‘தேஜாவு ‘ விமர்சனம்

திரில்லர் கதை கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுபவர் அருள்நிதி. அப்படிப்பட்ட படங்களைத் தேர்வு செய்வதையே தனது பணியாக வைத்துள்ளார்.அந்த வரிசையில் வந்துள்ள படம் தான் இந்த ‘தேஜாவு’.அறிமுக இயக்குநர் அரவிந்த் சீனிவாசன் இயக்கியுள்ளார்.

அருள்நிதி,மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார்.

கனவு காண்பது நிஜத்தில் நடப்பது போலவே, எழுத்தாளர் ஒருவர் எழுதுவது நிஜத்தில் நடக்கிறது. ஒரு பெண் முகமூடி அணிந்த மர்ம நபர்களால் கடத்தப்படுகிறார் என்று அவர் எழுதும்போது அப்படியே நடக்கிறது. இது காவல்துறைக்குத் தெரியும் போது இதில் உள்ள மர்மம் என்ன என்பதை நாயகன் கண்டுபிடிக்கிறாரா இல்லையா என்பது தான்’ தேஜாவு’ படத்தின் ஒருவரிக் கதை.

தான் எழுதிய கதையில் உள்ள கதாபாத்திரங்கள் தன்னைக் கொலை செய்வதாக மிரட்டுதாக காவல் நிலையத்தில் எழுத்தாளர் புகார் கொடுக்கிறார். ஆரம்பத்தில் இதைக் காவல்துறையினர் கேலி,கிண்டலாகப் பார்த்தாலும் தொடர்ந்து அவர் எழுதுவது நடக்கவே எச்சரிக்கை ஆகின்றனர். ஏனென்றால் கடத்தப்பட்டிருப்பது ஒரு போலீஸ் ஐபிஎஸ் அதிகாரியின் மகள். எனவே இந்த வழக்கை ரகசியமாக விசாரிக்க வரவழைக்கப்படுகிறார் அருள்நிதி. அவர் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தாரா? எழுத்தாளர் கதைக்கும் அந்தக் கடத்தல் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு. ..? இறுதியாக கடத்தப்பட்ட போலீஸ் அதிகாரியின் மகளை நாயகன் கண்டுபிடித்தாரா..? கடத்தல் சம்பவத்திற்கு பின்னால் உள்ளவர்கள் யார்? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில் தான் மீதிக்கதை

கடத்தப்பட்ட மகளின் போலீஸ் உயர் அதிகாரி அம்மா தான் மதுபாலா.விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி தான் அருள்நிதி.

விக்ரம் குமார் என்கிற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் அருள் நிதி தனது விசாரணையை,எழுத்தாளராக வரும் அசியுத்திடம் தொடங்குகிறார். அசியுத் எழுதும் கதைகள் நிஜத்தில் நடப்பது போல் காட்சிகள் வருகின்றன.

அறிமுக இயக்குநர் அரவிந்த் மிகவும் சிறப்பாகவே தனது முதல் படத்தை இயக்கியிருக்கிறார் என்று முதல் பாதியைப் பார்க்கும் போது சொல்ல வைக்கிறார். படத்தின் வரும் திரில்லர் காட்சிகள் அதிகமாக சஸ்பென்ஸ் நிறைந்த கதையாக உருவாக்கியுள்ளார். படத்திற்கு ஒளிப்பதிவும், இசையும் கூடுதல் பலம் .பி.ஜி.முத்தையா தனது ஒளிப்பதிவில் காட்சிகளைக் கதை கேட்ட விதத்தில் படமாக்கி உள்ளார்.
பின்னணி இசையில் ஜிப்ரானும் குறையின்றிப் பணியாற்றியுள்ளார்.

படத்தில் பாடல்கள், சண்டைக் காட்சிகளை வைக்காமலேயே காட்சிகள் மூலம் சுவாரஸ்யப்படுத்தி உள்ளார் இயக்குநர் அரவிந்த்.

படத்தில் அருள் நிதி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். அவர் வரும் காட்சிகள் அனைத்தும் விறுவிறு. அதிகாரம் உள்ள காவல் அதிகாரி பாத்திரத்தில் வருவதால் மாறுபட்ட நடிப்பை வழங்க அவருக்கு வாய்ப்பு இல்லை. முடிந்தவரை பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார்.அதை அளவிற்கு மதுபாலாவும் நீண்ட கதாபாத்திரத்தில் குறை இல்லாத நடிப்பை வழங்கியுள்ளார்.

ஸ்மிருதி வெங்கட் , ,அசியுத், காளி வெங்கட் போன்றவர்களும் மனதில் பதிகிறார்கள்.
முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பையும் வேகத்தையும் இரண்டாவது பாதியிலும் பராமரித்து இருந்தால் படம் மேலும் நன்றாக அமைந்திருக்கும்.

அருள்நிதியை எதிர்பார்த்து வருபவர்களுக்கு ஏமாற்றம் அளிக்காது.
திரில்லர் ரசிகர்களுக்குப் பிடித்த படம்.