மோகன்லால், ஷோபனா, மணிய பிள்ளை ராஜு, இர்ஷாத் அலி, பிரகாஷ் வர்மா, பினு பாப்பு, பர்ஹான் பாசில், தாமஸ் மேத்யூ, ஷாய் ஜோ அடிமல்லி,அமிர்தவர்ஷினி நடித்துள்ளனர்.
தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். ஷாஜிகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் ஷபீக் வி.பி., நிஷாத் யூசுப்,ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.ஒலி வடிவமைப்பு விஷ்ணு கோவிந்த்.தமிழ் மொழி மாற்று இயக்குநர் ஆர்பி பாலா,ரெஜ புத்ரா விஷுவல் மீடியா சார்பில் எம் ரஞ்சித் தயாரித்துள்ளார்.
பாவங்களும் அநியாயங்களும் செய்யும்போது அத்துடன் முற்றுப்பெறுவதில்லை. அவை பழிவாங்கத் பின் ‘தொடரும்’ என்பதைச் சொல்கிற கதை.
‘யானைகள் நடக்கும் போது அவற்றுடன் காடும் கூடவே நடக்கிறது’ என்ற வாசகத்துடன் படம் தொடங்குகிறது.
மோகன்லால் ஓர் வாடகை கார் ஓட்டுநர்.தன்னிடம் உள்ள பழைய அம்பாசிடர் கார் மீது அவருக்கு அலாதியான அன்பு உண்டு. உயிருள்ள ஜீவனைப் போல் நேசிக்கிறார். மனைவி,ஒரு மகன், மகள் என பாசமான குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். மோகன் லால் ஊரில் இல்லாத சமயத்தில், அவரது காரை போலீஸ் பறிமுதல் செய்து விடுகிறது. ஊர் திரும்பும் மோகன்லால் காரை மீட்கப் போராடுகிறார். சப்-இன்ஸ்பெக்டர் முரட்டுத்தனமும் பிடிவாதமும் கொண்டவர். அவர் காரை கொடுக்க மறுத்தாலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் காரைத் திரும்ப ஒப்படைக்கிறார். அதே காரில் இன்ஸ்பெக்டர் , இரண்டு காவலர்களுடன் மோகன்லால் பயணிக்க வேண்டிய சூழல் வருகிறது.அந்த இரவுப் பயணம் மோகன்லால் வாழ்க்கையில் மிகப்பெரிய புயலை உருவாக்குகிறது.அதன் விளைவாகப் பல்வேறு திகிலான அனுபவத்துக்கு இட்டுச் செல்கிறது. அது என்ன? என்பதை பரபரப்பான விதத்தில் சொல்வதே ‘தொடரும்’. இந்தப் படத்தில் பென்ஸ் என்கிற சண்முகம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மோகன்லால் பொறுப்பான குடும்ப தலைவராக வருகிறார்.மனைவியிடம் காதல் ,பிள்ளைகளிடம் பாசம் என்று ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பத் தலைவராக வருகிறார்.தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிற அவருக்கு ஏற்படும் பிரச்சினை பயங்கரமானது.பாதிக்கப்பட்ட அவர் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை நிரூபிக்கிறார்.அடக்க ஒடுக்கமாக இருப்பவர் ஆவேசம் கொள்ளும் போது அதிரடி காட்டுகிறார்.
மோகன்லாலின் மனைவி லலிதாவாக ஷோபனா வருகிறார் .அவரது தோற்றமும் உடல் மொழியும் நடிக்கவே தேவையில்லை என்பதை நிரூபிக்கின்றன.தன் அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு அடர்த்தி கூட்டியிருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பிரகாஷ் வர்மா, மென் நகை புரிந்து கொண்டேன் செய்யும் வன்முறை மிரட்டல். போலீஸ் எஸ்.ஐ-யாக நடித்திருக்கும் பினு பப்புவின் நடிப்பிலும் குறை இல்லை. காவலர் சுதீஷாக வரும் பர்ஹான் பாசில், தாமஸ் மேத்யூ அமிர்தவர்ஷினி, ஷாய்ஜோ அடிமல்லி என மற்ற துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளவர்களும் மீட்டர் தாண்டாத நடிப்பில் மிளிர்கிறார்கள்.
சிறப்புத் தோற்றத்தில் வரும் பாரதிராஜா, இளவரசு தோன்றும் காட்சிகளும் தமிழகத்துப் பின்புலக் காட்சிகளும் சிறப்பு.
ஒளிப்பதிவாளர் ஷாஜி குமாரின் கேமரா, மலை, காடு,மலைப்பாதை, மழை என இயற்கையோடு இணைத்து காட்சிகளை உருவாக்கி இருப்பது கூடுதல் ஆழம் தருகிறது.படத்தில் மழை ஒரு கதாபாத்திரம் போலவே வருகிறது.
இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் இசையில் கதைக்களத்தைக் கூறும் பாடல்களும்,காட்சிகளின் விறுவிறுப்பைக் கூட்டும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒளியும் ஒலியும் சேர்ந்ததுதான் திரைப்படம் என்கிற வகையில் இந்த படத்தில் ஒலி மிகப் பெரிய பங்கு வகிக்கிறது.ஒலி வடிவமைப்பு விஷ்ணு கோவிந்த் பாராட்டுக்குரியவர்.
இது ஒரு மலையாள மொழிமாற்றுப் படம் என்று தெரியாத அளவிற்கு முழுக்க முழுக்க தமிழ்த் தன்மையோடு மொழிமாற்று பணிகளைக் கவனித்துள்ள ஆர்.பி பாலா தன் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார்.
படத்தின் நீளம் 166.18 நிமிடங்கள் இருந்தாலும்,காட்சிகளில் சோர்வில்லை; விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை. இறுதி வரை பார்வையாளர்களைக் கட்டிப்போட்டுள்ளது. இந்த வகையில் படத்தொகுப்பாளர்கள் சபீக்.வி.பி மற்றும் நிஷாத் யூசுப் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.
கே.ஆர்.சுனில் மற்றும் தருண் மூர்த்தி ஆகியோரது எழுத்தில், கெளரவக் கொலை என்கிற கருத்தை அடிநாதமாக எடுத்துக் கொண்டு அழகான திரை உருவாக்கத்தில் அசத்தும் வகையில் ஒரு பரபரப்பான திரில்லராக மாற்றிக் கொடுத்துள்ளனர்.
கேரளாவில் நடந்த நிலச்சரிவைப் பின்புலக் காட்சிகள் ஆக்கி காட்சிகளை ஆழப்படுத்தி உள்ளார்கள்.நடிகர்களின் சின்ன சின்ன அசைவுகளைக் கூட அளவு மீறாமல் நடிப்புத்திறனை வெளிக்கொணர்ந்து நடிக்க வைத்துள்ளார் இயக்குநர்.
மொத்தத்தில் அனைவரையும் கவரும் அசத்தலான படைப்பாக உருவாகியுள்ளது ‘தொடரும்’. படம் பேசப்படும் வகையில் உள்ளதால் படத்தை வெற்றி ‘தொடரும்’ எனலாம்.