‘தலைவன் தலைவி’ திரைப்பட விமர்சனம்

விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு ,செம்பன்,பருத்திவீரன் சரவணன், ஆர் கே சுரேஷ், காளி வெங்கட், மைனா நந்தினி, தீபா சங்கர், ஜானகி சுரேஷ் ,சிறுமி மகிழினி , அருள்தாஸ், வினோத் சாகர், ரோஷினி, முத்துக்குமார், சென்ட்ராயன், கிச்சா ரவி, ரோகன், ஆதித்யா கதிர் நடித்துள்ளனர்.

எழுதி இயக்கி உள்ளார் பாண்டிராஜ்.இசை : சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு :எம் சுகுமார், கலை இயக்கம் : கே. வீரசமர், படத்தொகுப்பு: பிரதீப் ஈ ராகவ்,சண்டை இயக்குநர் : கலை கிங்ஸன்.

சத்யஜோதி பிலிம்ஸ் டிஜி தியாகராஜன் வழங்கும் இப்படத்தை செந்தில் தியாகராஜன் ,அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர்.

ஆகாச வீரன் எனப்படும் விஜய் சேதுபதி, பேரரசி எனப்படும் நித்யா மேனன் இருவருக்குள்ளும்  குடும்பத்தினர் ஏற்பாட்டில் பெண் பார்க்கும் சம்பிரதாயத்திற்குப் பிறகு பரஸ்பர பிரியம் ஏற்படுகிறது.இரு குடும்பத்திற்கும் பெரிதாக விருப்பமில்லை. என்றாலும் குடும்பத்தின் தயக்கத்தை மீறி இருமன சம்மதத்தோடு திருமணம் செய்து கொள்கின்றனர்.

திருமணத்திற்குப் பிறகு இருவரிடையே பேதமும் கோபமும் கடந்த முரட்டுத்தனமான அன்பு உண்டு.ஆயிரம் சண்டை வம்புகள் இருந்தாலும் உரிமையும் அன்பும் நிலவுகிறது. அன்றாடம் மோதலுக்குள் காதலுடன் வாழ்கிறார்கள் .ஆனால் கௌரவம் என்கிற பெயரில் இரு குடும்பத்தினர் செய்யும் அழுத்தத்தால் அவர்கள் பிரிய நேர்கிறது .மீண்டும் அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா என்பதுதான்140.08 நிமிடங்கள் கொண்ட இந்த ’தலைவன் தலைவி ’படத்தின் மீதிக்கதை.

டைட்டில் பெயர்கள் காட்டும் போது நடிகர்கள் பெயர் போடாமல் அந்த பாத்திரங்களின் பெயர்கள் போடப்படுகின்றன. அவ்வப்போது ’என்ன நடந்துச்சுன்னா? ’என்ற பாணியில் பிளாஷ்பேக் படத்தின் பெரும்பகுதிக் கதை சொல்லப்
படுகிறது

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஆகாச வீரனாக ஓட்டல் வைத்திருப்பவராக நடித்துள்ளார் .பரோட்டா மாஸ்டராக இருக்கும் அவர் உணவு பதார்த்தங்கள் செய்வதில் நிபுணராக இருக்கிறார்.அவர் ஓட்டலில் பரோட்டா ஆம்லெட் போன்ற பலகாரங்கள் போடும் பின்புலக் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். இயல்பில் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்ட அவர் மனைவி விஷயத்தில் அனைத்தையும் தளர விடுகிறார் .மனைவி மீது அளவற்ற அன்பும் காதலும் கொண்டவர் என்றாலும் குடும்பத்தினரின் அன்புக் கட்டளையை மீற முடியாமல் தவிக்கிறார். இப்படி விட இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கும் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் .கொஞ்சம் அளவுக்கு அதிகமாக நடித்துள்ளதுதான் சற்று நெருடல்.

பேரரசியாக நித்யா மேனன் வருகிறார். அவர் படித்தவர் அவரை யாரும் ஏமாற்ற முடியாது .ஆனால் கணவர் சொல்லும் பொய்களையும் செய்யும் பிழைகளையும் புரிந்து கொள்கிறார். கோபப்படுகிறார். ஆனாலும் பொறுத்து மன்னித்து விட்டுத்தான் அவரை ஏற்கிறார் .இந்தக் கதாபாத்திரத்தில் தடம் மாறாமல் அவர் நடித்துள்ளார். துறுதுறுப்புடன் ஆயிரம் முக பாவனைகளில் அவர் நடிப்பில் காட்டியுள்ள வர்ணஜாலம் ரகளை. கணவன் மனைவி இருவருக்குள் நடக்கும் கூடல்கள், ஊடல்கள், ஜாலி ரகளை ரசிக்க வைக்கின்றன.

