அரசியலில் குதித்திருக்கும் நடிகர் விஜய்க்கு இப்போது ஒரு வெற்றி தேவை.
அப்படி ஒரு படத்தை எடுக்கும்போது அதில் சோதனை முயற்சிகள், விஷப்பரீட்சைகள் செய்வதற்கு யாருக்கும் தயக்கம் இருக்கத்தான் செய்யும் .பாதுகாப்பான வணிக ரீதியான படத்தை கொடுப்பதன் அவசியம் உணர்ந்து இந்த கோட் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
வணிகர் ரீதியிலான ஒரு திரைப்படத்திற்கான காதல், நட்பு,சென்டிமென்ட்,நகைச்சுவை, ஆக்சன் திருப்பங்கள் என்று அனைத்து அம்சங்களையும் கலந்து அதில் வருங்காலத்தை நம்மை ஆட்சி செய்ய போகும் ஏ ஐ தொழில்நுட்பத்தையும் இணைத்து இந்த 3 மணி நேரப் படத்தை உருவாக்கி இருக்கிறார்.
படத்தின் கதை?
இந்திய உளவுத்துறையில் தீவிரவாத தடுப்புப் பிரிவில் பணியாற்றுகிறார் விஜய். அவரது குழுவினர் நாட்டுக்காக உளவு பார்த்து எதிரிகளை அவர்களிடத்திற்கே சென்று
சிங்கத்தின் குகைக்கே சென்று சிங்கத்தை சந்திப்பது போல்
அழிப்பவர்கள். அதில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் அடக்கம். அவர்களின் தலைமைப் பொறுப்பில் ஜெயராம்.
அடுத்த ஆபரேஷனுக்காக தாய்லாந்து செல்ல வேண்டும் என்பது திட்டம். கர்ப்பிணி மனைவி சினேகாவின் நச்சரிப்பு தாங்காமல் அவரையும், நான்கு வயது மகனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு செல்கிறார்.
அங்கே விஜயின் செல்ல மகனை மர்ம நபர்கள் கடத்திச் சென்று விடுகிறார்கள்.
தன் பிள்ளையைக் காப்பாற்ற முயல்கிறார் விஜய். ஆனால் கடத்திச் சென்ற வாகனம் விபத்தில் சிக்குகிறது. அதில்,தன் மகனைப் பறிகொடுத்ததால் விஜயை, சினேகா பிரிந்து விடுகிறார்.
விஜயும் தனது வேலையை விட்டுவிடுகிறார். சில ஆண்டுகள் ஓடுகின்றன.கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தனது வேலை சார்ந்து ரஷ்யா செல்கிறார் விஜய்.அங்கே தன்னைப் போல தோற்றம் கொண்ட ஓர் இளைஞரைச் சந்திக்கிறார்.
அவரைப் பற்றி அறிந்து கொள்ள தேடல் முயற்சியில் ஈடுபடும் போது இறந்து போனதாக நினைத்துக் கொண்டிருந்த தனது மகன் தான் அவர் என்பது தெரிய வருகிறது. மகனைக் காப்பாற்றி தன்னுடன் சென்னைக்கு அழைத்து வருகிறார் விஜய்.வாழ்க்கை புதுப்பிக்கப்பட்ட உணர்வில் இருக்கும் அவருக்கு மீண்டும் அதிர்ச்சி.
திடீரென்று அவருடன் இருப்பவர்கள் எதிர்பாராத வகையில் ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகிறார்கள். ஏன் அவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள்?விஜய் குழுவினரை ஏன் அவர்கள் குறி வைக்கிறார்கள்?என்பதற்கான பதில் தான் திரைக்கதை செல்லும் பாதை.முடிவு என்ன என்பதுதான்
‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (கோட் ) படம்.
கதை பல நாடுகளில் பயணிக்கிறது.காட்சிகளோ உள்ளூர் தன்மையுடன் உள்ளன.
