தன் படங்களில் அரசியல் பேசி வந்த பா. ரஞ்சித் காதல் என்பதும் ஒரு அரசியல் தான் என்று சொல்கிற படம் தான் நட்சத்திரம் நகர்கிறது.
சினிமாவில் நடித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரிலிருந்து கிளம்பி பாண்டிச்சேரி வருகிறார் கலையரசன். அங்கு நாடகக் குழு ஒன்றில் இணைந்து நடிப்பு பயிற்சியில் ஈடுபடுகிறார். அந்தக் குழுவிலிருப்பவர்களுடன் கருத்து வேறுபாடு வருகிறது.
தொடர்ந்து நாடகக் குழு சார்பில் அரசியல் நாடகம் ஒன்று நடத்த திட்டமிடுகிறார்கள். இதையொட்டி துஷாரா, காளிதாஸ் ஜெயராம் காதல் முறிகிறது. இப்படியான பல கிளைக்கதைகள் கிளை விட்டுப் பிரிந்து நகர்கின்றன. இறுதியில் அரசியல் நாடகம் நடந்ததா? கலையரசன் என்ன ஆனார்? காளிதாஸின் காதல் என்ன ஆனது? என்பதற்கெல்லாம் விடை சொல்லும் படம் தான் ‘நட்சத்திரம் நகர்கிறது’.
கருத்தியல் முரண்பாடுகள், சொந்த விருப்பங்கள் வெறுப்புகள் குழுவில் இருப்பவர்களின் காதல் சிக்கல்கள் போன்றவற்றைக் கடந்து அந்த நாடகத்தை கடைசியாக மக்கள் மத்தியில் நிகழ்த்திக்காட்டினார்களா இல்லையா என்பதே மீதிக் கதை.
தமிழ் என்கின்ற ரெனேவாக வரும் துஷாரா விஜயன் நடித்துள்ளது உரிமை பேசும் அழுத்தமான பாத்திரம்.தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் நாயகி. இனியனாக காளிதாஸ் ஜெயராம் தனக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரத்தை கச்சிதமாக சுமந்து மிளிர்கிறார். அவரது பாத்திரத்திற்கு இன்னும் செழுமை சேர்த்து இருக்கலாம்.
பாரம்பரியம் பழமை என்று பேசும் கலையரசனின் நடிப்பு ஈர்க்கிறது.
நாடகக் குழுவில் உள்ள கதாபாத்திரங்களின் அனுபவங்கள் நிறைந்த தேர்ச்சியான நடிப்பு படத்திற்கு பலம்.
இந்தப் படத்தில் பல்வேறு வகையான காதல்களை எடுத்துக் காட்டியுள்ளார் பா.ரஞ்சித். இந்த உலகில் காதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமானதாக இருக்கவில்லை. மாறாக அங்கே காதல் பாலின பேதங்கள், சாதி, மத, பேதங்கள் கடந்தது என்று காட்சிப் படுத்தியுள்ளார்.அங்கே தன்பால் ஈர்ப்பாளர்களின் காதலும், திருநங்கையின் காதலும் தயக்கமில்லாமல் பேசப்படுகிறது. இதுதான் படம் பார்ப்பவர்களை நெருட வைக்கிறது. இந்த மீறல்கள் சிலரால் புதுமை என்று பாராட்டப்பட்டாலும் வெகுஜன மக்களுக்கு உறுத்தலாக இருக்கும். ரஞ்சித் படங்களில் எப்போதும் தென்படுவது பிரச்சாரம் இல்லாத இயல்பான திரைக்கதைதான். ஆனால் இதில் பிரச்சார நெடி தும்மல் வரவைக்கும் அளவுக்கு உள்ளது.அவர் வழக்கம்போல தனது அரசியல் பேசி இருக்கிறார்.எப்போதும் அளவோடு பேசுவார்.இதில் பாத்திரங்களை நீள வசனங்கள் மூலம் நீட்டி முழக்கி உள்ளார்.
முதல் பாதியில் காதல் பற்றி விளக்கும் வகையில் ‘காதல்ன்னா என்ன’ என தொடங்கும் உரையாடல், வகுப்பறையில் அமர வைத்து பாடம் எடுக்கும் உணர்வைக் கொடுக்கிறது.
சமரசமேயில்லாமல் திரை முழுவதும் அரசியல் நிரம்பிக் கிடக்கிறது. ஒரு பக்கம் கொள்கை விளக்கப் படம் போல் தோன்றினாலும் மறுபக்கம் எதிர் கருத்துடையவர்களை ஒதுக்கவிட வேண்டிய அவசியமில்லை. அவர்களையும் உள்ளடக்கியது தான் இந்த சமுதாயம் என்கிற பார்வை நன்று .
படம் முழுக்க இளையராஜாவின் பாடல்கள் பாத்திரம் போல் தோன்ற வைக்கின்றன.
படத்தின் நீளமும் பிரச்சார தொனி காட்சிகளும் ஆவணப்பட வாசனை அடிக்கும் காட்சி அமைப்புகளும்தான் நெளிய வைக்கின்றன.சில பாத்திரங்களை இன்னும் ஆழப்படுத்தி இருக்கலாம்.ஆணவப் படுகொலை சார்ந்த பாதிக்கப்பட்டவர்களின் பேட்டி, ஆவணப் பட உணர்வைக் கொடுக்கிறது.
கிஷோர்குமாரின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளில் வண்ணங்களைக் கூட்டுகிறது.தென்மாவின் இசை கதையோடு இழைகிறது.
காட்சிகளின் பின்புலத்தில் இயங்கும் கலை இயக்குநர் ஜெயரகுவின் பங்கு முக்கியமானது.
மொத்தத்தில் சில குறைகளைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் நட்சத்திரம் நகர்கிறது படம் புதிய காதல்களைச் சொல்கிற அனுபவத்தைத் தருகிறது.