தைரியமா இருங்க… சந்தோஷம் கிடைக்கும்: நடிகர் அப்புக்குட்டி


தேசிய விருது பெற்ற யதார்த்த நடிகர் அப்புக்குட்டிக்கு இன்று பிறந்தநாள். கொரோனா காலத்தில் வீட்டுக்குள்ளேயேதனிமனித இடைவெளிக்குள் நின்று  மகிழ்ச்சி அடைகிறார்.
இந்தக் கொரோனா காலம் பற்றி அவர் என்ன நினைக்கிறார்?
இந்தக் காலம் ஒரு சோதனையான காலம் மட்டுமல்ல இக்கட்டான நெருக்கடியான காலம்.  இது மனிதாபிமானத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு சோதனையாகும். இதுவரை  45 நாட்கள் கடந்து விட்டன .இதில் பல பலதரப்பட்ட மனிதர்களை அடையாளம் காண முடிகிறது.
மடி நிறைய பொருள் இருந்தும் மனம் நிறைய இருள் இருக்கும் மனிதர்களையும், இருப்பதைப் பிரித்துக் கொடுக்கும் மனிதர்களையும் காண முடிகிறது. இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார். அவர்கள் மத்தியில் இந்த நாட்டில்  தன்னாலான உதவிகளை எத்தனையோ பேர் பெரிய மனதோடு செய்துகொண்டிருக்கிறார்கள்.
இருட்டாக இருக்கிறது என்று சொல்பவரை விட ஒரு சிறு மெழுகுவர்த்தி ஏற்றுபவர் உயர்வானவர்.  பிரார்த்திக்கும் உதடுகளை விட உதவ நீளும் கரங்கள் புனிதமானவை என்பதையும் பார்க்க முடிகிறது.
இந்தச் சோதனையான காலத்தில்  ஏதாவது உதவி செய்யுங்கள், முடிந்ததை உதவி செய்யுங்கள், சகமனிதனை மதியுங்கள். சிரமப்படுவோருக்குத் தன்னளவில் ஏதாவது செய்யுங்கள் என்பதுதான் என் வேண்டுகோள். நானும் என்னளவில்  ஏதாவது செய்து கொண்டிருக்கிறேன் .எனக்குப் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றும் இல்லை.நிம்மதி திரும்பினால் போதும். போராட்டம் எப்போது முடியும் என்று தெரியவில்லை. எல்லாரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதுதான் என்னுடைய பிரார்த்தனை. இறைவன் மீட்டுக் கொண்டு வருவான் நல்ல முடிவு விரைவில் வரும்.  மன தைரியத்துடன் எதிர்கொள்வோம். மக்கள் தைரியமா இருந்தால் சந்தோஷம் கிடைக்கும்”, என்றவர், தான்நடிக்கும் படங்கள் பற்றி என்ன கூறுகிறார்?
“நான் நடித்து ‘ வாழ்க விவசாயி’ வரவேண்டியிருக்கிறது.இன்னொரு புதிய படம் ‘வெட்டிப்பசங்க’  தயாராகி வருகிறது. சசிகுமார் அவர்களுடன் ‘பரமகுரு’ படத்தில் நடிக்கிறேன் .மேலும் ‘வல்லவனுக்கு வல்லவன்’,’பூம்பூம் காளை’,  ‘வைரி’, ‘ ரூட்டு’,’ இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு’ போன்ற படங்கள் கைவசம் உள்ளன .அது மட்டுமல்ல தமிழ் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்கிறேன். முதன் முதலாக நான் தெலுங்கில் அறிமுகமாகி  நடிக்கிறேன். 
நான் நடித்த சில படங்கள் இந்நேரம் வெளியாகியிருக்க வேண்டியது.சோதனையான காலம் இது. அதனால் தடைபட்டு நிற்கின்றன.
இந்த கொரோனா காலத்திலும் ‘வாழ்க விவசாயி’ படத்தை  மறக்க முடியாது .இந்தப் படம் எப்போது வெளியானாலும் நன்றாக ஓடும். கொரோனா  வைரஸ் விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர வைத்துள்ளது .இந்த நாட்டில்  தொழில்கள்  ஏராளமாக உள்ளன. ஆனால் ஒரு காலத்திலும் தடை செய்ய முடியாத ஒரு தொழில் விவசாயம் தான் என்பதை கொரோனா அழுத்திச் சொல்லியிருக்கிறது. உண்ணும் உணவுதான் முக்கியம்.  அதன் பின்னர்தான் மற்றவை என்பதை இந்த கொரோனா அடித்துச் சொல்லியிருக்கிறது .அப்படிப்பட்ட உணவு தயாரிக்கும் தொழிலான விவசாயம் செய்யும் விவசாயிகள் பற்றிப் பேசுகிற ‘வாழ்க விவசாயி’ படம் இன்னும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக மாறி இருக்கிறது. அந்தப் படம் எப்போது வெளியானாலும் கொண்டாடப்படும். ஏனென்றால் மக்கள் விவசாயத்தை இப்போதுதான் உணர்ந்திருக்கிறார்கள். படம் வெளியாகும் அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன்” என்றார்.