‘தி ஸ்மைல் மேன்’ திரைப்பட விமர்சனம்

சரத்குமார் ,ஸ்ரீகுமார் ,சிஜா ரோஸ் ,இனியா, சுரேஷ் மேனன் ,நடராஜன் ,ராஜ்குமார், மலை ராஜன், ஜார்ஜ் மரியான், பேபி அழியா நடித்துள்ளனர். சியாம் -பிரவீன் எழுதி இயக்கியுள்ள்ளனர்.கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்துள்ளார் .விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.சலீல் தாஸ், அனீஸ் ஹரிதாசன் , ஆனந்தன் டி தயாரித்துள்ளனர்.

சரத்குமாருக்கு இது இரண்டாவது இன்னிங்ஸ். பல படங்களில் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் அடித்து ஆடுகிறார்.இது சரத்குமாரின் 150 வது படம்.
இந்தப் படத்தின் கதை கோயம்புத்தூரில் நடக்கிறது ஒரே பாணியில் பல கொலைகள் நடக்கின்றன.
அவை ஸ்மைல் மேன் கொலைகள் எனப்படுகின்றன .இதை துப்பு துலக்கும் பணி சரத்குமாரிடம் வந்து சேர்கிறது. அவர் துப்பு துலக்குவதில் வல்லவர். பல வழக்குகளில் பல மர்மங்களை திறந்து வைத்தவர். தனது அனுபவங்களையே புத்தகமாகக் கூட எழுதி உள்ளவர். அப்படிப்பட்டவரிடம் இந்தப் பணி வருகிறது.ஆனால் ஒரு பிரச்சினை அவருக்கு நினைவு தப்புதல், அதாவது அல்சைமர் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்.அப்படிப்பட்ட நிலையில் இந்த விசாரணையைத் தொடங்குகிறார்.அதைத் தடை யின்றிக் கொண்டு செல்ல முடிந்ததா? ஸ்மைல் மேன் என்பவன் யார் ?அவன் எதற்காக இந்தக் கொலைகளைச் செய்கிறான்? சரத்குமாரின் மர்மமான முன் கதை என்ன? போன்றவற்றைச் சொல்வது தான் இந்த ‘தி ஸ்மைல் மேன்’ திரைப்படம்.

இந்தப் படத்தில் சரத்குமார் ஒரு நிறைவான பாத்திரத்தில் நடித்துள்ளார் .அவரது தோற்றமும் உடல் மொழியும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன.அவரது சிதம்பரம் நெடுமாறன் என்கிற பாத்திரத்தின் சித்தரிப்பு நேர்த்தியாக உள்ளது.பார்வையாளர்களை அமர வைப்பதும் கதையில் ஒன்ற வைப்பதும் அவரது பாத்திரம் தான்.ஒரு திரைப்படத்திற்கு அது மட்டும் போதுமா?

சரத்குமார் ஒரு பாடி பில்டர் தான். அதற்காக முழுப்படத்தின் சுமையையும் அவர் மீது ஏற்றி உள்ளார்கள்.ஏனென்றால் மற்ற பாத்திரங்களுக்கு வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளன.சரத்தின் பாத்திரத்திற்குப் பிறகு மற்ற பாத்திரங்கள் அந்த அளவுக்கு அழுத்தம் இல்லாமல் வருகின்றன.சிஜா ரோஸ் ,இனியா, சுரேஷ் மேனன் ,நடராஜன் ,ராஜ்குமார், மலை ராஜன் ஏற்றுள்ளவை  மற்றும் பலர் என்கிற ரீதியில் வருகின்றன.அவர்களை இன்னும் ஆழமாக பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.ஜார்ஜ் மரியான் மட்டும் சிறு ஆறுதல்.

சியாம் -பிரவீன் இரண்டு பேர் இணைந்து எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஒரு புலனாய்வுக் கதை , விசாரணை செய்யும் அதிகாரிக்கு அன்சைமர் என்கிற பிரச்சினை இருக்கிறது என்கிற பரபரப்புடன் மர்மம் நிறைந்த கதைப் போக்கை எடுத்துக் கொண்டு திரைக்கதை அமைத்துள்ளார்கள்.அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அது முழுமை தரவில்லை என்பதுதான் நிஜம். கதை கூறும் முறையில் முன் பின் கால மாற்றங்களுடன் நகர்த்தப்படும் காட்சிகள் ஒரு ஆர்வத்தைத் தூண்டுகின்றன என்பது உண்மைதான். ஆனால் அந்த சுவாரஸ்யத்தைக் கடைசி வரை பராமரித்து இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட படங்களில் ஒளிப்பதிவு மிக முக்கியமான கடமை ஆற்றுகிறது. அந்த வகையில் விக்ரம் மோகனின் ஒளிப்பதிவு சோடை போகவில்லை.கவாஸ்கர் அவிநாஷின் பின்னணி இசை ஓகே ரகம்.

சரத்குமாரின் பாத்திரச் சித்தரிப்புக்காகவும் க்ரைம் த்ரில்லர் என்ற வகையிலும் திரில்லர் திரைப்படத்தின் ரசிகர்களுக்கு இது பிடிக்கும்.