‘தலைநகரம் 2 ‘ விமர்சனம்

சுந்தர் சி,பாலக் லால்வானி, தம்பி ராமையா, பாகுபலி பிரபாகர், ஆயிரா, ஜெய்ஸ் ஜோஸ், விஷால் ராஜன், சேரன்ராஜ் நடித்துள்ளனர்.
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் .வி. இசட். துரை. ஒளிப்பதிவு ஈ . கிருஷ்ணசாமி, இசை ஜிப்ரான், எடிட்டிங் ஆர். சுதர்சன்,ஸ்டண்ட் டான் அசோக். ரைட் ஐ தியேட்டர்ஸ் மற்றும் அருந்தவம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளன. தயாரிப்பில் தயாரிப்பாளர் எஸ் .எம் .பிரபாகரனுடன் இயக்குநர் துரையும் இணைந்துள்ளார்.

சுந்தர்சிக்கு 2006-ல் நாயகனாக அழுத்தமான அறிமுகம் கொடுத்த படம் ‘தலைநகரம்’.16 ஆண்டுகள் கழித்து அதன் தொடர்ச்சியாக ‘தலைநகரம் 2 ‘அதன் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.

முதல் பாகத்தில் சுந்தர் சி தன்னுடைய நண்பன் மரணத்திற்குப் பிறகு அமைதிப் பாதைக்கு திரும்புவதாகக் காட்சிகள் இருக்கும்.அதன் தொடர்ச்சியான இந்தப் படத்தில் திருந்தி வாழும் சுந்தர் சி ,தம்பிராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் சென்னையில் வடக்கு, தெற்கு, மத்திய சென்னை என்று பகுதிகளைப் பிரித்துக் கொண்டு ஆட்டிப்படைக்கும் மூன்று ரவுடிகளுக்குள் அதிகாரப் போட்டி நிலவுகிறது. யாரை யார் விழுங்கி அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்கிற போட்டி பலமாக முற்றுகிறது.
அடிதடி மோதல் பாலியல் வன்கொடுமை என்று திரியும் ரௌடிகள் தம்பி ராமையா உடன் ஒரு பிரச்சினையில் சீண்டுகிறார்கள். அது சுந்தர் சி வரை வந்து சேர்கிறது.சுந்தர் சி மீண்டும் பழைய ரவுடியாக மாறுகிறார். இறுதியில் தலைநகரத்தைக் கைப்பற்றுபவர் யார் என்ற கேள்வியை நோக்கிச் செல்கிறது கதை முடிவு.

சுந்தர் சி ஆக்சன் காட்சிகளில்  மிரட்டி எடுத்திருக்கிறார்.முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அவ்வளவு ஆக்சனையும் செய்கிறார்.மூன்று ரவுடிகளையும் தனியாளாகச் சந்தித்து அதகளம் செய்கிறார்.

தம்பி ராமையா அவரது மகள் ஆயிரா சார்ந்த தந்தை மகள் பாசக்காட்சிகள் ரசிக்க வைப்பவை.நான்கு வில்லன்களுடன் மூன்று வில்லிகளும் சேர்ந்து கலக்கியுள்ளார்கள். வில்லன்களில் பாகுபலி பிரபாகர் மட்டுமே தெரிந்த முகமாக உள்ளார். மற்றவர்களையும் முகம் தெரிந்தவர்களாகப் போட்டிருந்தால் படத்திற்கு மேலும் நட்சத்திர பலம் கூடி இருக்கும்.

படத்தின் கதாநாயகி பாலக் லால்வானி நடிகையாக இருந்து கொண்டு வில்லனுக்கு ஆசை நாயகியாக இருக்கிறார். அதன்பின் சுந்தர் சி மீது அவரது மனதைப் புரிந்து கொண்டு அவரைக் காதலிக்கிறார் என்பது சற்று மிகையாகத் தெரிகிறது.முதல் பாகத்தில் வடிவேலுவின் நகைச்சுவை பிரபலமாக இருந்தது. இதில் நகைச்சுவைக் காட்சிகள் மிஸ்ஸிங்.

இயக்குநர் துரை ஒரு பாத்திரத்தில் வருகிறார்.முழு நீள வணிகப் படத்தை தன்னால் இயக்க முடியும் என்று இதில் அவர் நிரூபித்துள்ளார்.ஆனால் அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகளைக் கொண்டு படத்தை உருவாக்கியுள்ளார்.ஸ்டண்ட் மாஸ்டர் டான் அசோக் படம் முழுக்க பிஸியாக இருந்திருக்கிறார் போலும். வெட்டு குத்து, கொலை, ரத்தம் என்று வன்முறை கொடி கட்டிப் பறக்கிறது.மோசமான ஆட்கள் கொடூரமானவர்கள் என்பதைக் காண்பிப்பதற்காக பழிவாங்கல் வன்முறைக் காட்சிகளை இவ்வளவு கொடூரமாகக் காட்டி இருக்க வேண்டாம். தலை நகரமா? இல்லை கொலை நகரமா? ஒளிப்பதிவாளர் கிருஷ்ணசாமி தன் கேமராவில் ரத்தம் தெறிக்க காட்சிகளை எடுத்துள்ளார்.ஜிப்ரானின் இசை படத்திற்குப் பெரும் பலமாகவே உள்ளது.எப்படியாவது ஒரு வணிக ரீதியிலான வெற்றிப் படம் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இயக்குநர் துரை அளவுக்கு அதிகமாகவே ஆக்சன் காட்சிகளை வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். ஆக்சன் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.