‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ விமர்சனம்

அன்றாடம் நாம் சந்திக்கின்ற, நம் கண்ணில் பட்ட ஆனால் அதைக் கண்டு கொள்ளாமல் நாம் கடந்து போன ஒரு கதை தான் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்கி ற பெயரில் படமாகி உள்ளது.இந்தியப் பெண்களின் வாழ்வில் அவர்களது உழைப்பைப் பெரும்பகுதி சுரண்டும் சமையலறை சார்ந்த கதை இது.

.

துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது, வீடு பெருக்குவது, வீட்டைச் சுத்தம் செய்வது,எனத் திரும்பத் திரும்ப சக்கரமாய் சுழன்றுகொண்டேயிருக்கிறார் புதிதாக திருமணமான ஐஸ்வர்யா ராஜேஷ். இதைப் பற்றியெல்லாம் அவரது கணவரான ராகுல் ரவீந்திரனுக்கு எந்தக் கவலையுமில்லை.

இப்படி மிஷினைப் போல இயங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒருகட்டத்தில் ஆக்ரோஷம் கொண்டெழுந்து இதையெல்லாம் எப்படி உடைத்து வெளியேறி வீறுநடை போடுகிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.

கடந்த 2021-ம் ஆண்டு ஜியோ பேபி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை தமிழில் ஆர்.கண்ணன் உருவாக்கியிருக்கிறார்.சில மாற்றங்களுடன்.

‘சமைக்க பிடிக்குமா?’ என ஐஸ்வர்யா ராஜேஷிடம் கணவர் கேட்கும்போது, ‘சமைக்க தெரியும்’ என அவர் பதிலளிக்க, கணவர் ராகுல், ‘எனக்கு சாப்பிடப் பிடிக்கும்’என்கிற சிறு வசனத்திலேயே படத்தின் மையக்கருவைக் கூற முடியும்.அப்படிப்பட்ட இரு கதா பாத்திரங்களின் முரண்களைச் சுற்றி பின்னப்பட்ட கதை.

திருமணத்திற்குப் பிறகான ஒரு இந்தியப் பெண்ணின் மணவாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதை ஐஸ்வர்யா ராஜேஷின் செக்கு மாடாக உழைக்கும் அந்த வாழ்க்கை அச்சு அசலாகக் காட்டுகின்றன. முகபாவனைகளின் வழியே உணர்ச்சிகளை வெளிப்படுத்தி தேர்ந்த இயல்பான நடிப்பை வழங்கி அந்தக் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் ஐஸ்வர்யா.
கதை தன்னை மையம் கொள்வதை உணர்ந்து சரியாகத் தன்னை வெளிப்படுத்தி உள்ளார்.

ராகுல் ரவீந்திரன் ஆணாதிக்க சமூகத்தின் நம்மில் ஒருவராக வருகிறார். குறிப்பாக அவரது தந்தையாக நடித்திருக்கும் போஸ்டர் நந்தகுமார் ‘விறகு அடுப்புல சமைச்சுடும்மா’, ‘வாஷிங் மிஷின்ல துணிய போடாத’ என,அன்பாகப் பேசியே பெண்களின் ஆத்திரத்தைக் கிளறுகிறார்.

கலைராணி, யோகிபாபு ஆகியோர் கதைக்குத் தேவையான பங்களிப்பைச் சிறப்புத் தோற்றத்தில் வந்து செய்து விட்டுச் சென்றுள்ளனர்.

மாதவிடாய் குறித்த காட்சிகளில் ‘நான் சொன்னாதான தெரியபோகுது’, ‘இப்படியெல்லாம் பண்ணனும்னு சாமி வந்து சொன்னுச்சா; சாமிக்கு எல்லோரும் ஒண்ணு தான்’, ‘வீட்ல அம்மா தான் வேலைக்கு போறாங்க அப்போ அவங்க தானே குடும்பத் தலைவர்’ போன்று
இயல்பாக ஆனால் சிறுபொறி வைத்தாற் போல் ஆங்காங்கே பேசப்படும் வசனங்கள்,சுயநலமிக்க ஆணாதிக்க உண்மை முகம் வெளிப்படுத்தும்.

சூரிய ஒளியை வைத்து செயற்கை ஒளி தவிர்த்து ஜன்னல் வழியாக மொத்த சமையலறையையும் காட்சிப்படுத்தியுள்ள பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவில் கவனம் பெறுகிறார்.

மலையாளத்தில் இப்படம் ஆவணத் தன்மையுடன் இருந்ததாகப் பேசப்பட்டது.ஆனால் இயல்பானது என்றும் பாராட்டப்பட்டது.தமிழில் ஏனோ அந்த யதார்த்தம் இல்லாமல் இருந்தது.

மொத்தத்தில் பெண்களின் பிரச்சனையைப் பேச வந்த படம் பார்க்கும் ஆண்களுக்குக் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் அழுத்தமான படம்.