ஆங்காங்கே திறக்கப்படும் டாஸ்மாக்கிற்கு எதிரான ஒரு படம்தான் இந்த ‘திறப்பு விழா’.
டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக இருக்கிறார் நாயகன் ஜெய ஆனந்த். போலி சரக்கு விற்பவர்களை காட்டிக்கொடுக்கிறார்.அமைதியான முறையில் மக்களை திரட்டி டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுப் போராடுகிறார். அவருடன் நாயகி ரஹானாவும் இணைகிறார். இப் போராட்டத்திற்குப் பெண்கள் திரண்டு வந்து ஆதரவு தெரிவிக்கிறார்கள்.ஆனால், ஆண்களும், காவல் துறையும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
போராடும் இவர்களை அடக்கி ஒடுக்கி, போராட்டத்தையும் சிதைக்க முயல, நாயகி ரஹானா எடுக்கும் அதிர்ச்சிகர முடிவால், அந்த மதுக்கடையை அகற்றுவதுடன், மதுக்கடைக்கு ஆதரவாக செயல்பட்ட காவல்துறை அதிகாரி மற்றும் ஊர் பெரும்புள்ளியும் கைது செய்யப்படுகிறார்கள். அப்படி அவர் என்ன செய்தார்? என்பதுதான் க்ளைமாக்ஸ்.
தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை அகற்றகோரி பெண்கள் போராட்டம் நடத்தி வருவதை, ஜனரஞ்சகமான முறையில் திரைப்படமாக கொடுத்திருக்கும் கே.ஜி.வீரமணி, மது நாட்டுக்கு அல்ல, வீட்டுக்கும், மக்களுக்கும் மட்டுமே கேடு என்பதை ரொம்ப தெளிவாக சொல்லியிருக்கிறார்.
நாயகன் ஜெய ஆனந்த், அறிமுகம் தான் என்றாலும் நடிப்பில் தேறிவிடுகிறார். அசத்துகிறார். ரஹானா பார்ப்பதற்கு பள்ளி மாணவி போல இருந்தாலும், கொடுத்த வேலையைச் சரியாக செய்திருக்கிறார்.
மக்களிடம் விழிப்புணர்ச்சியும் ஏற்படுத்தி வணிகப் படமாகவும் கொடுக்க முயன்ற இயக்குநர் கே.ஜி.வீரணிக்கு, இசையமைப்பாளர் வசந்தரமேஷ், ஒளிப்பதிவாளர் ஆர்.பி.செல்வா, எடிட்டர் பி.ஜி.வேல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் துணை நின்று ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள்.
குடிப்பெருமை பேசும் டாஸ்மாக் காட்சிகள் இல்லாத படங்களே இல்லை, என்கிற தற்போதைய சூழ்நிலையில் குடியின் கொடுமையைச் சொன்ன முயற்சிக்கே குறைகளை எல்லாம் மறந்து பாராட்டலாம். மது விலக்கு சார்ந்த போராட்டத்தை மட்டுமே சொல்லாமல், காதல், நகைச்சுவை என்று கிராமப் பின்னணியில் ஒரு குடும்ப கதையையும் சொல்லியிருக்கிறார்கள்.
டாஸ்மாக்கிற்கு எதிரான போராளிகளுக்கு இப்படம் ஊக்கம் தரும்.