தூக்கு தண்டனையைப் பற்றிப் பேசும் படமாக உருவாகியுள்ளது ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’.
இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’ படங்களுக்குப்பின் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், யுடிவி மோஷன் பிக்சர்ஸுக்காக இயக்கி முடித்திருக்கும் படம்தான் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’.
இதுவும் தமிழில் இதுவரை சொல்லப்படாத கதைக்களம் இது. ஆம் ,தூக்கு தண்டனையைப் பற்றி விரிவாகப் பேசும் முதல் படமாக இதைக் கூறலாம்.படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் திரையிடப்பட்ட ‘புறம்போக்கு’ படம் பற்றிய ஆவணப்படத்தின் மூலம் இது புரிந்தது. படத்தில் இடம்பெறும் ஒரு ஜெயில் செட்டை இயல்பாக கலை இயக்குநர் செல்வகுமார் வடிவமைத்திருக்கிறார். அதற்குள் சென்று எங்கெங்கே என்னென்ன காட்சிகள் எவ்வாறு படமாக்கப் பட்டன என்று ஜனநாதனே விளக்கும் ஆவணப்படம்தான் அது.
டிரைலருக்கு பதிலாக திரையிடப்பட்ட இந்த ஆவணப் படமே புதுமையாகவும், புறம்போக்கு படத்தின் தன்மையைச் சொல்வதாகவும் இருந்தது. ஜனநாதன், “என்னை நம்பி முதல் காப்பி அடிப்படையில் இந்தப்படத்தைத் தயாரிக்க முன்வந்த யுடிவி தனஞ்செயன் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்…” என்று ஆரம்பித்து, படத்தின் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் தன் உதவி இயக்குநர்களையும் மேடையேற்றி நன்றி தெரிவித்தார். அவர்கள் இல்லையென்றால் இந்தப்படம் சாத்தியமேயில்லை என்று நெகிழ்ந்தவர் தொடர்ந்தார்.
“படத்தில் ஆர்யாவை நடிக்கக் கேட்டதும் ஆர்வத்துடன் சம்மதித்தார். அதேபோல் விஜயசேதுபதியிடம் பேசியபோது, “உங்கள் படத்தில் நான் நடிக்க வேண்டும்….” என்று கூறி அவரே என்னை வந்து பார்த்தார். ஏற்கனவே இயற்கை படத்தில் நடித்ததால் அந்த நட்பில் ஷாமும் நடிக்க ஒப்புக்கொண்டார். படத்தில் வரும் ஒரு பெண் போராளி ‘குயிலி’ வேடத்தில் நடிக்க, கார்த்திகாவே பொருத்தமாகத் தெரிந்தார்.எனவே அவரையே நடிக்க வைத்தோம்.தமிழக வரலாற்றில் வேலு நாச்சியார் படையில் தற்கொலைப் படையின் தலைமைப் பொறுப்பில் இடம்பெற்ற முதல் பெண் ‘குயிலி’ என்பவர்தான். அவர் நினைவாகவே அந்தப் பெயரை அவருக்கு வைத்தேன்.
அனைத்து கலைஞர்களும் எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஒன்றாகப் பயணித்து 100 நாள்களுக்கு மேல் ஒத்துழைத்து நடித்தது இந்தப்படத்துக்காகத்தான் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளலாம்…” என்றார்.