JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் மற்றும் க்றிஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் 62 ஆம் தேசிய விருதுகளில் சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. கடந்த வருடம் தேசிய விருது வென்ற ‘தங்க மீன்கள்’ திரைப்படதிற்குப்பின் இவ்விருதினை வென்றதன் மூலம் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக தேசிய விருது வெல்லும் பெருமையை பெற்றுள்ளது. JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம். பிரம்மா G இயக்கியுள்ள இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தரமான படங்களின் மூலம் மக்களின் பாராட்டிலும், ஆதரவிலும் வளர்ந்து நிற்கும் JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தயாரித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இன்று இந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது இந்நிறுவனம். ரசிகர்கள் மத்தியில் நல்ல சினிமாவுக்கான ஆர்வத்தை வளர்க்கவும், உலகத் தரம்வாய்ந்த தமிழ்ப் படங்களை சர்வதேச அளவில் இட்டு ச் செல்வதற்கும் நல்ல தளமாக விளங்கி வருகிறது JSK சதிஷ் குமார் அவர்களின் JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம்.
“ தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு தேசிய விருது கிடைத்திருக்கிறது மிகப் பெருமிதமான தருணம் இது. நல்ல படங்கள் அதற்கான அந்தஸ்தை பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்நிறுவனத்தை ஆரம்பித்தோம். எல்லா இடங்களிலிருந்து தொடர்ந்து கிடைக்கும் ஆதரவும், விருதுகளும் என்னை மென்மேலும் நல்ல படங்களைத் தயாரிக்க ஊக்கப் படுத்துகிறது.”
“ ‘குற்றம் கடிதல்’ திரைப்படத்திற்கு தொடர்ந்து குவியும் விருதுகளாலும், பாராட்டுகளாலும் மக்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. இந்த எதிர்பார்ப்பு வியாபார ரீதியிலும், மக்களுக்கு படத்தை எடுத்து செல்வதையும் எளிதாக்கியுள்ளது. மிக விரைவில் இப்படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. நல்லெண்ணமும், தணிந்த பார்வையும், தேர்ந்த யுக்திகளும், தரம் வாய்ந்த படைப்புகளுமே எங்கள் நிறுவனத்தின் நான்கு தூண்களாய் நான் கருதுகிறேன்.” என்றுக் கூறினார் தயாரிப்பாளர் JSK சதீஷ் குமார்.