தூய்மைப் பணியாளர்களுக்கு பெட்ரிசியன் கல்லூரியின் கொரோனா நலத் திட்ட உதவிகள்! காவல்துறையினர் முன்னிலையில் அருட் சகோதரர் டாக்டர் ஜான்சன் ரெக்ஸ் தனபால் வழங்கினார்!
தூய்மைப் பணியாளர்களுக்கு பெட்ரிசியன் கல்லூரியின் கொரோனா நலத் திட்ட உதவிகள்! அருட் சகோதரர் டாக்டர் ஜான்சன் ரெக்ஸ் தனபால் வழங்கினார்! சென்னை, அடையார், பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக கொரோனா ஊரடங்கு காலத்திலும் பொது மக்களுக்காக இரவும் பகலும் தன்னலம் கருதாது உழைத்துக் கொண்டிருக்கின்ற தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் நிகழ்வு சென்னைப் பெரு மாநகராட்சி அடையார் மண்டலம் 13-ல் 18.4.2020 அன்று நடைபெற்றது.
உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள், ஊழியர்கள் என 225 குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, ரவை, சோப்பு, பற்பசை, மிளகாய், தனியா, எண்ணெய் என மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.
பெட்ரிசியன் கல்லூரியின் இயக்குநர் அருட் சகோதரர் டாக்டர் ஜான்சன் ரெக்ஸ் தனபால் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நலத்திட்ட நிகழ்வில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டு ஒரு மாதத்திற்குத் தேவையான பொருட்களைப் பெற்றுக் கொண்டனர்.
பின்னர், புற்று நோயால் பாதிக்கப்பட்ட 46 குழந்தைகளைப் பராமரிக்கும் ஸ்நேகாலயா’ தொண்டு நிறுவனத்திற்கு 75 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருட்களடங்கிய 25 பைகள் வழங்கப்பட்டன.
இந்த நலத்திட்ட நிகழ்ச்சியை அடையார் J 2 காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு.கிறிஸ்டின் ஜெயசில் மற்றும் காவலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் அரசாங்கம் வழிகாட்டிய சமூக இடைவெளியின்படி நடத்திக் கொடுத்தனர். பெட்ரிசியன் கல்லூரி நிர்வாகத்திற்குத் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஸ்நேகாலயா தொண்டு நிறுவனத்தார் தங்களின் நன்றிகளைக் கூறினர்.
முன்னதாக அடையாறு ருக்மணி நகரில் 200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அடுத்ததாக அடையாறு பகுதியில் மொத்தம் 1000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளைச் செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.
கல்விப்பணியோடு சமூகப்பணியிலும் தன்னை முழு மனதோடு ஈடுபடுத்திக் கொள்வதை வழக்கமாக கொண்ட பெட்ரிசியன் கல்லூரியின் இயக்குநர் அருட் சகோதரர் டாக்டர் ஜான்சன் ரெக்ஸ் தனபால் அவர்கள் சென்னையில் சில வருடங்கள் முன் ஏற்பட்ட பெரு வெள்ளம், கஜா புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தானே களமிறங்கிச் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி!