ஸ்ரீகாந்த் ,சிந்தியா லூர்தே,ராதா ரவி,எம். எஸ். பாஸ்கர்,பிரேம்ஜி,மீரா கிருஷ்ணன்,வினோதினி,சாந்தினி தமிழரசன்.சாம்ஸ்,குமார் நடராஜன்,சரத்,நவ்யா நடித்துள்ளனர்.
ஜி சங்கர் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .படத்தொகுப்பு ஸ்ரீகாந்த்.
சக்திவேல் என்கிற பெயரைக் கொண்ட ஸ்ரீகாந்த் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்.அவர் மனித வாழ்க்கை பணத்தின் அடிப்படையானதுதான் என்கிற கொள்கையைக் கொண்டவர்.தனக்கு மனைவியாகப் போகிறவர் தன்னைவிட அதிகம் சம்பாதிப்பவர் ஆக இருக்க வேண்டும் ,அப்போதுதான் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு மேலே செல்ல முடியும் என்று நம்புகிறார். அந்த வகையில் பெண் பார்க்கும் படலம் தொடர்கிறது.பல பெண்கள் அவரைப் புறக்கணிக்கிறார்கள்.
நாயகி சிந்தியா லூர்தே அதிகமான சம்பளத்துடன் நல்ல வேலையில் இருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு வேலைக்குச் செல்லாமல்,கணவன், குடும்பம் என்று வாழ நினைக்கிறார்.
இப்படி எதிர் எதிர் எண்ணங்களுடன் இருக்கும் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்குப் பிறகு இருவரது எண்ணங்களும் தெரிய வருகிறது. அதனால் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுகிறது.அதில் இருந்து மீண்டார்களா? இல்லையா ? என்பதைச் சொல்வதே ‘தினசரி’ திரைப்படம்.
படத்தின் தலைப்பு தினசரி . அதாவது தினசரி என்பது அன்றாடம் என்கிற நிலையைக் குறிக்கிறது. அன்றாடத்திற்காக உழைத்து வாழ்ந்து மடிந்து போகும் அவலச் சூழ்நிலையில் இருந்து மாறவே கதாநாயகன் நினைக்கிறார். அந்த வகையில் இந்தக் தலைப்பு பொருத்தமாக இருக்கிறது
நல்ல வேலை கைநிறை சம்பளம் என்று இருந்தாலும், அடுத்தக்கட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையை மனதில் வைத்துக் கொண்டு போராடும் நடுத்தர வர்க்கத்து வாலிபனாக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், தான் நினைத்தது நடக்கவில்லை என்றதும் மனம் வருந்தி தடுமாறும் காட்சிகளில் அழுத்தமாக நடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் இளமையாக இருப்பவர், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், மனமாற்றம் என அனைத்துவிதமான உணர்வுகளையும் அளவாகக் கையாண்டுள்ளார்.
நாயகியாக நடித்திருக்கும் சிந்தியா லூர்தே, அமெரிக்க வாழ் தமிழ்ப் பெண் கதாபாத்திரத்திற்குத் தோற்றத்திலும் சரி நடிப்பிலும் சரி பொருத்தமாக இருக்கிறார். அழகின் அளவு குறைவாக இருந்தாலும்,அவர் கண்ணில் தெரியும் நம்பிக்கை அழகாகத் தெரிகிறது.
ஸ்ரீகாந்தின் அப்பாவாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், அம்மாவாக நடித்திருக்கும் மீரா கிருஷ்ணன், அக்காவாக நடித்திருக்கும் வினோதினி,நல்ல குடும்பத்துச் சூழலைக் கண்முன் நிறுத்துகிறார்கள்.அதே சமயம் எம் எஸ் பாஸ்கர் – மீரா கிருஷ்ணன் சார்ந்த காதல் கதை தேவையற்ற ஒன்றாக இருக்கிறது. கதையில் போக்கிற்கு உதவவில்லை.
நண்பராக நடித்திருக்கும் பிரேம்ஜி மற்றும் கே.பி.ஒய்.சரத், சாம்ஸ், சாந்தினி தமிழரசன், ராதாரவி என அனைவரும் கொடுத்த வேலையைக் குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பழைய நெடியில் உள்ளன. வரிகள் புரிவது ஆறுதல்.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் பணி படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக நாயகன் ஸ்ரீகாந்தை பாடல் காட்சிகளில் அவரது இளமைக் கொடி பறக்கிறது.
படம் முழுவதும் வசனக் காட்சிகள் தான் அதிகம் என்பதால், படத்தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த் எந்தவித சுமையும் இன்றி பணியாற்றியிருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ஜி.சங்கர், இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்படக் கூடாது, என்ற பழமொழிக்கேற்ப தற்போதைய தலைமுறையினர் முன்னேற்றம் என்ற பெயரில் பணத்தின் பின்னாடி பயணித்து, வாழ்க்கையைத் தொலைத்து விடுகிறார்கள், என்ற கருத்தைச் சொல்லியிருக்கிறார்.
காதல், பாடல், காமெடி என அனைத்து கமர்ஷியல் அம்சங்கள் இருந்தாலும், அனைத்தையுமே காட்சி மொழியின் மூலம் சொல்லாமல் வசனங்கள் மூலமாகவே வெளிப்படுத்துவது திரைக்கதையை தொய்வடையச் செய்துவிடுகிறது. இருந்தாலும் நல்ல விசயத்தை நல்லபடியாக சொல்லி, குடும்பத்துடன் பார்க்கும் படமாக இயக்கியிருக்கும் இயக்குநர் ஜி.சங்கரை, எடுத்துக்கொண்ட நோக்கத்துக்காகப் பாராட்டலாம்.
தற்போதைய தலைமுறையினருக்கு வாழ்க்கையின் புரிதலையும், குடும்ப உறவுகளின் மேன்மையையும் புரிய வைத்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘தினசரி’ மக்களை இன்றைய குடும்பத்தினருக்கு ஏற்ற படம்.