புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் திருமதி தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் ‘எவன்’. அறிமுக இயக்குநர் துரை முருகன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் திலீபன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தீப்தி மானே நடித்திருக்கிறார் இவர்களுடன் ஜே கே சஞ்சீத் உஜ்ஜைனி ராய் கானா பாலா பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. சிவராமன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ.கே. சசிதரன் இசை யமைத்திருக்கிறார் படத்தொகுப்பு பணிகளை பாலா கவனிக்க இப்படத்தில் இடம்பெறும் பாடல்கள் மறைந்த புலவர் புலமைப்பித்தன் விவேகா கானா பாலா ஏகா ராஜசேகர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். ஏப்ரல் ஏழாம் தேதியன்று வெளியாகவிருக்கும் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பவர் ஸ்டார் சீனிவாசன், நடிகை ஷனம் ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினார்களாக கலந்து கொண்டனர். இவர்களுடன் கவிஞர் மதுரா, வழக்கறிஞர் மோகன், புலமைப்பித்தனின் உதவியாளரான குணசேகரன்,உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். மறைந்த புலவர் புலமைப்பித்தனின் மனைவியும், ‘எவன்’ படத்தின் தயாரிப்பாளருமான திருமதி தமிழரசி புலமைப்பித்தனும் கலந்துகொண்டார்.
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசுகையில், ” எவன் படத்தின் டைட்டில் சூப்பராக இருக்கிறது.. கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். நான் ஒரு முறை படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் தருணத்தில் தம்பி திலீபன் அருகே இருபதாவது மாடியிலிருந்து டுப் போடாமல் குதிக்கும் சண்டைக்காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. நான் ஒரு படப்பிடிப்பில் சிறிது தூரத்திற்கு நடக்கும் போது வழுக்கி விழுந்து முதுகு தண்டில் அடிபட்டு சிகிச்சை பெற்றேன். நான் பாதுகாப்பு அம்சங்களை கடைப்பிடிக்காமல் நடித்ததால் விபத்தில் சிக்கினேன். தற்போது சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக குணமடைந்து, தற்போது ‘பிக்கப்’ எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறேன்.
படப்பிடிப்பில் சண்டை காட்சிகளில் நடிக்கும் போது பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க வேண்டும். இல்லையெனில் விபத்து ஏற்படும். ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாகும். அதனால் தம்பி திலீபனும் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் போது பாதுகாப்பு அம்சங்களுடன் நடிக்க வேண்டும் அதுதான் நமக்கும் நல்லது.
2008 ஆம் ஆண்டில் நான் திரையுலகிற்கு அறிமுகமானனேன். இதுவரை 100 படங்களில் நடித்திருக்கிறேன். நூறாவது படம் தான் ‘பிக்கப்’. தம்பி திலீபன் நடித்திருக்கும் ‘எவன்’ திரைப்படம், ஏப்ரல் ஏழாம் தேதி அன்று 360 திரையரங்குகளில் வெளியாகிறது என்றார். படம் உலகம் முழுவதும் பெரிய வெற்றியை பெற வேண்டும். திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓட வேண்டும். இல்லையெனில் நான் ஓட வைத்து விடுகிறேன்.
என்னுடைய ‘லத்திகா’ திரைப்படத்தில் மறைந்த புலமைப்பித்தன் ஐயா எழுதிய ‘நீங்க நல்லா இருக்கணும்..’ என்ற பாடலை கண்டிப்பாக வைக்க வேண்டும் என்று திட்டமிட்டு, அவரிடம் அனுமதி பெற்று வைத்தோம். இந்த பாடலுக்காகவே அந்த படம் 350 நாட்கள் ஓடியது. அவருடைய பேரன் திலீபன் நடித்திருக்கும் ‘எவன்’ படமும் கண்டிப்பாக ஓடும். இந்த படம் வெற்றி பெறுவதற்கு அவருக்கு உறுதுணையாக இருப்பேன். அவர் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து திரையுலகத்தில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும். என்னுடைய படத்திலும் அவர் நடிக்க வேண்டும். அவருடைய படத்திலும் நான் நடிப்பேன்.
