சமுத்திரக்கனி, பாரதிராஜா, அனையா, தம்பி ராமையா, இளவரசு, நாசர், சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி, கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.நந்தா பெரிய சாமி இயக்கியுள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார் .இயக்குநர் என். லிங்குசாமி வழங்க GPRK சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இது தமிழக கேரள எல்லைப் பகுதியில் நடக்கும் கதை.சமுத்திரக்கனி ஒன்றரைக் கோடி ரூபாய் எடுத்துக் கொண்டு ஓடியதாக போலீஸ் துரத்துகிறது.ஆனால் உண்மை என்ன என்றால் சமுத்திரக்கனி அவ்வளவு கொடியவர் அல்ல. மனசாட்சியுடனும் நீதியுடனும் நேர்மையுடனும் நடப்பவர். அவர் ஒரு லாட்டரி சீட்டுக்கடை வைத்துள்ளார் .அதில் விற்பனையான லாட்டரி சீட்டுக்கு ஒன்றரை கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. ஆனால் அந்த சீட்டைப் பாரதிராஜா அவரிடம் காசு இல்லாததால் தேர்ந்தெடுத்துக் கொடுத்துவிட்டு பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று சென்ற, அந்த சீட்டுக்குத்தான் பரிசு விழுந்துள்ளது.
சமுத்திரக்கனியின் குடும்பத்தில் பணத்தேவை உள்ளது. இரண்டு பெண் பிள்ளைகளைக் கொண்ட சமுத்திரக்கனி குடும்பத்தில் இளைய பிள்ளைக்குக் திக்குவாய் பிரச்சினை. சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. எந்த வகையிலும் பொருளாதாரத்தில் திருப்தி வராத குடும்பம் .பணத் தேவை அதிகம் உள்ள குடும்பம் .அந்த பரிசுக்குரிய சீட்டு அவரிடம் இருப்பதால் அது நமக்குத் தான் சொந்தம் என்று குடும்பம் வாதிட்டு மன்றாடுகிறது .அது இன்னொருவர் பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்ட சீட்டு அவரிடம் தான் அதை ஒப்பபடைக்க வேண்டும் என்று சமுத்திரக்கனி பிடிவாதமாக இருக்கிறார். காசு கொடுத்து வாங்காததால் அது நமக்குத் தான் சொந்தம் என்று மனைவி மாமியார், மாமனார், மைத்துனர் என்று குடும்பத்தினர் சமுத்திரக்கனிக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.
இதையெல்லாம் மறுத்து விட்டவர், அந்த பெரியவரைத் தேடிப் பயணப்படுகிறார் . போலீஸ் ஒரு பக்கம் குடும்பத்தினர் ஒரு பக்கம் என்று அவரைத் துரத்துகிறார்கள்.
பரிசு விழுந்த லாட்டரிச் சீட்டை பாரதிராஜாவிடம் சேர்த்தாரா? போலீஸிடம் சிக்கினாரா ? முடிவு என்ன என்பதுதான் திரு மாணிக்கம் படத்தின் கதை.
எல்லா மனிதர்களுக்கும் இதைச் செய்யலாமா செய்யக்கூடாதா என்று மனசாட்சி ஊசலாடும் தருணங்கள் வாழ்க்கையில் வந்து போய் இருக்கும். வறுமையும் சிக்கலும் சோதனையும் மனசாட்சியைச் மீறிச் செய்ய வைக்கும். இந்தப் படத்தில் கதைநாயகன் சமுத்திரக்கனி அப்படித் தனது மன ஊசலாட்டத்திற்கு இடம் கொடுக்காமல் நியாயத்தில் உறுதியாக இருக்கும்படியான பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார்.
அவர் அப்படி உறுதியாக இருப்பதற்கு ஒரு பிளாஷ்பேக் கதை உண்டு .அவர் ஓர் அனாதை. ஆதரவற்ற நிலையில் ,லாட்டரி சீட்டு விற்கும் நாசரிடம் சேர்கிறார். ஆனால் கைவிடப்பட்ட சிறுவனாக வளர்ந்தவர் எங்கும் புறக்கணிப்புகளையும் அவமானத்தையும் சந்திக்கிறார். அவர் சில திருட்டு செயல்களை செய்கிறார். சிறுவயதில் அவரை யாரும் நம்ப மறுக்கிறார்கள் .அப்படிப்பட்ட நிலையில் நாசரிடம் நான் இனி திருட மாட்டேன் உண்மையாக இருப்பேன் என்று சத்தியம் செய்கிறார். அதன்படி வாழ்கிறார். அப்படி வார்த்தெடுக்கப்பட்ட அந்த மாணிக்கம் பாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மனைவியாக நடித்திருக்கும் நாடோடிகள் அனன்யா சிறப்பாக நடித்துள்ளார். ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை எப்படியாவது குடும்பத்துக்குச் சேர்க்க வேண்டும் என்று அவர் தொலைபேசியில் பேசும் பதைப்பும் தவிப்பும் கொண்ட காட்சிகளில் நடிப்பில் பளிச்சிட்டுள்ளார். அக் காட்சிகளில் அழகான நடிப்பு வெளிப்பட்டுள்ளது.
பாரதிராஜாவின் தோற்றமே பாதி நடிப்பை நிறைவு செய்கிறது. அந்த முதியவர் பாத்திரத்தில் அவர் கண்கலங்க வைக்கிறார். அவருக்கு ஜோடி வடிவுக்கரசி அவரும் குறை இல்லாத நடிப்பைக் கொடுத்துள்ளார்.
சமுத்திரக்கனி மகள்களாக நடித்த இருவரில் இளைய மகளாக திக்கிப் பேசும் சிறுமி அனுதாபங்களை அள்ளுகிறார்.
கதை கேரளத்தை ஒட்டியும் கேரளத்திலும் நடப்பதால் இயற்கை எழில் கொஞ்சம் இடங்கள் சுகுமாரின் கேமரா மூலம் கண்களுக்கு குளுமை தருகின்றன.சார் சந்திரசேகரின் இசை படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது,
விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
அனைவரும் நேர்மையாக இருப்பது தான் இயல்பு அப்படித்தான் எல்லாரும் பிறக்கிறோம். பிள்ளைகளும் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறோம் .அதற்கு சவாலாக வரும் வாழ்க்கைத் தருணங்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் தான் நமது நிம்மதியும் மரியாதையும் இருக்கிறது என்பதை அழகாக கூறியிருக்கிறார்கள்.
நேர்மையாக வாழ்பவன் இறுதியில் அவன் அடைவது என்ன என்பதையும் இந்தப் படம் சுட்டிக்காட்டி உள்ளது. இன்றைக்கு உள்ள வணிகமயமாகி விட்ட சக மனிதரை நேசிக்காத இந்தக் காலத்தில் இப்படி ஒரு படம் அனைவரையும் யோசிக்க வைக்கும். குடும்பத்தினர் அனைவரும் பார்க்க வேண்டிய யதார்த்த சித்திரம் ‘திரு மாணிக்கம்’.