தென் இந்திய அழகி போட்டியில் ‘சிறந்த புன்னகை’ பட்டத்தை வென்ற அஞ்சலி ராவ், தற்போது ‘பீச்சாங்கை’ படம் மூலம் கதாநாயகியாக உருவெடுத்துள்ளார்
‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தில் சிலம்பரசனுக்கு தங்கையாக நடித்து, ரசிகர்களின் பாராட்டுகளை வெகுவாக பெற்றவர் அஞ்சலி ராவ். MBA பட்டதாரியான அஞ்சலி ராவ், தற்போது ‘பீச்சாங்கை’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக உருவாகியுள்ளார். அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி, ‘கர்ஸா என்டர்டைன்மெண்ட்’ சார்பில் ஆர் எஸ் கார்த்திக் மற்றும் ‘பி ஜி மீடியா ஒர்க்ஸ்’ சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் ‘பீச்சாங்கை’ திரைப்படத்தில் புதுமுகம் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
“நடிப்பின் மீது நான் வைத்திருக்கும் காதல் தான் என்னை பல விளம்பர படங்களிலும், வன்மம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் நடிப்பதற்கு பக்கபலமாய் இருந்தது. பல திரைப்படங்களில் நான் நடித்திருந்தாலும், முதல் முறையாக நான் கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் இந்த ‘பீச்சாங்கை’ தான். நான் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் அபிராமி. தந்தையோடு இணைந்து ஒரு தொலைபேசி கடை நடத்தி வரும் அபிராமியின் கதாபாத்திரம் இந்த படத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும். அவ்வப்போது திடீர் திடீர் முடிவுகளை எடுக்கும் மனோபாவத்தை கொண்டு இருக்கும் அபிராமி தான், பீச்சாங்கை கதைக்கு முக்கியமான திருப்புமுனை” என்று உற்சாகமாக கூறுகிறார் பீச்சாங்கை படத்தின் கதாநாயகி அஞ்சலி ராவ்.