‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்பட விமர்சனம்

அறிமுக இயக்குநர் ஆனந்த்  இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் நண்பன் ஒருவன் வந்த பிறகு. இந்த படத்தில் மதன் கௌரி, பவனி ஸ்ப்ரே, பின்னி ஆலிவர்,வெங்கட் பிரபு, கஃய் பாலா, இளங்கோ குமரவேல், ஆர்.ஜே. ஆனந்தி, ஆர்.ஜே. விஜய், பாலா, இர்ஃபான் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஏராளமான யூடியூபர்கள் நடித்துள்ள படம் இது.இந்த படத்திற்கு ஏ.ஹெச்.காசிப் இசையமைத்திருக்கிறார்.

ஒரு காலத்தில் காதலைப் பேசும் படங்கள் நிறைய வந்தன .பிறகு வெட்டு குத்து ரத்தம் சதை என்று வரிசை கட்டின படங்கள் .நல்லதொரு காதல் கதை வராதா என்று ரசிகர்கள் ஏங்க ஆரம்பித்தார்கள் .அப்படிப்பட்ட சூழலில் வந்துள்ள படம்தான் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு ‘ திரைப்படம்.நாயகனாக நடித்து ஆனந்த் இயக்கி உள்ளார்.
இப்படத்தை ஐஸ்வர்யா மற்றும் சுதா இணைந்து தயாரித்துள்ளார்கள்.

இந்தப் படத்தைச் சுருக்கமாக NOVP என்கிறார்கள் . படத்து நாயகனின் பாத்திரப்பெயரும் ஆனந்த் தான்.

இப்படத்தின் மீது நம்பிக்கை கொண்ட வெங்கட் பிரபு, தானே இப்படத்தை வெளியிட்டு இளைஞர்களுக்கு நம்பிக்கை  அளித்துள்ளார்.வெங்கட் பிரபு என்கிற நண்பர் ஒருவர் வந்த பிறகு இந்தப் படத்தின் விசாலம் அதிகரித்து விட்டது.அப்படி வெளியிட்ட வெங்கட் பிரபுவின் நம்பிக்கையை இயக்குநர் காப்பாற்றி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

சரி படத்தின் கதைச்சுருக்கம் என்ன? விமானத்தில் சிங்கப்பூரிலிருந்து சென்னை வரும் ஆனந்த், தனது சக பயணியான இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் தன் வாழ்க்கையில் நடந்தவற்றைப் பகிர்ந்து கொள்வதாகக் கதை ஆரம்பிக்கிறது.

படித்துவிட்டு வேலை தேடும் இளைஞராக சிரமப்படுகிறார் ஆனந்த். இருந்தாலும் பல்வேறு வேலைக்குச் சென்று முயற்சிக்கிறார். எந்த வேலையும் சரியாக அமையவில்லை. பணம் இல்லாமல் சக நண்பர்கள் சிலரால் அவமானப்படுத்தப் படுகிறார். அப்படிப்பட்ட ஆனந்த் கண்ணம்மா என்கிற பெண்ணைக் காதலிக்கிறார். பணம் செலவழித்து சிங்கப்பூர் செல்கிறார்.வேலைகள் வீடு ,நண்பர்களின் நினைவு என்று வாழ்கிறார் அங்கே . இப்படிப்பட்ட சூழலில் அவரது காதலியான கண்ணம்மா சென்னையில் இருக்கிறார் அவருக்கு இங்கே வேறொருவருடன் திருமணம் நிச்சயமாகிறது. இந்தத் தகவல் அறிந்து பணியிடத்திலிருந்த கௌரவம் சம்பளம் அனைத்தையும் விட்டுவிட்டு சென்னை வருகிறார்.

இங்கே வந்து நண்பர்களை சந்தித்தாரா? காதல் என்ன ஆனது என்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் தேடிப் பயணம் செய்வது தான் இந்தப் படத்தின் கதை.

இந்தப் படத்தில் நட்பு, காதல் ,வேலையில்லா திண்டாட்டம் ,படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத அவலம் போன்றவற்றை உணர்ச்சிகரமான கோர்வையாக்கித் தந்துள்ளார் இயக்குநர்.

இந்த உணர்வுகள் படம் பார்ப்பவர்களைத் தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது.இந்த கால பெண்களின் வருங்காலக் கணவன் பற்றிய, திருமணம் பற்றிய யதார்த்தமான எதிர்பார்ப்புகள் பேசும் வசனங்கள், காட்சிகள் படத்தில் வருகின்றன.

நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த், அவரது காதலியாக நடித்திருக்கும் பவானி ஸ்ரீ, ஆனந்தின் நண்பர்களாக நடித்திருக்கும் ஆர்ஜே விஜய், இர்பான், வில்ஸ்பட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ் ஆகியோர்  இயல்பாக பயணிக்க வேண்டும் என்ற முயற்சி அனைவரது நடிப்பிலும் தெரிகிறது.நாயகன் ஆனந்தின் அப்பாவாக  குமரவேல், அம்மாவாக விஷாலினி, பாட்டியாக  குல்லபுலி லீலா ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.சில காட்சிகளில் வந்தாலும் இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா.எம் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

நடுத்தர குடும்பத்தில் உள்ள ஒரு படித்த இளைஞன் எதிர்கொள்ளும் சிக்கல்களை தனது உணர்வுகளின் மூலம் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார் ஆனந்த்.ஒரு சராசரி தமிழ்ப் பெண்ணின் பிரதிநிதியாக வருகிறார் பவானி ஸ்ரீ.

தந்தை பாத்திரத்தில் நடித்துள்ள குமரவேல் தங்கள் துக்கங்களை, துயரங்களை மறைத்துக் கொண்டு மகன்களுக்காக உழைக்கும் நடுத்தர வர்க்கத்து அப்பாவாக வருகிறார்.அப்படிப்பட்ட விதவிதமான அப்பாக்களை நம் கண் முன் கொண்டு வருகிறார்.

நட்பு என்பது கொண்டாட்டத்திற்கு மட்டுமல்ல. தோள் கொடுக்கவும்தான் என்கிறது இப்படம்.

காதல் என்பது ஈர்ப்பு மட்டுமல்ல. பரஸ்பர புரிதல், திட்டமிடல், நம்பிக்கை காத்திருத்தல் என்று புரிய வைப்பதும்தான் என்கிறது NOVP.

மொத்தத்தில் பாசாங்கு இல்லாத காதலையும் நட்பையும் பேசுகிறது இந்தப் படம்.