ஊடகங்களுக்கு நான் ஒரு அன்பு வேண்டுகோள். என்னை பற்றி தவறான செய்திகளை வெளியிடாதீர்கள். ஏன் அப்படி? அவதூறான செய்திகளை வெளியிடுகிறீர்கள் என எனக்கு தெரியவில்லை. இதனால் உங்களுக்கு என்ன லாபம்? என்றும் எனக்கு தெரியவில்லை. ஆனால் அது என்னை மிகவும் பாதிக்கிறது.. ஊடகங்களை எப்போதும் நான் என்னுடைய வளர்ச்சிக்கான கண்களாகத்தான் காண்கிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனை பயன்படுத்தி கொள்கிறேன். ‘பிக்கப்’ என்ற படத்திற்கு ஒரே ஒரு போஸ்டரை மட்டும்தான் வெளியிட்டேன். இதுவரை அந்த போஸ்டரை மட்டும் மூன்று கோடி பேர் பார்த்திருக்கிறார்கள்.
நான் அனைவரையும் தம்பி! தம்பி! என்று தான் அழைப்பேன். ஆனால் ஹீரோ திலீபனை எனக்கு முன்னால் அவரது தாத்தா புலமை பித்தன் ஐயா, ‘தம்பி’ என்று அழைத்திருக்கிறார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
‘எவன்’ திரைப்படம் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் கண்டு ரசித்து திலீபனுக்கு திரையுலகில் நிலையான இடத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.



நடிகை ஷனம் ஷெட்டி பேசுகையில், ” மறைந்த புலவர் புலமை பித்தன் எழுதிய ‘தென்பாண்டி சீமையிலே..’ எனும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அந்த பாடலைக் கேட்கும்போது மனதில் எழும் உணர்வை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.. ஐயாவை நேரில் சந்திக்க முடியவில்லை என்ற ஏக்கம் என்னுள் இருக்கிறது. ஆனால் அவருடைய ஆசீர்வாதம் இந்த அரங்கத்தில் இருக்கும் அனைவருக்கும் இருக்கிறது. அவருடைய பேரன் நடித்திருக்கும் ‘எவன்’ திரைப்படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.. இந்தப் படத்தின் இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
சின்ன படம்.. பெரிய படம் ..என்ற வித்தியாசம் ரசிகர்களுக்கு தெரியாது. நல்ல படமாக இருந்தால் நிச்சயம் அனைவரும் ஆதரவு தருவார்கள். புதுமுக கலைஞர்களுக்கும், வளரும் கலைஞர்களுக்கும் ஊடகங்களும், ரசிகர்களும் ஆதரவளிக்க வேண்டும்.
தமிழ் எனக்கு பிடித்த மொழி. எனக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ.. அப்போதெல்லாம் தமிழில் பேசுவதற்கு பயிற்சி எடுக்கிறேன். தமிழில் பேசுவதற்கும் விரும்புகிறேன்.
இந்த திரைப்படத்தில் எந்த விஷயத்தை புதிதாக சொல்ல வருகிறீர்கள் என கேட்டபோது நாயகன் ஒரு கின்னஸ் சாதனையாளர் என படக் குழுவினர் விவரித்தனர் அதைக் கேட்டவுடன் வியந்து போனேன். படத்தில் இடம்பெறும் ஆபத்தான சண்டைக் காட்சிகளில் அவரே கடினமாக உழைத்து நடித்திருக்கிறார். நடிப்பதற்காக பயிற்சியும், படத்தை இயக்குவதற்காக லண்டனில் பயிற்சியும் பெற்றிருக்கிறார் என கேட்டபோது, ஆச்சரியப்பட்டு பாராட்டினேன். சக நடிகையாக அவரது இந்த கடினம் முயற்சி எனக்கு உத்வேகத்தை அளிக்கிறது. அவருடைய கடின உழைப்பு நிச்சயம் வெற்றியை தரும்.
