நாம எவ்வளவுதான் புத்திசாலித்தனமாக கணக்கு போட்டாலும் அதே பிரச்சனைக்கு வாழ்க்கை வேற ஒரு கணக்கு போட்டு வைத்திருக்கும். பின்பு நமக்கு நடக்கும் நிகழ்வுகளை பார்த்து சிரிப்பதா இல்லை அழுவதா என்று புரியாத நிலையில் நாம் தள்ளப்படுவோம். இந்த கதைக்கருவை மையமாக வைத்து விறுவிறுப்பும், நகைச்சுவையும் கலந்து உருவாகியிருக்கும் படம் தான் “அதாகப்பட்டது மகாஜனங்களே”.
வித்தியாசமான தலைப்புக்கான காரணம் படத்தின் இறுதிக் காட்சியில் தெரியவரும்.
பிரபல இயக்குநர் மற்றும் குணச்சித்திர நடிகரான தம்பிராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக இப்படத்தில் அறிமுகமாகிறார். தெலுங்கில் பிரபல கதாநாயகியான ரேஷ்மா ரத்தோர் இத்திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். கருணாகரன் நகைச்சுவை கலந்த வித்தியாசமான கதாபாத்திரத்தில் படம் முழுக்க வருகிறார். மற்றும் ஆடுகளம் நரேன், பாண்டியராஜன் , மனோபாலா புதுமுக நடிகர் தயாளன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்திற்காக மீண்டும் மீண்டும் கேட்டு மகிழும் வகையில் அட்டகாசமான பாடல்களை உருவாக்கியிருக்கிறார் D. இமான். பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். அட்டகத்தி மற்றும் குக்கூ படங்களின் ஒளிப்பதிவாளர் PK வர்மா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் . கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இன்பசேகர்.
சில்வர் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பாக S ரமேஷ்குமார் தயாரித்திருக்கிறார். விரைவில் இத்திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறவிருக்கிறது. அதை தொடர்ந்து படம் திரைக்கு வரவிருக்கிறது.