அனைவரும் வன்முறையை கைவிட்டு அஹிம்சையை தேடிப் போகும் நாள்தான் உண்மையான ‘திருநாள் ‘ என்று இறுதியில் கருத்து கூறுகிறது படம். வன்முறையை மையமாக்கி கதை பின்னி காரம் ,மணம், மசாலா சேர்த்து பாஸ்ட் புட்டாக்கி ‘திருநாள’ படமாக பரிமாறியிருக்கிறார்கள்.
என்ன கதை?
கும்பகோணத்தில் மிகப் பெரிய தாதா நாகா. இவருடைய அடியாள் ‘பிளேடு’ என்னும் ஜீவா. நாகாவின் விசுவாசி.நாகாவுக்காக எதையும் செய்வார். எந்த கேவலத்தையும் அவமானத்தையும் தாங்கிக் கொள்வார்.
எந்த அளவுக்கு?
பல பேர் முன்னிலையில் செத்துப் போன தனது மனைவியையும் ஜீவாவையும் இணைத்துப்பேசி நாகா பொய் சொல்வதைக்கூட சாதாரணமாக இலகுவாக எடுத்துக் கொள்ளும் அளவுக்கு நாகாவிடம் அடிமையாக கிடக்கிறார் ஜீவா.
நாகாவும், ஜோ மல்லூரியும் வியாபாரக் கூட்டாளிகள். ஜோ மல்லூரியின் மகள் வித்யாதான் நயன்தாரா. நயன்தாராவின் கனவில் ஜீவா வந்து தாலி கட்டும் அளவுக்கு அவருக்குள் காதல் பொங்கிக் கிடக்கிறது. ஜீவாவும் நயன்தாராவை உள்ளுக்குள் காதலிக்கிறார். ஒருகட்டத்தில் இருவரும் இதனை வெளியில் சொல்கிறார்கள். இருவருக்குள்ளும் கனவுக்காட்சிகள் பொங்கி வழிகின்றன.
திடீரென்று தஞ்சை மாவட்டத்திற்கு ஏ.டி எஸ்.பி.யாக ‘நீயா நானா’ கோபிநாத் வருகிறார். வந்து சேர்ந்த இரண்டாவது நாளே ஏரியாவின் மிகப் பெரிய ரவுடியான ஜெயபாலனை என்கவுண்ட்டர் செய்கிறார் கோபிநாத். அடுத்த குறி தனக்குத்தான் என்பதை உணர்ந்து பீதியாகிறார் நாகா.
திடீரென்று நயன்தாராவுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறும் சமயம் பலர் முன்பாக ஜீவாவும், நயன்தாராவும் ஜோடியாக கையும் களவுமாகப் பிடிபடுகிறார்கள். இதனால் ஜோ மல்லூரி அவமானத்தில் ஊரைவிட்டுப் போக முடிவு செய்கிறார்.
நாகாவிடம் வந்து தனது பங்கு பணத்தைக் கேட்கிறார். கொடுத்தால் தான் தஞ்சாவூருக்கே போய் விடுவதாகச் சொல்கிறார். நாகா அவர் பணமே கொடுக்கவில்லை என்று சொல்லி ஏமாற்றுகிறார்.
ஜீவாவின் திருமணத்தை நடத்தி வைக்கவும் நாகா மறுக்கிறார். அப்படிச் செய்தால் ஜீவா கை ஓங்கி விடும் எனப்பயம். ஜீவாவுக்கு இது தெரிகிறது.
ஜோ மல்லூரியை தனது பங்கு பணத்தைத் திருப்பித் தராமல் நாகா ஏமாற்றவே, ஜீவா அதை நேரில் கண்ட சாட்சி சொன்னதால் பணம் திரும்பக் கிடைக்கிறது.
ஒரு கட்டத்தில் ஜோ மல்லூரியுடன், ஜீவாவையும் கொல்லச் சொல்லி அடியாட்களுக்கு நாகா உத்தரவிட்டது ஜீவாவுக்கு தெரிய வருகிறது.
ஜோ மல்லூரியுடன் தஞ்சைக்கு வரும் ஜீவாவுக்கும், நயன்தாராவுக்கும் திருமண ஏற்பாடுகள் வேறு நடைபெறுகிறது.
ஒரு பக்கம் போலீஸ் நாகாவை வளைக்கப் பார்க்க.. இன்னொரு பக்கம் ஜீவாவை போட்டுத் தள்ள நாகா திட்டம் போட்டுத் துரத்த. ஜீவா, நயன்தாரா திருமணம் நடந்ததா இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.
ஏற்கெனவே பார்த்துப் பழகிய கதைதான். என்றாலும் இடையிடையே வரும் சில பரபர முடிச்சுகள் படத்தின் வேகம் குறையாமல் கொண்டு செல்கிறது.படம் முழுக்க ஒரு பதற்றத்தை ரசிகனுக்கு ஏற்படுத்தி விடுகிறார் இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் .
நயன்தாரா சில கோணங்களில் அழகி. குறிப்பாக கொஞ்சம் நேரம் பாவாடை தாவணியில் வரும் போது. சில கோணங்களில் ஆண்டி.ஏன் இப்படி?சில இடங்களில் ஜீவாவுக்கு அக்கா போல் தெரிகிறார்.
நாயகனுக்கான அனைத்து நடிப்பு வாய்ப்புகளும் படத்தில் உள்ளன. அதனைச் சரியானபடி செய்திருக்கிறார் ஜீவா. ஜீவாவின் ‘பிளேடு பக்கிரி’ டெக்னிக்கை பார்த்து நீதிபதி பயப்படுவதும்.. இதனாலேயே அவரை விடுவிப்பதும் நெருடும் இடம்.
நாகாவாக நடித்திருக்கும் சரத் லோஹித் சிவா வில்லத்தனத்தில் கலக்கியிருக்கிறார். அறிமுகக் காட்சியில் இருந்து கடைசியாக சாகின்ற வரையிலும் அவர் வரும் காட்சியில் அவரே ஆக்கிரமித்திருக்கிறார். இவருக்கு போட்டியாக ஜோ மல்லூரி தனது அழுத்தமான, ஆர்ப்பாட்டமில்லாத குணச்சித்திர நடிப்பில் கவர்கிறார்.
வ.செ.ஐ. ஜெயபாலன், ‘நீயா நானா’ கோபிநாத், இயக்குநர் மாரிமுத்து, நயன்தாராவின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா,பருத்திவீரன் சுஜாதா , ‘முண்டாசுப்பட்டி’ ராம்தாஸ், நயன்தாராவின் பாட்டி என்று வருகிற அவர்களும் பதிகிறார்கள்.
கடைசியாக வரும் ‘திட்டாதே’ பாடலும் காட்சியும் மிகையான திணிப்பு.
குடந்தை,தஞ்சைப் பகுதி காட்சிகளை இயல்பாக எடுத்துள்ள மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும் இயக்குநருக்கு பெரிதும் கை கொடுத்திருக்கிறது.
சில நகாசு வேலைகளுடன் திரைக்கதையை இன்னமும் செம்மை செய்து எடுத்திருந்தால் ஜீவாவுக்கு இது மிக முக்கியமான படமாக இருந்திருக்கும்.