பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு, ‘தேசிய தலைவர்’ என்கிற படமாக உருவாகியுள்ளது
ஜெ.எம்.பஷீர் கதையின் நாயகனாக நடித்துஉள்ளார். இப்படத்தை ஊமை விழிகள் படம் இயக்கிய ஆர். அரவிந்தராஜ் இயக்கி உள்ளார் .இளையராஜா இசையமைத்துள்ளார்.அகிலன் சியாலி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை ஒரு சமூகத்தின் தலைவராக அடையாளப்படுத்தும் காலத்தில் அவரது புகழை அறிந்து கொள்ளும் வகையில் காட்சிகள் உருவாகியுள்ளன.தனது ஜூனியர்களுக்கு ஆர்.அரவிந்தராஜ் கதை சொல்வது போல் தொடங்கி காட்சிகள் விரிகின்றன.
தெற்கு கடைக் கோடி கிராமத்தில் பிறந்த ஒருவர் எப்படி மக்கள் செல்வாக்குடன் உள்ளூர் தலைவராகி தமிழ்நாட்டில் அரசியல் தீர்மானிக்கும் தலைவராகத் திகழ்ந்து தேசிய தலைவராக உயர்கிறார் என்பதை காட்டுகிற படம் இது.
அவர் காந்தி, நேரு , நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ராஜாஜி போன்ற தலைவர்களை எந்த அளவிற்குச் சந்தித்து தேசிய அளவில் அரசியல் செய்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியாத ஒன்றாகும்.
ஒரு காலத்தில் காங்கிரஸ் -காமராஜர் உயர்வுக்கு பாடுபட்டவர், பிறகு காங்கிரஸ் எதிர் அணியில் நின்று அரசியல் செய்யும் நடவடிக்கைகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன.அவர் இம்மானுவேல் சேகரன் தொலை வழக்கில் கைது செய்யப்பட்டது, அந்த வழக்கில் நிரபராதி என்று அவர் விடுதலையாவது வரை காட்டப்பட்டுள்ளது .அவர் பிரம்மச்சரியம் கடை பிடித்ததும் பக்தியைக் கண்ணாக கருதுவதும் காட்சிகளாக வருகின்றன. தெய்வீகத்தையும் தேசியத்தையும் இரு கண்களாகப் போற்றியதையும் ,உடல்நிலை மோசமானதை தொடர்ந்து பொது வாழ்க்கையில் இருந்து விலகி அதன் பின்னர் தன் சொத்துக்களை பலதரப்பட்டவர்களுக்கு உதவ பிரித்துக் கொடுத்ததையும் காட்டுகிறார்கள்.
படத்தில் முத்துராமலிங்கத் தேவராக பஷீர் நடித்துள்ளார்.இளமைத் தோற்றத்தில் அவருக்கு வைக்கப்பட்டுள்ள ஒட்டுமீசை ஓர் உறுத்தலாக உள்ளது.மீசை இல்லாத காட்சிகளில் அச்சு அசலாகத் தோன்றுகிறார்.படத்தில் கதை சொல்லும் பாத்திரத்தில் இயக்குநர் ஆர். அரவிந்தராஜ் நடித்துள்ளார்.தேவருக்காக வாதாடும் வழக்கறிஞர் பாத்திரத்தில் ராதாரவி சிறப்பாக நடித்திருக்கிறார்.நீதிபதியாக பாரதிராஜா நடித்துள்ளார்.எம் எஸ் பாஸ்கர் சிறு பாத்திரத்தில் வருகிறார்.
இந்தப் படத்தில் காமராஜர், ராஜாஜி ,காந்தி, நேரு, படேல், நேதாஜி போன்ற தேசத்தலைவர்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நடிகர்களும் சரியாக நடித்துள்ளார்கள்.வரலாற்றைப் படமாக எடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்தக் கவனம் இந்த படத்தில் காப்பாற்றப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் சிறப்பாகவே அமைந்துள்ளன.அகிலன் சியாலி ஒளிப்பதிவில் குறை சொல்ல ஒன்றுமில்லை.படத்துக்காக பல்வேறு விதமான இடங்களில் தேடி அலைந்து படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள். அந்த காலத்தைக் கண் முன் நிறுத்தும் கலை இயக்கத்தில் கண்ணுக்குத் தெரியாமல் கலை இயக்குநர் கவனிக்க வைக்கிறார்.படம் ஆவணத் தன்மை கொண்டதாக இருப்பதால் மிதமான வேகம் தவிர்க்க முடியாது.இருந்தாலும் தேசியத் தலைவரை தாக்க முயற்சி செய்யும்போது நடக்கும் அந்த மாட்டுவண்டி சண்டை திகில் ஊட்டும் ரகம்.
ஒரு வரலாறு பேசும் படத்தில் சில பாத்திரங்களில் வெளிப்பாடுகளில் தெரியும் மிகை நடிப்பு தவிர்க்கப்பட்டிருக்கலாம். மற்றபடி தேசியத் தலைவர் படம் அந்தக் கால வரலாற்று செய்திகளையும் சம்பவங்களையும் கண்முன் நிறுத்துகிறது. ஒரு தனி மனிதரின் கதையாக இல்லாமல் ஒரு தேசத்தின் கால வரைபடத்தை விரித்துக் காட்டும் ஆவணமாகவும் இது இருக்கிறது.இந்தப் படத்தில் மேலும் திரைக்கதையில் சீர் செய்து எடுத்திருந்தால் கூடுதல் கவனம் பெற்று இருக்கும்.
மொத்தத்தில் ‘தேசிய தலைவர்’ திரைப்படத்தில் ஓர் ஆவண முயற்சி.