திரைப்படத்துறையில் பணியாற்றும் குறிப்பாக சண்டைக் காட்சிகளில் ஈடுபடும் கலைஞர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. ஆபத்து என தெரிந்தும், துணிந்து சண்டை காட்சிகளில் நடிக்கும்போது பாதுகாப்பு அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் பணி பாதுகாப்பு குறித்த காப்பீடுகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
ஏப்ரல் ஏழாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் ‘எவன்’ திரைப்படத்தை கண்டு ரசித்து இளம் நாயகன் திலீபனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.
படத்தின் நாயகனான திலீபன் பேசுகையில், ” முதலில் என்னுடைய பாட்டிக்கு நன்றி சொல்கிறேன். இந்தத் திரைப்பட தயாரிப்பின் போது இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தின் பணிகள் தடைப்பட்ட போது பாட்டி தான் 30 லட்சம் ரூபாய் நிதி உதவி செய்து படத்தின் பணிகளை தொடரச் செய்தார். அதனால்தான் இந்த திரைப்படம் தற்போது புகழேந்தி புரொடக்ஷன்ஸ் என்னும் பட நிறுவனம் சார்பில் தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடுகிறார்.
இந்தப் படத்தில் நாயகனாக என்னை நடிக்க தேர்வு செய்த இயக்குநர் துரைமுருகனுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். புலவர் புலமை பித்தனின் பேரன் என்ற தகுதியில் நான் தேர்வு செய்யப்படவில்லை. இதற்காக கடினமாக உழைத்திருக்கிறேன்.
படத்தின் வெளியிட சில நாட்களுக்கு முன்னர் தான் தீர்மானித்தோம். இந்த சந்திப்பிற்கு சிறப்பு விருந்தினராக பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் பிக் பாஸ் புகழ் ஷனம் ஷெட்டி ஆகிய இருவரையும் அழைக்க வேண்டும் என விரும்பினேன். இருவரும் மன மகிழ்ச்சியுடன் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.
எனக்கு பவர் ஸ்டார் சீனிவாசன் அண்ணனை நன்கு தெரியும். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் நாயகனான சேதுவும், நானும் உடற்பயிற்சி கூட நண்பர்கள். அவருடன் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறேன். அங்கு பவர்ஸ்டார் சீனிவாசனின் நடிப்பு, படப்பிடிப்பு தளத்தில் அவர் உரையாடும் அணுகுமுறை ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவர் இங்கு பேசும்போது ஊடகங்கள், என்னைப் பற்றிய தவறான செய்தியை வெளியிடுகிறது என வருத்தப்பட்டார். அதற்காக வருத்தப்பட வேண்டாம். ஏனெனில் அண்டர்டேக்கர் என்ற அமெரிக்க விளையாட்டு வீரர் இறந்துவிட்டார் என ஏழு முறை செய்திகள் வெளியானது. ஆனால் அவர் இறக்கவில்லை. இன்றும் உயிருடன் தான் வாழ்ந்து வருகிறார். அதனால் உங்களைப் பற்றி தவறான செய்திகள் வந்தால், அதற்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் 200 ஆண்டுகள் வாழ்வீர்கள். தற்போதே நான் 175 ஆம் ஆண்டு ஆண்டிற்கான பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
2012 ஆம் ஆண்டில் நான் பார்த்த பவர்ஸ்டார் சீனிவாசனை விட, தற்போது கம்பீரமாக காட்சியளிக்கிறீர். அதனால் எப்போது நீங்கள் ரசிகர்களுக்கு மாஸ் தான்.
ஷனம் ஷெட்டி கலந்து கொண்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்ள தயாராக இருந்தேன். ஆனால் கடைசி தருணத்தில் என்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த சீசனை நான் முழுவதும் பார்த்தேன். ஷனம் ஷெட்டி தான் வெற்றி பெறுவார் என நான் உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தேன். அவருடைய அணுகுமுறை, பேச்சு இவையெல்லாம் எனக்கு பிடிக்கும். அவரும் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து பட குழுவினரை வாழ்த்தியதற்கு நன்றி.
