‘துருவங்கள் பதினாறு’ படத்தை ட்ரீம் பேக்டரி வாங்கியது ஏன்? விநியோகஸ்தர் விளக்கம்!
‘துருவங்கள் பதினாறு’ படத்தை ட்ரீம் பேக்டரி வெளியிடுவது ஏன்? என்று அந்த விநியோக நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ட்ரீம்பேக்டரி நிறுவன விநியோகப்பிரிவு தலைமை பொறுப்பு வகிக்கும் B. சக்திவேலன் இது பற்றிக் கூறும் போது,
“நல்ல படங்கள் தரமான தகுதியான முயற்சிகள் கொண்ட படங்களை வெளியிடுவதையே எங்கள் நோக்கமாக வைத்து இருக்கிறோம்.
நல்ல படம் எது என்பதைக் கண்டுபிடிக்கப் பல சுமாரான படங்களையும் ,மிகச் சாதாரண படங்களையும் கூடப் பார்க்க வேண்டியிருக்கும்.
இம் முயற்சியில் சில நேரம் எங்களுக்குச் சோர்வும் சலிப்பும் கூட ஏற்பட்டு விடுவதுண்டு. இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு நாள் பி.ஆர்.ஓ. சக்தி சரவணன் என்னிடம் வந்து, ‘ஒரு படம் இருக்கிறது பார்க்கிறீர்களா ?’ என்று கேட்டார். அவர் பட இயக்குநர் கார்த்திக் நரேன் பற்றிக் கூறினார். 21 வயதே ஆன இளைஞர் என்றும் குறும்படம் இயக்கிய பின்னணி பற்றியும் நம்பிக்கையுடன் தான் கூறினார்.
ஆனால், இப்போது குறும்பட அனுபவத்துடன் படம் எடுப்பவர்கள் பார்வையாளர்களைக் கவர வேண்டும். அது ஒரு வணிகப் பொருள் என்பதை அறியாமலும் கடைசியில் திரையரங்கிற்குச் செல்ல வேண்டும் என்கிற தெளிவில்லாமலும் ஏதோ ஒன்றைப் படமாக எடுத்து விடுகிறார்கள்.
எனவே அரை மனதோடு சர்தேகத்துடன் தான் படம் பார்க்கச் சென்றோம்.
ஆனால் முதல் ஐந்து நிமிடத்திலேயே இது வேறு மாதிரியான படம். படத்தில் பணியாற்றியுள்ள அனைவரும் திறமைசாலிகள் என்று உணர வைத்தது.
படத்தில் ஆரம்பத்தில் தொடங்கிய சஸ்பென்ஸ் க்ளைமாக்ஸ் வரை இருந்தது. பார்ப்பவரைக் கட்டிப் போட்டது.
சிறிது நேரத்திலேயே இது வேறு வகையிலான ஒரு முன்மாதிரியான படம் என்று புரிந்தது.
படம் பார்த்து முடிந்ததுமே வாங்குவது என்று முடிவு செய்து விட்டோம்.
ஆனால் ஒரு விஷயத்தில் அக்கறையும் கவனமும் தேவை என்பதை உணர்ந்தோம்.ஏனென்றால நல்ல படம் வந்தால் அதன் மூலம் பல திறமைசாலிக ளை சினிமாவுக்கு அடையாளம் காட்டலாம் என்பது அனைவருக்கும் தெரியும்.
‘துருவங்கள் பதினாறு ‘ படத்தை சரியாக வெளியிட வேண்டும் என்று இருந்தோம்.
ஏனென்றால் இப்போது நிறைய படங்கள் எடுக்கப் படுகின்றன . வெளியாகின்றன. ஆனால் எத்தனை படங்கள் வெற்றி பெறுகின்றன என்று கூற முடிவதில்லை.
இப்போதுள்ள தொழில்நுட்ப சாத்தியங்களில் படம் எடுப்பது சுலபம். அதை வியாபாரம் செய்வதும் வெளியிடுவதும் மிகவும் சிரமம்.
சிலர் படம் எடுக்கிறார்கள். யாருக்காக எடுக்கிறார்கள்? எப்படிக் கொண்டு சேர்க்கப் போகிறார்கள் என்று தெரிவதில்லை.
இப்படிப்பட்ட சூழலில் பத்தோடு பதினொன்றாக நல்ல முயற்சிகள் கூட கண்டு கொள்ளாமல் போய் விடுகின்றன. அப்படி ஒரு படமாகும் நிலை ‘துருவங்கள் பதினாறு ‘ படத்துக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்று யோசித்து வெளியிடுவதில் கவனமாக இருந்தோம்.
டிசம்பர் .29-ல் படம் வெளிவருகிறது.
படத்தை திரைஅரங்கிற்கு வந்து பாருங்கள் நிச்சயம் விறுவிறுப்பான புது அனுபவத்தைத் தரும்.”
இவ்வாறு சக்திவேலன் கூறினார்.