாக இருப்பதே நல்லநடிப்பு என்பதையே அங்கு கற்றேன். புதிய திசை தெரிந்ததுபோல் இருந்தது. புதிதாக எனக்குள் ஒரு ஜன்னல் திறந்தது போல ஒரு தெளிவு கிடைத்தது. எனக்கு பயிற்சி அளித்தவர் கனடிய நடிகை லியானா ஷெனன். சினிமா நுணுக்கங்களை இயக்குநர் பேரி ஜே.கில்லிஸ் கற்றுக் கொடுத்தார்.
இப்படி அவர்களிடம் பெற்ற பயிற்சி ,சினிமாவில் நடிக்க பெரிதும் நம்பிக்கை தந்தது. அதனால் முதல் படத்திலேயே பதற்றமில்லாமல் 200 சதவிகித நம்பிக்கையுடன் நடித்தேன்.
இப்போது இந்தியாவில்தான் இருக்கிறேன். நான் கனடாவில் ‘நிரந்தரமாக தங்கியிருப்பவர் ‘என்கிற வசிக்கும் உரிமையைப் பெற்று இருக்கிறேன். எப்போதும் இங்கு வந்து போகத்தடையில்லை.
எனக்கு தமிழில் நடிக்க மிகவும் விருப்பம். நான் ஒரு திரைக்கதை கூட எழுதிவைத்திருக்கிறேன்’ என்கிறார்.
நம்நாட்டில் நிலவும் வன்கொடுமைகள், பெண்கொடுமைகள், கொலை, கொள்ளை .ஊழல், பாலியல்கொடுமை எல்லாம் அளவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. புராணத்தில் கல்கி அவதாரம் எடுப்பது போல் நாயகன் இவற்றைக்களைய எடுக்கும் அவதாரம்தான் கதை. கை கோர்க்க தயாரிப்பாளர் கிடைத்தால் இயக்கவும் தயாராக இருக்கிறார். இது மெகா பட்ஜெட் படம். தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழியில் உருவாக்கும் திட்டமுள்ளதாம். தமிழில் ‘புத்தம்புது பூமி’ என்கிற பெயரிட்டுள்ளார்.இந்தியில் , ‘ புனர் நிர்மான் ஜமீன்’ ,ஆங்கிலத்தில் ‘ ஸ்டார்ஸ் ஆன் ரீபில்ட் எர்த்’ என்பது பெயர்கள்.
” என்னிடம் கதையையோ , நடிப்பையோ ‘கேளுங்கள் தரப்படும் தோண்டுங்கள் கிடைக்கும். ” என்று கூறுகிறார் பிரஷ் நம்பிக்கையுடன்.
கனவு கண்களில் மின்னுகிறது. ‘கடைவிரித்தேன் கொள்வார் யார் ? ‘என்று கேட்கிறார்.
பிரஷ்ஷுக்கு பிரெஷ்ஷாக ஒரு பிரகாச வாய்ப்பு வருமா? வந்துவிட்டால் வென்று விடுவார்.
ஏனென்றால் காதலியை மட்டுமல்ல சினிமாவையும் தேடிப்பிடித்தால் ஜெயித்து விடலாம்.