முருகா, பிடிச்சிருக்கு மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அசோக். கோழிகூவுது, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து, ஒத்தைக்கு ஒத்த, புத்தன் ஏசு காந்தி, மாய புத்தகம், மாயத்திரை, இன்னும் பெயரிடப்படாத 3 மூன்று படங்களிலும் நடித்து வருகிறார்.
பிட்நெஸ் என்று சொல்லப்படும் உடற்தகுதி / ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களுள் அசோக்கும் ஒருவர். மிகவும் ஈடுபாட்டுடன் ஒவ்வொருவரும் உடற்பயிற்சிகளை தினமும் செய்யவேண்டும் என்பதற்காக பிரீக்கத்தான் Freak- a-thon எனும் பெயரில் இசை மற்றும் ஆடலுடன் கூடிய உடற்பயிற்சி முறையினை அறிமுகப்படுத்தி இந்தியா மற்றும் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளிலும் இதனைப் பிரபலப்படுத்தியவர்.
நடிப்புடன் தனது படைப்பாற்றலையும் மெருகேற்றும் விதமாக ,தனது ஃபிரிக்கத்தான் பிலிம்ஸ் மூலம் அவ்வப்பொழுது விழிப்புணர்வு குறும்படங்களையும் இயக்கி நடித்து வருகிறார்.
குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கெதிரான ‘வியோல்’ என்கிற குறும்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரானா லாக்டவுனில் சினிமாத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் சார்ந்த இயக்கமும் தடைபட்டிருக்கும் நிலையில், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு பசியோடு இருப்பவர்களின் பசியினை பல்வேறு தன்னார்வலர்கள் போக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் இக்கட்டான சூழ்நிலைகளைத் தாண்டி வருவதற்கு மனிதம் இருந்தால் மட்டுமே போதும் என்கிற அடிப்படையிலும் ‘மனிதம்’ என்கிற குறும்படத்தை நடித்து இயக்கியிருக்கிறார் அசோக்.
Shortfilm Youtube Link: https://youtu.be/Q-dZQvcJwWo
சமூக இடைவெளி உள்ளிட்ட கொரானா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடித்து மோனோ ஆக்டிங் என்று சொல்லப்படும் ஒரே நடிகர் அதாவது அசோக் மட்டுமே நடித்து வெளிவந்திருக்கும் மனிதம் குறும்படத்தை அவரது மனைவி மொபைல் போனிலேயே படம் பிடித்து தனது கணவரின் படைப்பாற்றலுக்கு துணை நின்றிருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளிக் கொண்டிருக்கிறது, நடிகர் அசோக்கின் மனிதம்.