‘சண்டியர்’ ஜெகன்,ஈடன்,ஏ.வெங்கடேஷ்,
பாலசரவணன் ,பூ ராமு ,ராமச்சந்திரன் (ராம்ஸ்) ,வைஷாலி , ஸ்ரீநிகிலா , ஐஸ்வர்யா ஆகியோர் நடித்துள்ளனர்.
சீனிவாசன் எழுதி இயக்கி உள்ளார்.
இசை ; நரேஷ்,ஒளிப்பதிவு ; வாசன், அன்பு டென்னிஸ் ,
தயாரிப்பு ; திருவருள் ஜெகநாதன்.
வாழ்க்கையே ஒரு பயணம் தான் .அதில் நாம் பலரையும் சந்திக்கிறோம். சிலரையே நினைவில் கொள்கிறோம். பலரை மறந்து விடுகிறோம். அப்படி நாயகனின் வாழ்க்கையில் சந்திக்கிற கதை மாந்தர்களும் அவர்கள் ஏற்படுத்துகிற தாக்கமும் தான் இந்தப்படம். சென்னை முதல் மதுரை வரை என,ஒரு சாலை வழிப் பயணத்தில் பெரும்பகுதிக் கதை நிகழ்கிறது.
ஜெகன் சென்னையில் ஒரு கால் டாக்ஸி டிரைவர்,அவருக்கு மதுரையில் இருந்து சென்னையில் வந்து தங்கிப் பணியாற்றும் ஈடனுடன் கால் டாக்ஸியில் செல்லும்போது நட்பாகிறது.ஜெகன் ஈடனை ஒருதலையாகக் காதலிக்கிறார். ஈர்ப்பு காட்டாமல் இருக்கிற ஈடன் ஊருக்குச் செல்வதாகக் கூறி நட்புக்காக ஒரு நினைவு பரிசைக் கொடுக்கிறார். அந்த நட்பைக் காதலாக நினைத்துக் கொண்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் தனது காதல் தோல்வி அடைந்ததை உணர்ந்து வருத்தமாக இருக்கிறார் நாயகன் .காதலித்த பெண்ணைப் பற்றிய நினைவுகளை அகற்றுமாறு நண்பர் பால சரவணன் கூறுகிறார்.
இந்நிலையில் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அதன்படி ஈடனை சென்னையில் இருந்து மதுரை வரை பைக்கில் அழைத்துச் செல்லும்படியான வாய்ப்பு.
மதுரை செல்லும் ரயிலைக் கோட்டை விட்டதால் பெற்றோரிடம் காரில் செல்வதாகப் பொய் கூறிவிட்டு பைக்கில் அனுப்பி வைக்கிறார்கள் தோழிகள்.
மனதில் பட்டாம்பூச்சி பறக்க,தனது காதலைப் புதுப்பித்துக் கொள்ளும் எண்ணத்தோடு அந்தப் பயணத்திற்குச் செல்கிறார் நாயகன் ஜெகன். இடையில் சில சம்பவங்கள் நடக்கின்றன.
அந்தத் திடுக் சம்பவங்களால் நாயகியின் வாழ்வில் என்னென்ன ஏற்படுகின்றன? நாயகனது காதல் என்னானது? என்பதுதான் துரிதம் படத்தின் கதை.
படத்தின் தொடக்கத்தில் சில நிமிடங்கள் சில கதாபாத்திரங்களில் அறிமுகங்களுடன் காட்சிகள் நகர்கின்றன.
அதற்குப் பிறகு நாயகி நாயகனின் பைக்கில் ஏறிய பிறகு கதை வேகம் எடுக்கிறது. இந்த வேகம் இறுதி வரை தொடர்கிறது.
‘சண்டியர்’ ஜெகன் மாரிமுத்துவாகவும்
ஈடன் – வானதியாகவும்
ஏ.வெங்கடேஷ் – வானதியின் தந்தையாகவும்
பாலசரவணன் – நாயகனின் நண்பன் கரிகாலனாகவும்
பூ ராமு – மாஸ்டராகவும்
ராமச்சந்திரன் (ராம்ஸ்) – வில்லனாகவும்
வைஷாலி , ஸ்ரீநிகிலா , ஐஸ்வர்யா வானதியின் நண்பர்களாகவும் நடித்துள்ளனர்.
நாயகன் ஜெகன் தோல்விடைந்த மனிதனின் மனநிலையோடு கதை முழுக்கப் பயணிக்கிறார்.தோற்றத்தில்ஸ்ரீவித்யாவை நினைவூட்டுகிறார் ஈடன்.நடிக்கவும் செய்துள்ளார். வில்லனாக வரும் ராம்சும் மிரட்டுகிறார்.தொலைபேசியில் பேசிக்கொண்டே வில்லத்தனம் காட்டும் ஏ.வெங்கடேஷ்,நாயகனின் நண்பன் பாலசரவணன், நாயகியின் தோழிகள் என யாரும் நடிப்பில் குறை வைக்காத அளவிற்குச் செய்துள்ளனர்.
எத்தனையோ மசாலாத் தனமான வணிகக் குப்பைகள் நடுவே ஒரு சிறிய கதையை எடுத்துக் கொண்டு படமாக்கி, சாலை வழிப பயணத்தை மையமாக்கி ஒரு விறுவிறுப்பான படத்தைக் கொடுத்து தனது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் சீனிவாசன் .
பைக், கார் , வேன்,பஸ், ரயில் என்று பல்வேறு வாகனங்களில் கதை ஓடுகிறது.
படத்தில் காதல் ,பாசம், காமம், நட்பு,நகைச்சுவை, திகில் என அனைத்து அம்சங்களையும் கலந்துள்ளன.
ஆரம்பத்தில் பாத்திர அறிமுகங்கள் என்கிற பெயரில் கோனார் நோட்ஸ் எழுதி இருப்பதைத் தவிர்த்து இருக்கலாம்.ஜாதிப் பிரச்சினை சார்ந்த காட்சிகள் திணிப்பாக உள்ளன.அவை படத்திற்குப் பெரிதாக எதுவும் உதவவில்லை.
மற்றபடி ஒரு சிறிய பட்ஜெட்டில் துரிதம் என்கிற பெயருக்கு ஏற்ப வேகத்துடன் தொய்வில்லாத திரைக்கதையால் நிறைவான படத்தைத் தந்த வகையில் இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறலாம்.