நான் சிறிய வயதில் வீட்டிற்கு அடங்காத பிள்ளை. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போதே பைக் வாங்கி கொடுக்க வேண்டும் என்று அடம் பிடித்தேன். இதற்காக வீட்டிற்குள் ரகளை செய்தேன் மீன் தொட்டியை உடைத்தேன். வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்தேன். அதன் பிறகு என்னுடைய சித்தப்பா வழக்கறிஞர் மோகனின் பரிந்துரையின் பேரில் எனக்கு பைக் வாங்கி கொடுத்தார்கள். அங்கிருந்துதான் என்னுடைய லட்சியத்திற்கான பயணம் தொடங்கியது.
என்றைக்கும் நான் சினிமாவில் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று ஆசைபட்டதில்லை. நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருக்க வேண்டும் என்று தான் விரும்பினேன். பைக் ரேஸில் கலந்து கொண்ட போது நான் நிஜ நாயகனாகவே இருந்தேன். 2009 ஆம் ஆண்டில் நான் செய்த சாதனையை.. இதுவரை யாரும் முறியடிக்க வில்லை.
தாத்தா பாட்டியை நிறைய முறை கஷ்டப்படுத்தி இருக்கிறேன். எனக்கு யாராவது அறிவுரை கூறினால்.. அதனை நான் ஏற்க மாட்டேன். எனக்குள் தோன்றினால் தான்.. என்னை நான் மாற்றிக் கொள்வேன். அப்படி முடிவு எடுத்து தான் திரைத்துறைக்குள் நுழைந்தேன். நான் நேரடியாக என் தாத்தாவிடம் சென்று, என்னை நாயகனாக வைத்து ஒரு படத்தை தயாரித்து வெளியிடுங்கள் என்றால்… அவர் எனக்காக அதை செய்வார். ஆனால் நான் அப்படி கேட்கவில்லை. அவர் எப்படி சாதாரண நிலையிலிருந்து திரைத்துறைக்கு வருகை தந்து உயர்ந்தாரோ… அதேபோல் நானும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்று நினைத்தேன்.
லண்டன் பிலிம் அகாடமியில் சேர்ந்து படித்து, பிறகு ஜெயராவ் மாஸ்டரிடம் நடிப்பை கற்று இருநூறுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்த பிறகுதான் எனக்கு பள்ளிக்கூடம் போகாமலே என்னும் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ‘பள்ளிக்கூடம் போகாமலே’ படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்து தான் இயக்குநர் துரைமுருகன் ‘எவன்’ படத்திற்கான வாய்ப்பை வழங்கினார்.
தாத்தா இறந்த பிறகு மிகவும் மனம் உடைந்து சொந்த ஊருக்கு சென்று விட்டேன். பிறகு பாட்டி எனக்கு ஆறுதல் அளித்து, ‘எங்களுக்காக நீ இயல்பாக இருக்க வேண்டாம். நீ பைக் ரேஸில் கலந்து கொண்ட போதிலிருந்து இப்போது வரை உன் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உன் நண்பர்களுக்காக உன்னை நீ தேற்றிக்கொண்டு, மீண்டும் சென்னைக்கு வந்து, நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார். அவரது பேச்சில் உள்ள உண்மையை உணர்ந்து, அடுத்த நாளே சென்னைக்கு வந்து ‘எவன்’ படத்தின் பணிகளில் ஈடுபட்டேன். என்னுடைய நண்பர்களுக்காகவும் தொடர்ந்து திரை துறையில் பயணிக்க தீர்மானித்திருக்கிறேன்.
நான் தற்போது ‘சாகாவரம்’ என்னும் திரைப்படத்திற்கு கதை எழுதி, இயக்கி, கதாநாயகனாக நடித்து வருகிறேன். அதன் பிறகு ‘ஆண்டனி’ எனும் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும் படத்திலும் நடித்து வருகிறேன்.
‘எவன்’ படத்தின் கதை, அம்மா மகனை பற்றியது. அம்மாவிற்காக உயிரையும் கொடுப்பான். அம்மாவிற்காக உயிரையும் எடுப்பான் என்ற ஒரு வரி கதையை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது. இந்த படம் ஏப்ரல் ஏழாம் தேதி அன்று 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று ரசித்து, ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.