அப்பா பொறுப்பான போலீஸ் கான்ஸ்டபிள். மகன் பொறுப்பற்றவன். அப்பாவே அவனுக்குப் பிடிக்காது. ஒரு நாள் என் கவுண்டரில் அப்பா கொல்லப்படுகிறார். மகனுக்கு போலீஸ் வேலை கிடைக்கிறது. சதியால்தான் அப்பா கொலை செய்யப்பட்டது எனவும் அவர் எவ்வளவு உயர்ந்த மனிதர் என்பதும் புரிகிறது. தந்தையைக் கொன்றவர்களை மகன் பழிவாங்குவதுதான் கதை.
இக் கருத்தை இக்காலத்துக்கு ஏற்றமாதிரி சொல்லியிருக்கிறார் இயக்குநர். பொறுப்பான தந்தையை வில்லனாகப் பார்க்கும் மகன், நேர்மையான போலீசை விரோதியாகப் பார்க்கும் மேலிடம், காசுக்கு சோரம் போகும் கயவாளி போலீஸ் , போலீஸ் கிரிமினல் தொடர்பு, அதிலும் மனசாட்சியள்ள போலீஸ், போலீஸ் வேலையின் அகவாழ்க்கை, நிழல் வாழ்க்கை, பணிச்சுமை, தொழில்சார்ந்த பிரச்சினைகள். எல்லாவற்றையும் பிரச்சார நெடியில்லாமல் யதார்த்தமாகவும். கல கலப்பாகவும் சொல்லி இருக்கும் இயக்குநர் கார்த்திக் ராஜுவை முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டலாம்.
நாயகன் அட்டகத்தி தினேஷ்.திருட்டு முழியுடன் தினேஷ், அடுத்து என்ன செய்வார் என்று யூகிக்க முடியாத பேச்சு, செயல்கள். ரசிக்க வைக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ்,சாட்சாத் தமிழ்ப்பட நாயகி.பாலாசரவணன், நிதின்சத்யா, நரேன், நான் கடவுள் ராஜேந்திரன் என எல்லாருமே அவரவர் பணியில் பாணியில் பளிச்சிடுகிறார்கள்.,
வீர வசனம், விலாவாரியான புள்ளி விவரம், அடிதடி, வெட்டுக்குத்து, துன்புறுத்தல் அலறல் சத்தம் இல்லாமல் படிப்பினை யூட்டும் ஒரு படம் இது. தலைப்பைப்பார்த்து தவறாக எடை போட வேண்டாம்.நம்ப முடியவில்லைதான்.தந்தைகளும் பொறுப்புள்ள பொறுப்பற்ற மகன்களும் போய்ப் பாருங்கள் .தவமாய் தவமிருந்து போல அழகியலாக இல்லாமல் கல கலப்பாக தந்தை மகன் பாசத்தைக்காட்டும் படம் இது .