அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ்,அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு, சிவாஜி ராம்குமார்,தங்கதுரை, பேபி அனிகா, பிராங்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத் ,ஜி கே ரெட்டி ,பி எல் தேனப்பன், வேல ராமமூர்த்தி, ஓ.ஏ.கே.சுந்தர் ,பத்மன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தினேஷ் இலெட்சுமணன் எழுதி இயக்கியுள்ளார்.சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பரத் ஆசிவகன் இசையமைத்துள்ளார். கலை இயக்கம் – அருண் சங்கர், படத்தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர் : ஜி.அருள்குமார் தயாரித்துள்ளார்.
பெண்கள், சிறுமிகள்- குறிப்பாக மனநலம் பாதிக்கப்பட்ட, ஆட்டிசம் பிரச்சினை உள்ள குழந்தைகள் காமுகர்களால் கபளீகரம் செய்யப்படும் போக்குக்கு எதிராக இந்தப் படம் உருவாகியுள்ளது .அப்படிக் கொடுமை செய்யும் அநியாயக்காரர்களை அந்தத் ‘தீயவர் குலை நடுங்க’ பழிவாங்கப் புறப்பட்ட ஒரு கதாபாத்திரத்தின் கதைதான் இந்தப் படம்.
எழுத்தாளர் ஜெபநேசன் காரில் சென்று கொண்டிருக்கும்போது ஓஎம்ஆர் சாலையில் இரவு 11. 40 க்கு ஓர் இரு சக்கர வாகனத்தின் மூலம் விபத்து ஏற்படுத்தப்பட்டுக் காரில் இருந்தவரை இறக்கிக் கொடூரமாக கொலை செய்கிறான் ஒரு முகமூடி மனிதன் .அதற்குப் பிறகு அவரது நண்பரான கட்டுமானத் தொழிலதிபர் வரதராஜன் கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலையைப் பற்றி விசாரிக்க மகுடபதி என்ற பெயர் கொண்ட இன்ஸ்பெக்டர் அர்ஜுன் தலைமையில் விசாரணையில் இறங்குகிறது போலீஸ்.தடயங்கள் சரியாகக் கிடைக்காமல் குற்றத்தின் நுனி புரியாமலும்,குற்றவாளிகளின் நிறம் தெரியாமலும் திணறுகிறது போலீஸ் . அதற்குப் பிறகு தொடர்ந்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. இந்தச் சமயத்தில் குற்றவாளிகளை நெருங்குகிறது போலீஸ.நெருங்கிக் குற்றவாளியை பிடிக்கும் போது போலீஸ் ஒரு எதிர்பாராத நிலைப்பாட்டை எடுக்கிறது .அது என்ன? ஏன்? அந்தக் குற்றவாளி யார் ?என்பதுதான் 127.40 நிமிடங்கள் கொண்ட ’தீயவர் குலை நடுங்க’ படத்தின் மீதிக் கதை.
இதில் விசாரணை செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகுடபதியாக மிடுக்காக வந்து தனது பாத்திரத்திற்கு வலுவூட்டி படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளார் ஆக்சன் கிங் அர்ஜுன். மெலிதான ஐஸ்வர்யா ராஜேஷ் தனது எடையைத் தாண்டிய எதிர்பாராத பாத்திரம் சுமந்துள்ளார்.மீரா என்கிற சிறப்புக் குழந்தைகளுக்கான ஆசிரியராக வருகிற ஐஸ்வர்யா ராஜேஷ், அவரா இவர் என்கிற அளவிற்குச் சிறப்பாக நடித்துள்ளார்.
அர்ஜுன் உடன் விசாரணையில் பயணப்படும் கான்ஸ்டபிள் ஆக வரும் தங்கதுரை, நகைச்சுவைக்கான இடங்களை நிரப்ப முயன்றுள்ளார்.அர்ஜுனின் மேல் அதிகாரியாக ஓ.ஏ.கே.சுந்தர் வருகிறார். பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயாக அபிராமி வெங்கடாசலம் வருகிறார்.ஒரு தாயின் தவிப்பைப் புரிய வைக்கிறார்.
படத்தின் பெரும் பகுதி பெரிய அடுக்குமாடிக் கட்டடத்தில் நடக்கிறது. அது சார்ந்த காட்சிகள் எடுப்பதற்கு ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு சிரமப்பட்டுள்ளார் .படத்தின் விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் பரத் ஆசிவகன். ![]()
வழக்கமான க்ரைம் திரில்லர் போல் இல்லாத ஒரு போக்கைத் தனது படத்தொகுப்பின் மூலம் கோவையாக்கித் தொகுத்துள்ளார் படத் தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் .
படத்தில் ஆங்காங்கே தெறிக்கும் வசனங்களில் சட்டம், நியாயம் தர்மம் பற்றி அர்ஜுன் பேசுவது ஒரு சாம்பிள்.
மொத்தத்தில் இன்றைய பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் பார்க்கும் படியான ஓர் எச்சரிக்கைப் படைப்பாக இந்தப் படம் உருவாகியுள்ளது. அந்த முயற்சிக்காக இயக்குநரைப் பாராட்டலாம்.
மொத்தத்தில் ’தீயவர் குலை நடுங்க’ பெண்களைப் போக பொருளாகப் பார்க்கும் அநியாய காமுகர்களுக்கான சாட்டையடி.


