யோகி பாபு, இனியா,மொட்டை ராஜேந்திரன் ,மகேஷ், பால சரவணன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஸ்வின், சத்யா, சீனியம்மா,வினோத் தங்கராஜ் நடித்துள்ளனர்.டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ளார். இசை கே.எஸ்.மனோஜ்.அரவிந்த் வெள்ளைப் பாண்டியன், அன்பரசு கணேசன் தயாரித்துள்ளனர்.
அந்த ஊர் கோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் வழக்கம் போல ஒரு போட்டி நிலவுகிறது.எப்போதும் திருவிழாவில் மாரிமுத்துவுக்கு முதல் மரியாதை கொடுப்பதற்கு நமோ நாராயணன் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
நான்காண்டுகளாக ஊர் திருவிழாவோ ஏதாவது காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு கொண்டே செல்கிறது. அது மட்டுமல்லாமல் திருவிழாவில் காட்டப்படுகிற கோயிலுக்குச் சொந்தமான கிரீடம் போலியானது என்று நமோநாராயணன் கூறவே, அது காணாமல் போய்விட்டது என்றும் காணாமல் போனதைக் கண்டுபிடிப்பதாகவும் மாரிமுத்து கூறுகிறார். அதன் பின்னணி காரணம் ?மாரிமுத்துவின் மகள் மீது அந்த ஊருக்கு திரைப்படம் போட்டுக் காட்ட வரும் யோகி பாபு காதல் கொள்ளவே யோகி பாபுவைக் கொன்று ஒரு கிணற்றில் போட்டு கொளுத்தி விடுகிறார்கள்.அந்தக் கிணற்றில் பேய் இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
யோகி பாபு பேய் வடிவில் உலா வந்து பழி வாங்குவதாகவும் மக்கள் நம்புகிறார்கள். காணாமல் போன கிரீடம் எங்கே போனது? கோயில் திருவிழா நடந்ததா என்பதுதான் மீதிக் கதை.
யோகி பாபு வழக்கமான மிகையான வாய் நீளம் காட்டும் வசனங்கள் மூலம் சிரிக்க வைக்கிறார். யோகி பாபு தான் கதாநாயகன் போல் சித்தரிக்கப்பட்டாலும் குறைவான காட்சிகளிலேயே வருகிறார்.ஆனாலும் கதையின் மையமாக அவர் இருப்பதால் படம் முழுக்க அவர் வருவது போல் தோன்றுகிறது. அவருக்கு ஜோடியாக வரும் இனியாவையும் சொற்பமான காட்சிகளில் தலைகாட்ட வைத்திருக்கிறார்கள்.யோகி பாபு இல்லாத குறையை பாலசரவணன், மகேஷ், செண்ட்ராயன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோரைக் கூட்டணி சேர்த்துக் கொண்டு ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள்.
20 வருஷத்துக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னா என்று ஆளாளுக்கு பிளாஷ்பேக் சொல்லியே அலுப்பூட்டுகிறார்கள். காட்சிகளின் நம்பகத்தன்மை இல்லாததால் கதையே மனதில் ஒட்டவில்லை.
ரவிவர்மாவின் ஒளிப்பதிவும், கே.எஸ்.மனோஜின் இசையும் கதைக்கு ஏற்ப பயணம் செய்துள்ளன.எழுதி இயக்கியிருக்கும் டெனிஸ் மஞ்சுநாத், முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.திரைக்கதையில் திணறித் திணறி, சிரிக்க வைப்பது எளிதான விஷயம் அல்ல என்றும் படத்தின் மூலம் புரிய வைக்கிறார்.
யோகி பாபுவை மட்டும் நம்பிய இயக்குநர் திரைக்கதையை நம்பாதது துரதிர்ஷ்டமே. மொத்தத்தில், இந்த ‘தூக்குதுரை’ ரசிகர்களின் மனதில் பெரியதாகத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே கூற வேண்டும்.