எதிர் எதிர் துருவங்களாக முரண்பாடான குணச்சித்திரங்களைச் சித்தரித்து,அப்பா போலீஸ், மகன் திருடன் பாணியில் பல கதைகள் வந்திருக்கின்றன.
அந்த வரிசையிலான கதையை சர்வதேச கேன்வாஸில் சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.
காந்தி மற்றும் ஜீவன் என அப்பா, மகன் வேடங்களில் நடித்திருக்கும் விஜய், அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பு மற்றும் உடல் மொழியில் முதிர்ச்சியை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.
மகன் கதாபாத்திரத்தில் நடிப்பில் வேகத்தையும், விவேகத்தையும் வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.
விஜயுடன் பணியாற்றும் அவரது நண்பர்களாக நடித்திருக்கும் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், அஜ்மல் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்குப் பயன்பட்டிருக்கிறார்கள்.
அப்பா விஜயின் மனைவியாக நடித்திருக்கும் சினேகாவும் மகன் விஜயின் காதலியாக நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரியும் அளவாக நடித்து அழகாக மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.
உருவம் படத்தில் எதிர்மறை நிழல் காட்டிய மோகன் இதில் வில்லனாக வருகிறார். ஏனோ அவருக்கு இது பொருந்தவில்லை.
பிரேம்ஜி, வைபவ், அஜய், ஆகாஷ் அரவிந்த் என இயக்குநர் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான குழுவினரும் சில இடங்களில் தலைகாட்டுகிறார்கள். யோகி பாபு சில காட்சிகளில் வந்தாலும் சிரிக்க வைத்திருக்கிறார்.
எதிர்பாராத வகையில் சிவகார்த்திகேயன் , திரிஷா சிறப்புத் தோற்றத்தில் வருகிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் மேலும் சிறப்பாக அமைந்திருந்து படத்திற்குப் பலம் சேர்த்திருக்கலாம்.
சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவில் சேஸிங் காட்சிகளின் படமாக்கல் அபாரம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் சிஎஸ்கே மேட்ச் இடையே பரபரப்பான படப்பிடிப்பு ஓர் உதாரணம்.படத்திற்கான ஒளிப்பதிவு பல இடங்களில் கைகொடுக்கிறது.
விஜயை அப்பா மற்றும் மகனாகக் காட்டிய தொழில்நுட்பத்தை சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள்.
.’ஏஐ’ தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்திய முதல் தமிழ்ப் படம் என்ற பெயரைப் பெறும்.
மகன் விஜய்யின் கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மைதான் படத்தின் குறையாக உள்ளது.
விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த அதிரடி பஞ்ச், அரசியல் வசனங்கள் படத்தில் இல்லை.
ஆனாலும் ’CM2026′ என்ற கார் பதிவு எண் மூலம் 2026 இல் அ முதல்வர் விஜய் என்று சத்தமில்லாமல் ரசிகர்களுக்கு சொல்லியிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.இது போல் படம் முழுக்க சின்ன சின்ன பொறிகள் உள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பின்னணியில் கிளைமாக்ஸை காட்சிப்படுத்திய விதம் சுவை.டோனியின் எண்ட்ரி போன்றவை கிரிக்கெட் ரசிகர்களையும் படத்தைக் கொண்டாட வைக்கும் உத்தி.
பழைய பாணியிலான கதை, வழக்கமான திரைக்கதை, யூகிக்கும்படியான காட்சிகள் மற்றும் திருப்பங்கள் என படத்தில் உள்ள குறைகள் ரசிகர்களின் விசில் சத்தத்தில் மறந்து விடும்.ஏனென்றால்
இயக்குநர் வெங்கட் பிரபு, விஜயின் ரசிகர்களை மட்டும் மனதில் வைத்து இயக்கி உள்ளார்.
மொத்தத்தில் இந்த கோட் விஜய் ரசிகர்களுக்கான ட்ரீட்.