யோகி பாபு சித்திரை என்கிற திருடனாக வருகிறார். அவர் கதையில் வழிப்போக்கன் போல் வந்து ஆங்காங்கே குறுக்கிட்டு  கமெண்ட் அடித்து சிரிக்க வைக்கிறார். பருத்தி வீரன் சரவணன் விஜய் சேதுபதியின் தந்தையாக வருகிறார் .அந்த ஓட்டல் முதலாளியாக வரும் அவர் நடிப்பில் குறை ஒன்றும் இல்லை. ஆர் கே சுரேஷ் நித்யாவின் அண்ணனாக முரட்டுத்தனமான பாத்திரத்தில் வருகிறார். படம் முழுக்க முறைப்புடன் திரிகிறார், சண்டை போடுகிறார். காளி வெங்கட் விஜய் சேதுபதியின் உறவினராக வருகிறார். அவரை சரியாகப் பயன்படுத்தவில்லை, மைனா நந்தினி அவரது ஜோடியாக வருகிறார்.இதில் விஜய் சேதுபதியின் அம்மாவாகவும் நித்திய மேனனின் மாமியாராகவும் வரும் தீபா சங்கர் அந்த துடுக்கான பொட்டு பாத்திரத்தில் பெரிதாக ஸ்கோர் செய்துள்ளார்.நித்யா மேனனும் அவருமே படத்தில் அடித்து ஆடி உள்ளனர்.ஜானகி சுரேஷ் ,சிறுமி மகிழினி ,அருள்தாஸ், வினோத் சாகர், ரோஷினி, முத்துக்குமார், சென்ட்ராயன், கிச்சா ரவி, ரோகன், ஆதித்யா கதிர் ஆகியோரும் தாங்கள் ஏற்றுக்கொண்ட துணைப் பாத்திரங்களில் வருகிறார்கள். 

இந்த படத்தில் ஆகாச வீரனும் பேரரசியும் அடித்தாலும் பிடித்தாலும் ஒன்று சேர்ந்து கொள்வார்கள்.அவர்களுக்குள் கௌரவமோ மானமோ ஆணவமோ இல்லை.அதைக் கடந்து புரிந்து கொண்டவர்கள் . எனவே அவர்களுக்குள் பிரிதல் என்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அவர்கள் பிரிதலுக்கான ஆழமான காரணமும் ஏற்கும்படி சரியாகச் சொல்லப்படவில்லை.  அப்படிச் சொல்லப்பட்டிருந்தால் இந்தக் கதை ஆழப்பட்டிருக்கும்.

மதுரை மண் சார்ந்த கதை. அதனால் அந்த கிராமத்துப் பின்புலக் காட்சிகள் எதார்த்தமாக உள்ளன .குறிப்பாக அந்த தூண்டில் கருப்பசுவாமி கோயில் பின்புலம் காட்சிகளுக்கு நல்ல பின்னணியாக உள்ளது.

எம். சுகுமாரின் ஒளிப்பதிவு வண்ணங்களின் இயல்பு மீறாமல் உள்ளது. சந்தோஷ் நாராயணனின் இசை ஓகே ரகம்.

இந்தப் படத்தின் கதையை விஜய் சேதுபதி, நித்யா மேனன் என்கிற நட்சத்திரங்களை மனதில் வைத்து எழுதப்பட்டுள்ளது நன்றாகத் தெரிகிறது.அதனால் பல இடங்களில் நாடகத் தன்மை எட்டிப் பார்க்கிறது.இதுதான் இந்தப் படத்தின் பலவீனமாகத் தோன்றுகிறது.படத்தில் ஆங்காங்கே மூச்சு விட்டால் கூடஅரிவாளைத் தூக்கிக்கொண்டு படைபடையாகக் கிளம்புகிறார்கள். எடுத்ததற்கெல்லாம் சண்டை போட்டுக் கொண்டு அலுப்பூட்டுகிறார்கள். ஆனாலும் விஜய் சேதுபதி, தனது மனைவியிடம் அடி வாங்குபவராக நட்சத்திர பீடத்திலிருந்து இறங்கி நடித்துள்ளதையும் நித்யா மேனன் ,தீபா சங்கர் போன்றவர்கள் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளதையும் பார்ப்பதற்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம்.

மற்றபடி ஒரு குடும்பத்தில் நடக்கும் நாடகத் தருணங்களையும் செல்லமான சண்டைகளையும் காண பொழுதுபோக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.