ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா , அம்ஜத்கான், வ்ரிதி விஷால், அப்துல் லீ நடித்துள்ளனர்.ரோஹின் வெங்கடேசன் இயக்கி உள்ளார் .லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
ஒரு காதல் மந்தையிலிருந்து பிரிந்து வெவ்வேறு திசையில் தனித்தனிப்பாதையில் சென்ற ஆடுகள் ஒரு கட்டத்தில் ஒன்றை ஒன்று சந்திக்கின்றன. பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால் அங்கு பெண்மையின் நிலை என்ன? மௌனம் என்பார் கவியரசர் கண்ணதாசன் .ஆனால் அந்த மௌனம் பேசினால் என்னவாகும்?அதைப் பற்றிப் பேசுவது தான் தீராக் காதல் படத்தின் கதை.
எப்போதும் நனவோடை உணர்வுகள் இன்பம் தருபவை.கடந்தகால ஏக்கம் கருணையையும் கனிவையும் வழங்குபவை.அப்படிக் கடந்த கால நினைவுகளை மீட்டும் ஒரு கதை தான் இது. அவ்வகையில் மெல்லுணர்வுகளைப் பேசுகிற ஒரு படமாக இது அமைந்துள்ளது.
படத்தின் கதை என்ன?
ஒரு காலத்தில் காதலித்து விட்டுப் பிரிந்து தங்களுக்கான வெவ்வேறு திருமண வாழ்க்கையில் ஆழ்ந்து போன பிறகு அந்தக் காதலர்கள் மீண்டும் சந்தர்ப்ப வசத்தால் சந்திக்கும் போது அந்த சந்திப்பு அவர்களுக்குள் ஏற்படுத்திய உணர்வுகள் என்ன ?அதன் தாக்கம் என்ன? அதன் மூலம் நிகழ்ந்த விளைவுகள் என்ன? என்பதைப் பற்றிப் பேசுவது தான் இந்த `தீராக் காதல்’ படம்.
மனைவி வந்தனா, மகள் ஆர்த்தி என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறவன் கௌதம் .
பணி நிமித்தம் சென்னையிலிருந்து மங்களூரு ரயிலில் செல்கிறவன், தற்செயலாகத் தன் முன்னாள் காதலி ஆரண்யாவைச் சந்திக்கிறான்.அங்கேயே இரண்டு வாரங்கள் நட்பாகப் பழக்கம் ஆகிறது.
ஆரண்யாவுக்குத் தன்னை மதிக்காத புரிந்து கொள்ளாத கணவரின் கொடுமைகள் முன்பு முன்னாள் காதலன் சந்திப்பு ஆறுதல் தருகிறது. துண்டிக்கப்பட்ட காதல் உணர்வுகள் துளிர் விடுகின்றன.புதிய சுவாசம் ஏற்பட்டதாக உணர்கிறாள் ஆரண்யா.இருவரும் வெவ்வேறு குடும்பத்தில் இருக்கிற நிலையில் பழைய நினைவுகளை மீட்டுகின்றனர். ஒரு நிலையில் தடம் மாறி விடக்கூடாது என்று எச்சரிக்கை உணர்வுடன் இருவரும் பிரிகிறார்கள்.தங்கள் வாழ்க்கையில் பயணிக்கிறார்கள்.ஆனாலும் அந்த மங்களூரு நாட்கள் அவர்கள் வாழ்க்கையில் விளையாடுகின்றன. அதன் விளைவு என்ன என்பதுதான் கதை செல்லும் பாதை.இந்த நேர்கோட்டுத் திசையில் செல்லும் கதையை நிதானமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறது ஜி.ஆர்.சுரேந்திர நாத் – இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் கூட்டணி.
இப்படத்தில்,பொறுப்பான கணவன், செல்லமான அப்பா, முன்னாள் காதலன் என ஒரு நடிகராகவும் ஜெய் கவனம் பெறுகிறார். உரிய நடிப்பைச் சிறப்பாக வெளிப்படுத்த முயன்றிருக்கிறார்.இரண்டாம் பாதியில் வரும் பதற்றமான உணர்ச்சிமிக்க சூழல்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் இப்படத்தில் அவரது நடிப்பின் உயரம் பல படிகள் மேலேறியிருக்கும்.
ஐஸ்வர்யா ராஜேஷ் ஏற்றிருக்கும் ஆரண்யா கதாபாத்திரம் எடை மிக்கது. நடிப்பில் ஓரளவிற்கு உரிய நியாயம் செய்திருக்கிறார்.குறிப்பாக எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்துவதில் பளிச்சிடுகிறார்.
கொடுமைக்கார கணவனாக அம்ஜத் கான் அச்சமூட்டுகிறார். வந்தனா கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ஷிவதா.
குழந்தை ஆர்த்தியாக வ்ரிதி விஷால் தன் சுட்டித்தன நடிப்பால் கவர்கிறார். ஜெய்யின் நண்பராக வரும் அப்துல் லீக்கு வழக்கமான டெம்ப்ளேட் பாத்திரம். என்றாலும், சிறு சிறு காட்சிகளில் சிரிப்பு மத்தாப்பு கொளுத்துகிறார்.
குழப்பம் இல்லாத தெளிவான நேர்கோட்டுத் திரைக்கதை படத்திற்குப் பலம்.சில இடங்களில் மட்டுமே பாத்திரத்தின் தன்மையின் எல்லைகள் மீறுகின்றன.படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கதையில் வரும் கதை மாந்தர்களின் இயல்புகள் தெளிவாகி விடுகின்றன.
என்றாலும், மீண்டும் மீண்டும் அதை விளக்கும்படியான காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.குறிப்பாக ஆரண்யாவின் கணவரின் குணத்தை விளக்க இவ்வளவு நீளமான காட்சிகள் தேவையில்லை.
ஆரண்யா உடல்ரீதியாகக் கொடூரமாகத் தாக்கப்படுவது பதற்றமூட்டும்.
எதையும் நிதானமாக எதிர் கொண்டு ஆரம்பத்தில் தெளிவாக மனநிலை கொண்டவராக அறியப்படும் ஆரண்யா பிறகு ‘எனக்கு புடிச்ச வாழ்க்கை கௌதம் மூலமாதான் அமையும். அத நான் விரும்புறது தப்பில்லை’என்பது பாத்திர முரணாகப்படுகிறது.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகத்தின் கேமரா மங்களூருவின் அழகையும், அங்கு முன்னாள் காதலர்களிடையே மீண்டும் துளிர்க்கும் உணர்வுகளையும் அழகாகத் திரையில் காட்டி யிருக்கிறது. படத்தொகுப்பாளர் பிரசன்னா இரண்டாம் பாதியில் சற்றே கண்டிப்பு காட்டி, சுருக்கி இருக்கலாம் .
சித்து குமாரின் இசை எமோஷனல் காட்சிகளில் உணர்வுகளைக் கூட்டியிருக்கிறது.பாடல்கள் பெரிதாக உதவவில்லை.
வணிகப் பரபரப்பு மிக்க கதைகள் நடுவே மெல்லுணர்வுகளைப் பேசும் இந்தப் படம் ரசிகர்களைத் ‘தீராக் காதல்’ கொள்ள வைக்கும்.