‘தருணம்’ திரைப்பட விமர்சனம்

கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட், ராஜ் அய்யப்பா, பால சரவணன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘தேஜாவு’ படப்புகழ் இயக்குநர் அர்விந்த் ஶ்ரீநிவாசன் இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவு – ராஜா பட்டாசார்ஜி, இசை – தர்புகா சிவா, பின்னணி இசை – அஸ்வின் ஹேமந்த், படத்தொகுப்பு – அருள் இ.சித்தார்த், கலை இயக்கம் – வர்ணாலயா ஜெகதீசன்.ஜென் ஸ்டுடியோஸ் சார்பில், தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் தயாரித்துள்ளனர்.

கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட் ஆகிய இருவருக்கும் திருமணம் செய்து வைக்க,அவர்களது பெற்றோர் முடிவு செய்கிறார்கள்.அவர்களது நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அதற்கு முதல் நாளில், ஸ்ம்ருதி வெங்கட் ஓர் அசந்தர்ப்பத்தில் ஒருவரைத் தள்ளிவிட தலையில் அடிபட,அது கொலையாகிறது அல்லது கொலையாக நம்பப்படுகிறது.அந்தக் கொலையை மறைக்க இருவரும் திட்டமிடுகிறார்கள். ஸ்ம்ருதி வெங்கட் ஏன் கொலை செய்கிறார்?கொலையை மறைக்க கிஷன் தாஸ் பெரிதும் உதவுகிறார் திட்டமிட்டபடி கொலையை அவர்களால் மறைக்க முடிந்ததா, இல்லையா? என்பதே ‘தருணம்’ படத்தின் திரைக்கதை செல்லும் பாதை.

படத்தின் கதைக்குப் பொருத்தமாக தருணம் என்ற தலைப்புச்சொல் அமைந்துள்ளது.கொக்கு வாய்க்கால் கரையில் பெரிய மீன் வருவதைப் பார்த்துக் கொண்டு அந்தக் தருணத்திற்காகக் காத்திருப்பது போல் கிஷன் தாஸ், ஸ்ம்ருதி வெங்கட் தங்களை சிக்கலுக்கு உள்ளாக்கி இருக்கும் பிணத்தை அப்புறப் படுத்த காத்திருக்கும் நேரத்தையே தருணம் என்று புரிந்து கொள்ளலாம்.
கொலை நடந்து விட்டது .அதில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காகக் கதாநாயகன் செய்யும் தந்திரங்களும் திட்டமிடல்களும் நகர்வுகளும் பரபரப்பின் ஊடாகவே சுவாரஸ்யமும் தருபவை.இடையே டேட்டிங்,பாலியல் அத்துமீறல், தவறாகப் பயன்படுத்துதல், மிரட்டல் போன்றவை சார்ந்த காட்சிகள் உள்ளன.

கிஷன் தாஸ், காவல்துறையில் பணிபுரிபவராக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து, தன்னால் முடிந்தவரை ஸ்ம்ருதி வெங்கட்டுடன் ரொமான்ஸ் செய்கிறார். வில்லன்களுடன் அடிதடியும் செய்கிறார்.நல்லதொரு தோற்றத்தில் வருகிறார் அவர் தோற்றம் அவரது நடிப்பின் குறைகளை நிவர்த்தி செய்கிறது.
ஸ்மிருதி வெங்கட்டுக்கு நல்லதொரு போட்டோ ஜெனிக் முகம்.பயம், பீதி,குற்ற உணர்ச்சி போன்றவற்றை வெளிக்காட்ட அந்த முகம் நன்றாகவே உதவுகிறது. அந்தக் காட்சிகளில் அவர் காட்டியுள்ள முகபாவனைகள் இயல்பாக உள்ளன.பால சரவணன் கிஷனின் நண்பனாக வருகிறார்.மதுபான பலவீனம் உள்ளவராக அவர் வருகிற காட்சிகள் சிரிப்பு மூட்டும் ரகம்.

ராஜ் அய்யப்பா, கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலரும் துணைப் பாத்திரங்களில் வந்து தங்கள் கடமையைச் செய்து விட்டுச் சென்றுள்ளனர்.

வீட்டுக்குள், லிப்ட் , அடுக்ககம் என குறைந்த அளவிலான கதை நிகழ்விடங்களை வைத்துக்கொண்டு ஒரு திருப்தியான கிரைம் திரில்லரைக் கொடுத்துள்ள அரவிந்த் ஸ்ரீனிவாசன் பாராட்டுக்குரியவர்.திரைப்பட உருவாக்கத்தில் முதிர்ச்சி காட்டி சுருக்கமான வசனங்களில் காட்சிகளை விளங்க வைத்து ,நடிப்புக் கலைஞர்களிடம் இயல்பான நடிப்பை வாங்கி திரைப்பட உருவாக்கத்தில் பளிச்சிடுகிறார் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன்.இந்தப் படம் தனியே வந்திருந்தால் வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ள போது பொங்கல் வெளியீடாக வந்துள்ளது.திரையரங்கு சென்று பார்ப்பவர்களுக்கு திருப்தி நிச்சயம்.  ‘தருணம்’மொத்தத்தில் புதிய திரில்லர் அனுபவம்.

 

.